Published : 20 Feb 2017 10:08 AM
Last Updated : 20 Feb 2017 10:08 AM

மும்பை அருகே சீருடை அணிந்து, புத்தக பையை சுமந்தபடி 60 வயதில் பள்ளிக்கு செல்லும் பாட்டிகள்

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பள்ளிக் குழந்தை களைப் போல, 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் முதுகில் புத்தக பையை மாட்டிக் கொண்டு தினமும் பள்ளிக்குச் செல்கின்றனர்.

மும்பையை அடுத்த தானே பகுதியில் உள்ள பங்கனே கிராமத்தில் ஒரு சிறப்பு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 60 முதல் 90 வயதுக்குட்பட்ட சுமார் 30 பெண்கள் பயின்று வருகின்றனர். இவர்கள், இளஞ்சிவப்பு நிற சீருடை அணிந்துகொண்டு, பலகை, பலபம் ஆகியவை அடங்கிய பையை மாட்டிக்கொண்டு தினமும் பள்ளிக்குச் செல்கின்றனர்.

பள்ளிக்கூடங்களைப் போலவே இறை வணக்கத்துடன் வகுப்புகள் தொடங்குகின்றன. இங்கு குழந்தைகளுக்கான பாடல்கள், அடிப்படை கணிதம், மராத்தி எழுத்துகள் மற்றும் சரியான உச்சரிப்பு உள்ளிட்ட தொடக்கக் கல்வி கற்றுத் தரப்படுகிறது.

வேளாண் தொழிலை முதன்மையாகக் கொண்ட இந்த கிராமத்தைச் சேர்ந்த அனைத்து பாட்டிகளும் கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்தனர். இதை அறிந்த யோகேந்திர பங்கர் (45), மோதிராம் அறக்கட்டளையுடன் இணைந்து இந்தப் பள்ளியை நடத்தி வருகிறார். இவர் அந்த கிராமத்தின் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இதுகுறித்து பங்கர் கூறும்போது, “என்னுடைய முயற்சியால் இந்த கிராமம் 100 சதவீதம் கல்வியறிவு பெற்றுள்ளது. மேலும் இவர்கள் மத்தியில் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது” என்றார்.

இதுகுறித்து இந்தப் பள்ளியில் பயிலும் காந்தா கூறும்போது, “முதலில் பள்ளிக்கு வர தயங்கினேன். என்னைப் போன்ற பெண்கள் படிப்பதை அறிந்த பிறகு பள்ளியில் சேர்ந்தேன். இப்போது எனது தாய் மொழியில் (மராத்தி) எழுதப் படிக்க கற்றுக்கொண்டேன்” என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x