Last Updated : 17 Feb, 2017 09:50 AM

 

Published : 17 Feb 2017 09:50 AM
Last Updated : 17 Feb 2017 09:50 AM

பிரதமர் நரேந்திர மோடி பொய் வாக்குறுதி அளிக்கிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

உ.பி.யின் லெகார்பூர் சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட சீதாபூரில் ராகுல் காந்தி நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால் ஏழைகள் படும் சிரமங்கள் குறைந்தபாடில்லை.

இந்தியாவில் தயாரிப்போம் என்கிறார் பிரதமர். ஆனால் நாம் பயன்படுத்தும் செல்போன்கள் கூட சீனாவில் தயாரிக்கப்பட்டவையாக உள்ளன. இந்தியப் பணம் சீனாவுக்கு செல்கிறது. ஆனால் இந்தியப் பொருட்களை சீனாவில் விற்க நாம் விரும்புகிறோம்.

பிரதமர் மோடியின் ஆட்சியில் புதிய வேலைவாய்ப்புகள் இல்லை. தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி, ஏழைகளின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்தப்படவில்லை. ஆனால் 50 தொழில் நிறுவனங்கள் மட்டும் பலனடையும் வகையில் ரூ.1.40 லட்சம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்தப் பணத்தை விவசாயிகள், சிறு தொழில்களின் மேம்பாட்டுக்கு பயன்படுத்தியிருக்கலாம்.

பிரதமர் நரேந்திர மோடி பொய் வாக்குறுதிகளை அளிக்கிறார். வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பது இந்தப் பொய் வாக்குறுதிகளில் ஒன்றாகும்.

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ் வாதி காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் வாக்களித்தால் உத்தமப் பிரதேசமாக மாற்றப்படும். போட்டித் தேர்வுகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் இலவசப் பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x