Last Updated : 18 Feb, 2016 11:31 AM

 

Published : 18 Feb 2016 11:31 AM
Last Updated : 18 Feb 2016 11:31 AM

கண்ணய்யா மீது தொடரும் தாக்குதல்: பாதுகாப்பு கருதி வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வாய்ப்பு



ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ) மாணவர் தலைவர் கண்ணய்யா குமார் இரண்டாவது முறையாக புதன்கிழமை பட்டியாலா நீதிமன்றத்தில் தாக்கப்பட்டார். இதில், உச்ச நீதிமன்ற தலையீடு காரணமாக இவர் மீதான வழக்கின் விசாரணை வேறு நீதிமன்றத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் நினைவு தினம் அனுசரித்த ஜே.என்.யூ.வில் தேசவிரோத கோஷங்கள் எழுப்பியதாக கண்ணய்யா உட்பட 7 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள கண்ணய்யா, கடந்த செவ்வாய்கிழமை அன்று பட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்ட போது வழக்கறிஞர்களின் ஒரு பிரிவினர் மற்றும் டெல்லியின் பாஜக எம்.எல்.ஏ ஆகியோரால் தாக்கப்பட்டார். இந்த வழக்கை பார்வையிட வந்த பிற மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் தலையிட்ட உச்ச நீதிமன்றம், கண்ணய்யாவின் பாதுகாப்பு குறித்து அறிக்கை அளிக்குமாறு தம் மூத்த வழக்கறிஞர்கள் ஆறு பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்திருந்தது. இவர்களுடன் டெல்லி உயர் நீதிமன்ற ரிஜிஸ்டர் ஜெனரலும் உறுப்பினராக இருந்தார். இவர்கள், பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் ஆய்வு செய்து உச்ச நீதிமன்றத்திடம் இன்று அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். இதில், வளாகத்தில் பாதுகாப்புக்காக போலீஸார் அமர்த்தப்பட்டிருந்தாலும், அங்கு ஆஜராகும் குற்றவாளிகளுக்கு போதுமான பாதுகாப்பு கிடைக்க வாய்ப்பில்லை என குறிப்பிட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால், கண்ணய்யா உட்பட ஜே.என்.யூ மாணவர்கள் மீதான தேசவிரோத வழக்கின் விசாரணை வேறு நீதிமன்றம் அல்லது டெல்லிக்கு வெளியே உள்ள நீதிமன்றத்திற்கு மாற்ற வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது.

டெல்லியின் பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் நடந்த பிரச்சனைக்கு பின் குற்றவாளிகளுக்கு போதுமான பாதுகாப்பு கேட்டு ஜே.என்.யூவின் முன்னாள் மாணவர் என்.டி.ஜெயக்குமார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செலமேஸ்வர் மற்றும் அபய் மனோகர் சாப்ரே ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரணைக் குழுவிற்கான உத்தரவை இட்ட போது, "இந்த சூழலில் வழக்கின் விசாரணையை தொடர முடியுமா?" என தம் ஐயப்பாட்டை எழுப்பியிருந்தனர். இந்த வழக்கில் டெல்லி போலீஸாரும் உச்ச நீதிமன்றத்தில் தம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.

இதற்கிடையே, புதன்கிழமை மீண்டும் ஆஜராக்கப்பட்ட கண்ணய்யா மீது அதே வழக்கறிஞர்கள் கும்பல் மற்றொரு தாக்குதல் நடத்தி உள்ளனர். அதன் விரிவான செய்தி:

கண்ணய்யாவுக்கு மார்ச் 2 வரை நீதிமன்ற காவல்:

நீதிமன்ற வளாகத்தில் தாக்கப்பட்டதால் பரபரப்பு

- பிடிஐ

தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமாரை மார்ச் 2-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க பாட்டி யாலா ஹவுஸ் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

கடந்த 9-ம் தேதி டெல்லி ஜவஹர் லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) வளாகத்தில் இந்தியாவுக்கு எதிராக முழக்கம் எழுப்பிய தாகக் கூறி கண்ணய்யாவை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கண்ணய்யாவின் போலீஸ் காவல் முடிந்ததையடுத்து, மிகுந்த பாதுகாப்புடன் நேற்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள் முழக்கங் களை எழுப்பினர்.

டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிபதி லவ்லீன் முன்பு இந்த வழக்கு நேற்று மதியம் 3 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கண்ணய்யா சார்பில் 6 வழக்கறிஞர் கள், ஜேஎன்யூ பேராசிரியர் ஒருவர், 5 செய்தியாளர்களுக்கு மட்டுமே நீதிமன்ற அறையில் அனுமதி வழங்கப்பட்டது.

விசாரணையின்போது, உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தபோதும் போலீஸார் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட தவறி விட்டனர். இதனால் கண்ணய்யா நீதிமன்ற வளாகத்தில் தாக்கப்பட்டார் என அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

போலீஸ் தரப்பில் ஆஜரான விசாரணை அதிகாரிகள், கண்ணய் யாவை நீதிமன்றக் காவலில் அனுப்பலாம் என்று தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மார்ச் 2-ம் தேதி வரை அவரை நீதி மன்றக் காவலில் வைக்க உத்தர விட்டார். அத்துடன் கண்ணய் யாவை பாதுகாப்புடன் அழைத்துச் செல்லவும், சிறையில் பாதுகாப்பு வழங்கவும் அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இது தொடர்பான வழக்கு, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அங்கிருந்த பத்திரிகையாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் தாக்கப்பட்டனர். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நேற்று காலை விசாரணைக்கு வந்தது. மீண்டும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருப் பதற்காக பாட்டியாலா நீதிமன்ற வளாகத்துக்குள் வெளிநபர்கள் நுழைவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதற்கிடையே, நீதிமன்ற வளாகத்தில் கண்ணய்யா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இதையடுத்து, கபில் சிபல், ராஜீவ் தவன், துஷ்யந்த் தவே, ஏ.டி.என்.ராவ், அஜித் சின்ஹா மற்றும் ஹரின் ராவல் ஆகிய 6 மூத்த வழக்கறிஞர்களை நீதிமன்ற ஆணையர்களாக நியமித்தது. பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்தில் நடந்த சம்பவம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கு மாறு உத்தரவிட்டது.

அந்தக் குழு 3.25 மணிக்கு பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்துக்கு வந்தது. நீதிமன்ற வளாகத்தில் என்ன நடந்தது என அந்த ஆணையர் கள் குழு கண்ணய்யாவிடமும் அவரது வழக்கறிஞர்களிடமும் கேட்டது.

அப்போது, தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கண்ணய்யா தெரிவித்தார். இதையடுத்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும் போதிய பாதுகாப்பு ஏற் பாடுகளை செய்யாதது ஏன் என்று டெல்லி போலீஸ் துணை ஆணையர் நர்வாலிடம் ஆணையர்கள் கேள்வி எழுப்பினர். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தபோதும் ஒரு கும்பல் கண்ணய்யா மீது தாக்குதல் நடத்தியது. இதில் காவலர் ஒருவரும் காயமடைந்தார் என்று அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, ஆணையர்கள் குழு உச்ச நீதிமன்றத்தில் அறிக் கையை சமர்ப்பித்தது. அதில், “பாட்டியாலா நீதிமன்ற வளாகத் தில் முன் எப்போதும் இல்லாத வகையில் பதற்றம் காணப்பட்டது. போதிய பாதுகாப்பு வழங்க போலீஸார் தவறி விட்டனர். தன் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்ட கண்ணய்யா குமார் தெரிவித்தார். போலீஸ் பாதுகாப்பு இல்லாவிட் டால் நாங்களும் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்போம்” என கூறப்பட்டுள்ளது.

நேற்று மதியம் 1.30 மணியள வில், டெல்லி பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தினுள் வழக்கறிஞர்கள் உடையில் வந்த சிலர் இந்திய கொடியை ஏந்தியபடி வந்தே மாதரம், வந்தேமாதரம் என கோஷ மிட்டுள்ளனர். பின்னர் அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவரையும் ஜே.என்.யூ மாணவர் ஒருவரையும் தாக்கியுள்ளனர்.

கண்ணய்யா குமார் நீதிபதியிடம் கூறும்போது, “நான் இந்தியன். என் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால் தண்டனையை ஏற்கத் தயார்” என்றார். இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய உள்துறை செயலாளர் மற்றும் டெல்லி காவல் துறை ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x