Published : 20 Aug 2016 10:12 AM
Last Updated : 20 Aug 2016 10:12 AM

அம்மா திட்டியதால் கோபித்துக்கொண்டு அப்பாவை பார்க்க 450 கிமீ சைக்கிளில் பயணம்: உத்தரப் பிரதேசத்தில் 6-ம் வகுப்பு சிறுவனால் பரபரப்பு

உத்தரப் பிரதேச மாநிலம் சதார்பூர் கிராமத்தில் ரிதேஷ்(12) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற சிறுவன் தன் அம்மாவுடன் வசிக்கிறான். 6-ம் வகுப்பு படிக்கிறான். இவனது அம்மா கிராமத்துக்கு வெளியில் லாண்டரி கடை வைத்துள்ளார். கடந்த 2-ம் தேதி அம்மாவை பார்க்க ரிதேஷ் கடைக்குச் சென்றான். ஆனால், மதிய உணவை கொண்டு செல்ல மறந்துவிட்டான்.

அதனால் கோபம் அடைந்து ரிதேஷை அம்மா திட்டினார். மேலும், வீட்டுக்குச் சென்று உணவு கொண்டு வரும்படி கூறினார். அதனால் மீண்டும் சைக்கிளில் வீட்டுக்குத் திரும்பினான். ஆனால், அம்மா மீது கோபத்தில் இருந்த ரிதேஷ், வீட்டுக்கு செல்லாமல் சைக்கிளை லக்னோவை நோக்கி ஓட்ட ஆரம்பித்தான். அம்மா திட்டியதைப் பற்றி அப்பாவிடம் சொல்ல வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் சைக்கிளை மிதிக்கத் தொடங்கினான் ரிதேஷ்.

இரவு நேரமாகியும் ரிதேஷ் வீட்டுக்கு வராததால், பயந்துபோன அம்மா, போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் கடத்தல் வழக்கு பதிவு செய்து மாநிலம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு ரிதேஷின் படத்தை அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். தகவல் அறிந்து மறுநாள் லக்னோவில் இருந்து அவனது தந்தையும் சதார்பூர் கிராமத்துக்கு வந்துவிட்டார்.

சதார்பூர் கிராமத்தில் இருந்து புறப்பட்ட சிறுவன் தொடர்ந்து 4 நாட்கள் சைக்கிளிலேயே லக்னோ நோக்கி சென்று கொண்டிருந்தான். கையில் இருந்த சொற்ப பணத்தில் ஆங்காங்கே உணவு வாங்கி சாப்பிட்டுள்ளான். இரவில் சாலை யோரம் உள்ள கடைகளுக்கு வெளியில் தூங்கி உள்ளான்.

சர்தார்பூர் கிராமத்தில் இருந்து 450 கி.மீ. தூரத்தில் உள்ளது லட்சுமிபூர் கெரி. ஆகஸ்ட் 6-ம் தேதி அந்த இடத்தை அடைந்தான் ரிதேஷ். அங்கு செல்லும்போது சைக்கிள் டயர் பஞ்சர் ஆகிவிட்டது. கையில் இருந்த பணமும் செலவாகி விட்டது. லட்சுமிபூர் கெரியில் இருந்து லக்னோ இன்னும் 150 கி.மீ. தூரம் உள்ளது. அப்பாவை எப்படியும் பார்த்து அம்மா திட்டியதை கூறிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளான் ரிதேஷ்.

அதனால், வழியில் போவோர் வருவோரிடம் சாப்பிடுவதற்கும் பஞ்சர் போடுவதற்கும் பணம் கேட்டுள்ளான். அவன் மீது சந்தேகப்பட்ட ஒருவர் போலீஸுக்கு தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து ரிதேஷை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது எல்லா விவரங்களையும் ரிதேஷ் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக ரிதேஷ் பற்றிய தகவல்களை நொய்டா போலீஸாருக்கு தெரிவித்தனர். இதுகுறித்து லட்சுமிபூர் போலீஸார் கூறும்போது, ‘‘மழையில் நனைந்துகொண்டே சைக்கிள் ஓட்டியுள்ளான். அம்மா திட்டியதால் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தான். 12 வயது சிறுவனால் செய்ய முடியாத ஒரு விஷயத்தை (450 கிமீ தூரம் சைக்கிளில் பயணம்) ரிதேஷ் செய்துள்ளான். சராசரியாக ஒரு நாளைக்கு 100 கி.மீ. தூரம் சைக்கிளை ஓட்டியுள்ளான்’’ என்றனர்.

சைக்கிள் பஞ்சர் ஆகாமல் இருந்திருந்தால் நான் லக்னோவை சென்றடைந்திருப்பேன் என்று போலீஸாரிடம் ரிதேஷ் கூறியுள்ளான். ‘‘மறுபடியும் இதுபோல் வீட்டை விட்டு வரக்கூடாது’’ என்று ரிதேஷுக்கு அறிவுரை கூறி, மறுநாள் சொந்த ஊருக்கு லட்சுமிபூர் போலீஸார் அனுப்பி வைத்தனர்.

அதன்பின்னர் ரிதேஷ் வழக்கம் போல் பள்ளிக்கு செல்கிறான். அவனது தந்தையும் லக்னோவில் வேலைக்கு செல்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x