Last Updated : 06 Jan, 2017 08:03 PM

 

Published : 06 Jan 2017 08:03 PM
Last Updated : 06 Jan 2017 08:03 PM

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம்: ஸ்பெக்ட்ரம் விற்பனை, உரிமை மாற்றத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை

ஏர்செல் நிறுவனத்தின் 2ஜி உரிமத்தை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றம் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது. ஏர்செல் நிறுவனத்தின் அதிக பங்குகளை வாங்கியுள்ள மேக்ஸிஸ் நிறுவனத் தலைவர் அனந்த கிருஷ்ணன் மற்றும் இயக்குநர் அகஸ்டஸ் ரால்ப் மார்ஷல் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் ஏர்செல் நிறுவனத்தின் 2ஜி உரிமத்தை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

ஏர்செல் – மேக்ஸிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் மலேசியாவை சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத் தலைவர் அனந்தகிருஷ்ணனை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அனந்த கிருஷ்ணனும் மார்ஷலும் டெல்லி நீதிமன்றத்தின் முன் ஆஜராகவில்லையெனில் உரிமத்தை ரத்து செய்ய மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளதாக நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் ஏர்செல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமத்தை மற்ற நிறுவனத்துக்கு மாற்றக்கூடிய வழிகளை ஆராய வேண்டும் என்றும் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் எப்படி மாற்றுவது என்பதையும் ஆராயும்படி உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் டெல்லி நீதிமன்றம் முன்பு அனந்த கிருஷ்ணன் மற்றும் மார்ஷல் ஆகிய இருவரும் இனி ஆஜராகவில்லையெனில் இந்த பரிந்துரையை அமல்படுத்த உத்தரவிடப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பரிந்துரையை அமல்படுத்தும் பட்சத்தில் இழப்பு ஏற்பட்டால் அதற்காக வழக்கு தொடர முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்தியாவின் பொது சொத்தை பயன்படுத்தும் இவர்கள் நீதிமன்றத்துக்கு வராததை ஏற்றுக்கொள்ள முடியது. நீதிமன்ற உத்தரவை இந்தியா மற்றும் மலேசியாவில் இருக்கும் இரு முக்கிய நாளிதழ்களில் மத்திய அரசு வெளியிட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது.

மனுதாரர் பொதுநல வழக்கு மையம் கூறும் குற்றச்சாட்டு என்ன?

அதாவது ஏர்செல்-மேக்சிஸ் நிறுவனம் “நாட்டின் இயற்கை வளமான, மக்களுக்குச் சொந்தமான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை ஏர்செல்-மேக்சிஸ் நிறுவனம் பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு விரைவில் விற்று விட முயற்சி செய்து வருகிறது. இதன் மூலம் பெரிய அளவில் ஆயிரம் கோடிக்கணக்கான ரூபாய்களுடன் சந்தையிலிருந்து வெளியேற முயற்சிகள் நடக்கிறது, இதனை சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு தடுக்க வேண்டும்.

ஏர்செல்-பார்தி ஏர்டெல் மற்றும் ஏர்செல்-ரிலையன்ஸ் ஒப்பந்தம் ஆகியவை அனுமதிக்கப்பட்டால் சட்டத்தின் பிடியிலிருந்து ஏர்செல்-மேக்சிஸ் நிறுவனம் நழுவி ஆயிரம் கோடிக்கணக்கான ரூபாய்களுடன் தலைமறைவாகி விட அனுமதிப்பதாகும்” என்று தன் மனுவில் கூறியுள்ளது.

இதனையடுத்தே ஸ்பெக்ட்ரம் விற்பனை மற்றும் உரிமை மாற்றத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x