Last Updated : 09 Apr, 2017 12:50 PM

 

Published : 09 Apr 2017 12:50 PM
Last Updated : 09 Apr 2017 12:50 PM

ரூ.13-க்கு மூன்று வேளை உணவு: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசின் அன்னபூர்ணா திட்டம்

உத்தரபிரதேச மாநிலத்தில் ஏழைகள் பயன்பெறும் வகையில் ‘அன்னபூர்ணா போஜ்னாலயா’ திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. இங்கு ரூ.3-க்கு சிற்றுண்டி, ரூ.5-க்கு மதிய உணவு வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் ஏழைகளுக்குத் தரமான சத்துள்ள உணவு கிடைக்க, ‘அம்மா உணவகம்’ திறக்கப்பட்டது. இதனால் ஏராளமான ஏழைகள் பயன்பெறுகின்றனர். இத்திட்டத் தைப் பின்பற்றி ராஜஸ்தானில் ஆளும் பாஜக அரசும் ரூ.5-க்கு சிற்றுண்டி, ரூ.8-க்கு மதிய உணவு, இரவு உணவு வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியது. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்திலும் மலிவு விலை உணவகங்களை தொடங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளார்.

இத்திட்டத்தை வடிவமைக்கும் பணியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் சுரேஷ் கன்னா மற்றும் அதிகாரிகள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். வரும் 12-ம் தேதி திட்ட அறிக்கையை முதல்வர் ஆதித்யநாத்திடம் சமர்ப்பிக்க உள்ளனர். அன்றைய தினமே அவர் அறிக்கையை ஆராய்ந்து பார்த்து ஒப்புதல் வழங்க உள்ளார். அதன்பின் விரைவில் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டு விடும்.

இத்திட்டத்துக்கு, ‘அன்னபூர்ணா போஜ்னாலயா’ என்று பெயர் வைக்கப்பட உள்ளது. இங்கு காலை சிற்றுண்டி ரூ.3, மதியம், இரவு உணவு ரூ.5-க்கு வழங்கப்படும். ரூ.13க்கு மூன்று வேளை உணவு வழங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக லக்னோ, கான்பூர், காசியாபாத், கோரக்பூர் ஆகிய இடங்களில் உணவகங்கள் திறக்கப்பட உள்ளன. அதன்பின் மாநிலம் முழுவதும் 200 மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும்.

திட்ட அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பிக்கும்போது, மாநிலத்தில் மாவட்டந்தோறும் பசு வளர்ப்பு கூடங்கள் தொடங்கும் திட்டத்தையும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x