Last Updated : 22 Jun, 2015 11:09 AM

 

Published : 22 Jun 2015 11:09 AM
Last Updated : 22 Jun 2015 11:09 AM

யோகாவை விற்பனை பொருளாக்கி விடாதீர்கள்: மோடி எச்சரிக்கை

"யோகாவை விற்பனை பொருளாக்கி விடாதீர்கள். வியாபார நோக்கில் யோகாவை பயன்படுத்தினால், பாரம்பரியமான ஒரு கலைக்கு மிக பெரிய பாதிப்பு ஏற்பட்டுவிடும்" என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்தார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, டெல்லியில் முதல் முறையாக 2 நாள் 'சர்வதேச யோகா மாநாடு' நேற்று தொடங்கியது. இதில் 26 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் யோகா கலைஞர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து பேசியதாவது:

நம்மிடம் உள்ள பேராசை, வன்முறை, சண்டை, சச்சரவுகள் போன்றவற்றை விட்டொழிக்கும் வழிதான் யோகா. மேலும், சிறந்த உடல்நலத்தை பேணவும், குழு மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளவும், சீரான சூழலை உருவாக்கவும் யோகா பெரிதும் உதவும். யோகா என்பது விற்பனை பொருள் அல்ல. யோகா என்பது ஒரு கம்பெனியின் 'பிராண்ட்' அல்ல. இதற்கு தனிப்பட் ஒருவர் சொந்தம் கொண்டாட முடியாது.

இந்தியாவில் மக்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், மனதுடனும் சிறந்து விளங்க முன்னோர்களால் பரிசாக கொடுக்கப்பட்டதுதான் யோகா. அது தனிப்பட்ட ஒருவருக்கோ, ஒரு சமூகத்துக்கோ அல்லது ஒரு நாட்டுக்கோ சொந்தமானது அல்ல. யோகா உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கானது. இதை விற்பனை பொருளாக்கி விடாதீர்கள். அப்படி செய்தால், யோகாவுக்கு மிகப்பெரும் தீங்கு ஏற்பட்டு விடும்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், ‘தூய்மையான நெய்’ என்ற விளம்பரங்கள் இல்லை. இப்போது இருக்கிறது. ஏனெனில் அங்கு பணம் இருக்கிறது. வர்த்தகமாகி விட்டது. யோகா விஷயத்தில் இதுபோல் ஆகிவிட கூடாது. ‘நான் சொல்லி தரும் யோகாதான் சிறந்தது. மற்றதெல்லாம் வீணானது’ என்ற சொற்களை நாம் கேட்கும் நிலை வந்துவிடக் கூடாது. இது வர்த்தகத்துக்குரியதோ அல்லது அமைப்போ கிடையாது. இது மனதை ஒழுங்குப்படுத்தும் கலை.

நல்ல மனிதர்களாக விளங்குவதற்கு இந்திய நாடு தந்த பெருங்கொடைதான் யோகா. அதை இப்போது வெளிநாடுகளிலும் பலர் பின்பற்றுகின்றனர். அதை நாம் பாராட்ட வேண்டும், வரவேற்க வேண்டும். யோகா உலகத்துக்கு சொந்தமானது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மேலும், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்திய அஞ்சல் துறை கொண்டு வந்த 5 ரூபாய் சிறப்பு அஞ்சல் தலையையும், நிதித் துறை அமைச்சகம் கொண்டு வந்த ரூ.10, ரூ.100 மதிப்புள்ள நாணயங்களையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x