Published : 29 Jan 2014 03:05 PM
Last Updated : 29 Jan 2014 03:05 PM

பிரதமர் நிகழ்ச்சியில் கேள்வி கேட்ட நபர் வெளியேற்றம்

தேசிய வக்ஃபு வளர்ச்சிக் கழக துவக்க விழாவில் பிரதமர் மன்மோகன் சிங்கை எதிர்த்து கேள்வி கேட்ட நபர் விழா அரங்கில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

டெல்லியில் தேசிய வக்ஃபு வளர்ச்சிக் கழக துவக்க விழா பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

வக்ஃபு வாரிய சொத்துகளை சிறுபான்மை சமுதாயத்தினர் வளர்ச்சிக்காக பயன்படுத்தலாம் என தேசிய வக்ஃபு வளர்ச்சிக் கழக துவக்க விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

பிரதமர் பேசி முடித்ததும் பார்வையாளர்கள் பகுதியில் இருந்து எழுந்து நின்ற ஒருவர், பிரதமரை நோக்கி கூச்சலிட்டார். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சிறுபான்மையினருக்கான நலத் திட்டங்கள் எதையுமே அரசு ஒழுங்காக செயல்படுத்துவதில்லை. எந்த திட்டத்தின் பலனும் நலிந்த நிலையில் இருக்கும் சிறுபான்மையின மக்களை சென்றடைந்ததே இல்லை. இந்த நிலையில் இதைப் போன்ற புதிய திட்டங்களுக்கான அவசியமே இல்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.

இதனை அடுத்து அந்த நபரை பாதுகாவலர்கள் அரங்கில் இருந்து அப்புறப்படுத்தினர்.

பின்னர் நிருபர்களை சந்தித்த அந்த நபர், சிறுபான்மையினர் நலத் திட்டங்களை செயல்படுத்தக் கோரி, இதுவரை பிரதமருக்கு 150-க்கும் மேற்பட்ட கடிதங்களை தான் அனுப்பியுள்ளதாகவும், ஆனால், அவற்றுக்கான எந்த பதிலும் தனக்கு கிடைக்கவில்லை என்றும், குறைந்தபட்சம் கடிதம் கிடைக்கப் பெற்றதற்கான அத்தாட்சி கூட அனுப்பப்படவில்லை என்றும் கூறினார்.

பிரதமரை எதிர்த்து கேள்வி கேட்ட அந்த பெயர் ஃபஹிம் பெய்க், வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாபராபாத் பகுதியை சேர்ந்த டாக்டர் என்பதும் தெரிய வந்துள்ளது. அவர் ஒரு சமூக ஆர்வலர் என்றும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x