Last Updated : 06 Jun, 2017 11:10 AM

 

Published : 06 Jun 2017 11:10 AM
Last Updated : 06 Jun 2017 11:10 AM

காஷ்மீர் தற்கொலைப்படை தாக்குதலை முறியடிக்க உதவிய தெரு நாய்

காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் 4 தீவிரவாதிகளின் தற்கொலைப் படைத் தாக்குதலை சிஆர்பிஎஃப் படையினர் முறியடிக்க தத்தெடுக்கப்பட்ட தெரு நாய் ஒன்று உதவியிருக்கிறது.

இதுகுறித்து 'தி இந்து'விடம் (ஆங்கில நாளிதழ்) பேசிய தினேஷ் ராஜா என்ற 25 வயது காவலர், ''சம்பல் பகுதியில் அமைந்திருந்த சிஆர்பிஎஃப் படையின் 45-வது பிரிவு வாயிலில் நான் பாதுகாப்புக்காக நின்றிருந்தேன். நூற்றுக்கணக்கான அதிகாரிகள் உள்ளே இருந்தனர்.

அப்போது அதிகாலை 3 மணிக்கு அங்கிருந்த நாய் ஒன்று பலமாகக் குரைக்க ஆரம்பித்தது. சாலையை ஒட்டி அமைந்திருந்த புதர்களில் சந்தேகப்படும்படியான அசைவுகளை அது பார்த்திருக்கக் கூடும்.

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த என்கவுன்ட்டர்

நாயின் குரைப்பை நாங்கள் கேட்டதும், சாலையின் குறுக்கே நெருப்பு வந்தது. அதைப் பார்க்கும்போது தீவிரவாதிகள் பயந்துவிட்டதை உணர்ந்தோம். புதர்களுக்குள் மறைந்திருந்த இருவர் மீதும் சுட்டேன். மணிக்கோபுரத்தைக் காவல் காத்துக்கொண்டிருந்த என்னுடைய சக ஊழியர் ப்ரஃபுல்லா குமாரும் அவர்களை நோக்கிச் சுட்டார்.

முதல் ரவுண்டின் முடிவில் 2 தீவிரவாதிகள் காயமடைந்தனர். ஆனால் தற்கொலைப்படைத் தாக்குதல் எண்ணத்தோடு அவர்கள் வந்ததால், அவர்கள் பின்வாங்காமல் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டனர். முடிவில் அவர்கள் கொல்லப்பட்டனர்'' என்றார்.

தாக்குதலின் இடையில் மின்சாரத் தடை

இதுகுறித்துப் பேசிய சிஆர்பிஎஃப் கமாண்டர் இக்பால் அகமது, ''ஒரு மணி நேரத்துக்கும் மேலாக என்கவுன்ட்டர் நீடித்தது. தாக்குதல் நடைபெறும்போது எதிர்பாராத விதமாக மின்சாரமும் போய்விட்டது. அப்போது மீதமிருந்த இரு தீவிரவாதிகளும் முகாமை நோக்கிச் சுடத் தயாராகி விட்டனர்.

எங்களின் விரைவு எதிர்வினைக் குழு உடனடியாக செயல்பட்டது. நாங்கள் நெருப்பைப் பற்ற வைத்து வெளிச்சத்தை பரப்பச் செய்தோம். அதன்மூலம் இருட்டில் தீவிரவாதிகள் தப்பிச் சென்று விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம்'' என்கிறார்.

50 மீ. தொலைவில்...

எதிர்த் தாக்குதலை முறியடித்தவர்களில் ஒருவரான பிஹாரைச் சேர்ந்த குமார் (25) பேசும்போது, ''நான்கரை வருடங்களாக இந்த முகாமில் இருக்கிறேன். சம்பவம் நடந்த அன்று தீவிரவாதிகள் 40- 50 மீட்டர்கள் தொலைவில் இருந்தனர். காயமடைந்த தீவிரவாதிகள் நம்மைத் தாக்க அனுமதிக்கக் கூடாது என்று அவர்கள் கொல்லப்படும் வரை சுட்டுக்கொண்டே இருந்தேன்'' என்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x