Published : 24 Dec 2013 11:27 AM
Last Updated : 24 Dec 2013 11:27 AM

ஏ.கே.கங்குலி மீது போலீஸில் புகார்: உரிய நேரத்தில் முடிவு செய்வேன் -  பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞர் தகவல்

முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி மீது காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளிப்பது தொடர்பாக உரிய நேரத்தில் முடிவு எடுப்பேன் என்று பெண் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இணையத்தில் தனது வலைப்பூவில் கருத்து தெரிவித்துள்ள அவர், “உரிய நேரத்தில் உரிய முடிவை எடுக்கும் தெளிவு எனக்கு இருக்கிறது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இது தொடர்பாக சுயமாக முடிவு எடுக்க எனக்குள்ள உரிமையை அனைவரும் மதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

தன்னிடம் பணிபுரிந்த பெண் வழக்கறிஞரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலிக்கு எதிராக புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரித்த உச்ச நீதிமன்ற 3 நீதிபதிகள் குழு, கங்குலி மீதான குற்றச்சாட்டுக்கு போதிய முகாந்திரம் உள்ளது என தெரிவித்தது.

இதற்கு மறுப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவத்துக்கு, ஏ.கே. கங்குலி கடிதம் எழுதியிருந்தார். அதில், “நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நீதிபதியாக இருந்தபோது, சில அதிகாரம் மிக்க சக்திகளுக்கு எதிராக வழக்குகளில் தீர்ப்பு அளித்திருக்கிறேன். அதன் காரணமாக, எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இணையத்தில் தனது வலைப்பூவில் பெண் வழக்கறிஞர் கூறியிருப்பதாவது: “இந்த சம்பவத்தை அரசியலாக்கி வதந்திகளை பரப்பும் செயலில் ஈடுபடுவோர், தீய எண்ணத்துடன் இதை மேற்கொள்கின்றனர். இதை இருட்டடிப்பு செய்வதன் மூலம் விசாரணையிலிருந்து தப்பிவிடலாம் என சிலர் நினைக்கின்றனர். உரிய நேரத்தில் உரிய முடிவை எடுக்கும் தெளிவு எனக்கு இருக்கிறது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இது தொடர்பாக சுயமாக முடிவு எடுக்க எனக்குள்ள உரிமையை அனைவரும் மதிக்க வேண்டும். எனது வாக்குமூலங்கள் அனைத்தும் பொய் எனக் கூறுபவர்கள், என்னை மட்டுமல்ல உச்ச நீதிமன்றத்தையே மதிக்கவில்லை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கல்லூரியில் சட்டப்படிப்பு மாணவியாக இருந்த நான், ஏ.கே.கங்குலியிடம் பயிற்சி பெறுவதற்காக அவருக்கு கீழ் பணிபுரிந்தேன். அப்போது அவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தொடர்பாக, பயிற்சி முடிவடைந்து கல்லூரிக்குத் திரும்பியவுடன் பேராசிரியர்களிடம் தெரிவித்தேன்.

கல்லூரி வளாகத்தில் அதுபோன்ற சம்பவம் நிகழ்ந்திருந்தால்தான் நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியும் என்று அவர்கள் கூறிவிட்டனர். பயிற்சி காலத்தில் நடந்தது குறித்து எதுவும் செய்ய முடியாது. காவல் நிலையத்தில் தான் புகார் கூற வேண்டும் என்று அவர்கள் அறிவுரை கூறினர். ஆனால், தயக்கம் காரணமாக போலீஸாரிடம் புகார் தெரிவிக்கவில்லை.

அதே சமயம், ஒருவரின் பதவி, அந்தஸ்தை வைத்து அவரை நம்பிவிடக்கூடாது. அதற்கும், அவர்களின் ஒழுக்க நெறிமுறைகளுக்கும் எந்தவித தொடர்பும் இருக்காது என்று சட்டக்கல்லூரி மாணவிகளை எச்சரிக்கும் விதமாக, எனது வலைப்பூவில் இந்த சம்பவம் குறித்து எழுதினேன். கடந்த நவம்பர் 18-ம் தேதி நீதிபதிகள் குழு முன்னிலையில் வாக்குமூலத்தை அளித்தேன். அந்த வாக்குமூலத்தில் இடம்பெற்ற தகவல்களைத்தான் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங்கிற்கு நவம்பர் 29-ம் தேதி அனுப்பிய பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருந்தேன். தொடர்ந்து உச்ச நீதிமன்றம் அமைத்த குழு மீதும், எனது வாக்குமூலம் தொடர்பாகவும் சிலர் சந்தேகம் தெரிவித்து வந்தனர்.

அதனால்தான், எனது வாக்குமூலத்தை வெளியிடுமாறு இந்திரா ஜெய்சிங்கிடம் கேட்டுக் கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார். பெண் வழக்கறிஞரின் இந்த கருத்து குறித்து ஏ.கே.கங்குலியிடம் பி.டி.ஐ. செய்தியாளர் கேட்டபோது, “இதைப் பற்றி எதுவும் கூற விரும்பவில்லை” என்றார்.

பதவி விலக கோரிக்கை:

இதற்கிடையே பாலியல் புகாரில் சிக்கியுள்ள ஏ.கே.கங்குலி, மேற்கு வங்க மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் எம்.பி. சவுகதா ராய் கூறுகையில், “உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவத்துக்கு எழுதிய கடிதத்தில் ஏ.கே.கங்குலி தெரிவித்துள்ள கருத்துகளைப் பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை. தார்மிக அடிப்படையில் மனித உரிமை ஆணையத் தலைவர் பதவியிலிருந்து ஏ.கே.கங்குலி விலக வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை” என்றார். ஏ.கே.கங்குலியை பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என கோரி, ஓய்வுபெற்ற நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் கோல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

முழுமையான விசாரணை தேவை:

ஏ.கே.கங்குலி மீது நடவடிக்கை எடுக்கும் முன், முழுமையான விசாரணையை நடத்த வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: “இந்த விவகாரத்தில் உண்மையை அறிய பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஏ.கே.கங்குலியின் தரப்பு வாதத்தை கேட்க வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்கும் முன்பு முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றிருந்தால் மட்டுமே மனித உரிமை ஆணையத் தலைவரை பதவியில் இருந்து நீக்க முடியும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x