Published : 02 Jun 2017 06:21 PM
Last Updated : 02 Jun 2017 06:21 PM

ஜிஎஸ்டி வரியால் வணிகர்களின் வாழ்வாதாரம் சிறப்பான இடத்தை பெறும்: வருவாய் துறை செயலர் ஹஷ்முக் ஆதியா

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி வரி சுதந்திரத்திற்கு பிறகான காலகட்டத்தில் ஒரு மிகப் பெரிய வரி சீர்த்திருத்தம், இதனால் ஏற்படப் போகும் பலன்கள் நாட்டின் வளர்ச்சிக்கும் குறிப்பாக வணிகர்களின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும் என்று மத்திய வருவாய்த் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விளக்க கட்டுரை பின் வருமாறு

” உற்பத்தி வரி, கூடுதல் உற்பத்தி வரி, மிகை சுங்க வரி, சிறப்பு மிகை வரி மற்றும் சேவைகளுக்கான சேவை வரி போன்ற வெவ்வேறான வரிகளைப் பலவிதப் பொருட்கள் மீது மத்திய அரசு விதிக்கின்றது. மதிப்புக் கூட்டு வரி(VAT), மத்திய விற்பனை வரி, கொள்முதல் வரி, பொழுதுபோக்கு வரி, லாட்டரி வரி, நுழைவு வரி முதலிய வெவ்வேறான வரிகளை மாநில அரசு விதிக்கின்றது.

இதைத் தவிர பலவகையான மேல்வரி (CESS), அல்லது கூடுதல் வரி (surcharge) போன்ற வரிகளையும் மத்திய, மாநில அரசுகள் விதிக்கின்றன. இப்போது, இந்த அனைத்து வரிகளும் அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக அனைத்துப் பொருட்கள் மற்றும் சேவைகளின் மீதும் GST வரி விதிக்கப் பட உள்ளது. ஒரு பொருளின் மீதுஎன்ன GST விதிக்கப்படுகின்றதோ, அந்த ஒற்றை வரிவிகிதம் தான் நாடு முழுவதிலும் பின்பற்றப்படும்.

மத்திய, மாநில அரசுகளால் விதிக்கப்படும் எண்ணற்ற வரிகளுக்குப் பதிலாக விதக்கபடவுள்ள இந்த ஒற்றை வரி, பலவித வரிகள் மற்றும் இரட்டை வரி விதித்தல் போன்ற பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும். மேலும் ஒருங்கிணைந்த தேசிய சந்தை ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.

நுகர்வோரைக் கருத்தில் கொண்டு, பொருட்களின் மீதான வரியைக் குறைப்பது மிகுந்த பலனைத் தரும். தற்போது வரிச் சுமை சுமார் 20 லிருந்து 30 சதவீதமாகும். GST - யை அமல் படுத்தியவுடன், இந்திய உற்பத்தியாளர்கள் உள்நாடு மற்றும் சர்வதேச சந்தையில் போட்டியிட முடியும். பொருளாதார வளர்ச்சியில் உற்சாகமானதொரு பலன் கிடைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வரி விகிதம் உள்ளிட்ட GST சம்பந்தப்பட்ட அனைத்து முக்கிய விஷயங்களிலும் GST கவுன்சில் முடிவெடுப்பதற்கு முழு அதிகாரத்தையும் அரசியலைமப்பு வழங்கியிருக்கின்றது. அனைத்துப் பொருட்கள் மீதும், 5%, 12%, 18%, 28% என்ற 4 விகிதத்தில் ஏதாவது ஒன்று வரியாக விதிக்கப்பட வேண்டும் என்ற முக்கியமான தீர்மானம் இது வரை நடந்து முடிந்த GST கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு இந்த வரி விதிப்பு பொருந்தாது. இதன் அர்த்தம், GST – யில் சில சரக்குகள் மற்றும் சேவைகள் வரிவிலக்கு பட்டியலில் இடம் பெறும் என்பதாகும். தங்கம், வெள்ளி மற்றும் நகை செய்தல் போன்றவற்றின் மீதான சிறப்பு வரிகள், இன்னும் முடிவாகவில்லை.

ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது செலுத்தப்பட்ட வரிகள் திருப்பிக் கொடுக்கப்படும். இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்குப் பொருட்களின் மீதான சுங்க வரியைத் தவிர, அந்த பொருட்களுக்கு மற்றபடி விதிக்கப்படும் அளவுக்கு GSTயும் விதிக்கப்படும். GSTயை அமல்படுத்திய பிறகு, வணிகர்களும், உற்பத்தியாளர்களும் ஒற்றை வரி செலுத்தும் முறையையே பின்பற்ற வேண்டும்.சிறு வணிகர்களுக்குப் பெரிய அளவிலான நன்மைகள் வழங்கப்பட்டுள்ளன.

தற்போது பெரும்பான்மையான மாநிலங்களில், 10 லட்சத்திற்கு மேல் வர்த்தகம் செயபவர்கள் VAT செலுத்த வேண்டும். மலைப் பாங்கான பகுதிகள் என்ற சிறப்பு பிரிவைக் கொண்ட மாநிலங்களைத் தவிர, மற்ற மாநிலங்களுக்கு இந்த வரம்பு 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ஒரு வணிகரின், வருடாந்திர வருமான 10 லட்சம் மற்றும் 20 லட்சத்திற்கு இடையிலிருந்தால், அவர் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை. மேலும், அவர் பதிவு செய்ய வேண்டிய கட்டாயமுமில்லை. VAT, சேவை வரி மற்றும் உற்பத்தி வரி எண்கள் வைத்திருக்கும் பெரும்பாலான மக்கள் GSTல் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

GSTல் ஒவ்வொரு வணிகரும் மாதம் ஒரு முறை தனது வரி விவரத்தைத் தாக்கல் செய்து, அதற்குரிய வரியையும் செலுத்த வேண்டும். சரக்குகள் மற்றும் சேவைகளின் மீது எந்த விதமான வரி செலுத்தப்பட வேண்டியிருந்தாலும், உள்ளீட்டு வாங்கப்பட்டவைகள் மீது செலுத்தப்பட்ட வரிக்கு உள்ளீட்டு வரிச் சலுகையாக ஒவ்வொரு வணிகருக்கும் கிடைக்கும்.

அனைத்து வரி விவர தாக்கல்களையும் இணையதளத்தில் செய்ய வேண்டும். GSTN - ஆல் வழங்கப்பட்ட எக்ஸெல் பக்கங்களிலேயே உங்கள் கணக்குகளை வைத்திருந்தால், அந்தக் கணக்குகளை அப்படியே வருமான வரி தாக்கலுக்கு ஆஃப்லைன் உதவியுடன் மாற்ற முடியும்.

ஒரு வணிகர் தன்னுடைய மொத்த சரக்குகளையும் சில்லரை வாடிக்கையாளரிடம் மட்டும் விற்றால்(B to C), அந்த வியாபாரி தன்னுடைய ஆண்டு வரிவிவரத்தை மிக எளிய வழியான விகிதாசார அடிப்படையில் அறிவிக்க முடியும். தொகுப்பு வரியைத் தேர்வு செய்திருக்கும் ஒரு வணிகரின் வருடாந்திர விற்றுமுதல்50 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், அந்த வணிகர் தனது மொத்த வருமானத்திற்கும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை வரிவிவரம் தாக்கல் செய்தால் போதுமானது; பிரதி மாதமும் செய்ய வேண்டிய அவசியமில்லை.

ஒரு வணிகர் மற்றொரு வணிகருக்கு விற்றால் (B to B), அவர்கள் தாங்கள் செய்யும் அனைத்து விற்பனை விலைப் பட்டியல்களின் விவரங்களையும் வரிவிவர தாக்கலில் தெரிவிக்க வேண்டும். அப்படி வணிகர்கள் தாக்கல் செய்யும் விற்பனையின் மொத்த விவரங்களை GST வலைதளம் மாதாமாதம் 10ம் தேதியன்று பிரதிபலிக்கும்.

மேலும், இவரால் வாங்கப்பட்ட மொத்த விவரங்கள், இவரிடம் வாங்குபவரின் GSTR-2ல் ‘பதிவேற்ற தானியங்கி’ யின் உதவியால் தானாகவே வெளிப்பட்டு விடும். வாங்குபவர் அதை கண்காணிக்கும் போது, அவை சரியானதாக இருக்கும் பட்சத்தில், அதை க்ளிக் செய்யும் போது, வணிகர் தாக்கல் செய்திருக்கும் மொத்த விவரங்களும் கம்ப்யூட்டரில் திரையில் தோன்றும்.

அதை ஒப்புக் கொள்வதாகக் ‘க்ளிக்’ செய்யும் போது, உள்ளீட்டு வரி வரவு மொத்த விவரங்கள் மற்றும் நிகர வரிபாக்கியுடன் சேர்த்து வாங்குபவர் செலுத்த வேண்டிய வரி பற்றிய அனைத்து விவரங்களும், GST அமைப்பில் தானாகவே தோன்றிவிடும்.

வரி பாக்கிக்கும், உள்ளீட்டு வரி வரவுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை அவர் பூர்த்தி செய்ய நேரிடும். மேலும் செலுத்த வேண்டிய வரித் தொகையை ஆன்லைனிலோ அல்லது வங்கிகள் மூலமாகவோ செலுத்தலாம். இதன் பிறகு, கணிணி மூலம் பூர்த்தி செய்யப்பட்ட GSTR-3 இறுதி வரிவிவரத் தாக்கலை வணிகர்கள் பிரதிமாதம் 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

வர்த்தகத்திற்கு வர்த்தக பரிமாற்றத்தில் இருக்கும் ‘உள்ளீட்டு வரிச் சலுகை தள்ளுபடி’ என்று நாம் அழைக்கும் இந்த ஏற்பாட்டிற்கு உள்ளீட்டு வரிச் சலுகையைத் திரும்பப் பெறுதல் என்று பொருள். பெரும்பாலான மக்கள் இதைப் பற்றி தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இந்த நடைமுறையை முழுமையாக புரிந்து கொண்டீர்களேயானால், இதற்கு உங்கள் முழு ஆதரவையும் அளிப்பீர்கள். ஏற்கனவே நான் விளக்கியபடி, நீங்கள் யாரிடமிருந்து பொருட்களை வாங்குகிறீர்களோ, அவர் 10ம் தேதியன்று தாக்கல் செய்யும் வரி விவரத்தில் பரிவர்த்தனைகள் பற்றிய விவரங்களைத் தெரிவித்தால் நீங்கள் உள்ளீட்டு வரிச் சலுகையைப் பெறலாம்.

ஒரு வேளை, தான் செய்த தாக்கலில் விற்பனை செய்யும் பொருட்களின் ஒரு விலைப்பட்டியலை இணைக்கவில்லையென்றால் 15ம் தேதியன்று செய்யப்படும் GSTR-2 என்ற அவருடைய வரிவிவரத் தாக்கலில் இணைக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். இவ்வாறு செய்வதனால், இதற்கான உள்ளீட்டு வரிச் சலுகையை நீங்கள் முழுமையாகக் கோரி கிடைக்கப் பெறமுடியும்.

அதற்குப் பிறகு உங்கள் விற்பனையாளரைத் தொடர்பு கொண்டு தன் பரிவர்த்தனையை வரி விவரத் தாக்கலில் காண்பித்தால்தான் உள்ளீட்டு வரிச் சலுகையை நீங்கள் பெற முடியும் என்பதைப் பற்றி விளக்க வேண்டும். மேலும் அடுத்த மாதத்தின் போது, நீங்கள் உள்ளீட்டு வரிச் சலுகையைத் திருப்ப வேண்டிய அவசியமிருக்காது. இதற்கான காலவரம்பு 30 நாட்களாகும்.

ஒரு வேளை அந்த வணிகர் விற்பனை செய்தப் பொருட்களின் இந்த பரிமாற்றத்தை ஒப்புக் கொள்ளாமல், தன்னுடைய வரி தாக்கலில் அதை காண்பிக்காவிட்டால், அடுத்த வரிவிவரத் தாக்கலின் போது இந்த உள்ளீட்டு வரிச் சலுகை திரும்பப் பெறப்படும். வியாபாரம் செய்யும் ஒவ்வொரு நபரும் மற்ற வணிகர்களுடன் இந்த முறையில் அணுக வேண்டியது கடமையாகும்.

அப்பொழுதுதான், உங்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வரியை அரசாங்கத்துக்குச் செலுத்த முடியும். ஒவ்வொரு வர்த்தகருக்கும் அவர்கள் செய்யும் தவறுகளின் அடிப்படையில், அவரின் இணக்கு மதிப்பீடு வெளிப்படையாக மற்ற வணிகர்களுக்குத் தெரிவிக்கப்படும்.அதன் மூலம் அவ்வாறாகத் தவறு செய்பவர்களிடத்தில் வர்த்தகம் செய்யும் போது நீங்கள் எச்சரிக்கையாக இருக்க முடியும் “

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x