Published : 25 Oct 2014 10:30 AM
Last Updated : 25 Oct 2014 10:30 AM

நவம்பர் 1-ல் கொண்டாட்டம் இல்லை: ஆந்திரா உதயமான நாள் எது? - அரசுக்கும் மக்களுக்கும் குழப்பம்

ஆந்திர மாநிலம் உதயமான நாளாக நவம்பர் 1-ம் தேதியை கொண்டாடுவதில்லை என மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதேநேரம் அந்த நாளை எப்போது கொண்டாடுவது என்பதில் குழப்பம் நிலவுகிறது.

நாட்டிலேயே முதன்முறையாக மொழி அடிப்படையில் பிரிக்கப் பட்ட மாநிலம் ஆந்திர பிரதேசம் ஆகும். ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் ராயலசீமா, கடலோர ஆந்திரா ஆகியவை மதராஸ் மாகாணத்தின் ஒருங் கிணைந்த பகுதிகளாக இருந்தன. ஆனால் மொழி அடிப்படையில் மாநிலத்தை பிரிக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் காரணமாக கடந்த 1956-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் உதயமானது.

தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டிருந்த ராயலசீமா, கடலோர ஆந்திரா மற்றும் ஸ்டேட் ஆப் ஹைதராபாத் ஆகியவை ஆந்திராவின் அங்கமாக அமைந்தன. இதையடுத்து, கடந்த 58 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1-ம் தேதியை ஆந்திர மாநிலம் உருவான நாளாக வெகு விமரிசையாக கொண்டாடி வந்தனர்.

இந்நிலையில், ஒருங்கிணைந்த ஆந்திரா இரண்டாக பிரிக்கப்பட்டு ஹைதராபாத் உட்பட 10 மாவட்டங்களை உள்ளடக்கிய தெலங்கானா மாநிலம் கடந்த ஜூன் 2-ம் தேதி புதிதாக உதயமானது. கடந்த ஜூன் 8-ம் தேதி புதிய ஆந்திராவின் முதல்வராக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்றார்.

நவம்பர் மாதம் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஆந்திர மாநிலம் உதயமான நாளை எந்த தேதியில் கொண்டாடுவது என்பதில் அரசுக்கும், மக்களுக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஜூன் 2-ம் தேதிதான் புதிய ஆந்திரா உருவான நாள் என்பதால் அன்றைய தினம்தான் இதனை கொண்டாட வேண்டும் என அரசு ஊழியர் சங்கத்தினர் முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

புதிய ஆந்திராவின் முதல்வராக பதவி ஏற்ற நாளான ஜூன் 8-ம் தேதிதான் அதிகாரப்பூர்வமாக மக்களாட்சி ஏற்பட்டது. ஆதலால் இந்த நாளைதான் ஆந்திரா உதயமான நாளாகக் கொண்டாட வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சியினர் முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதற்கிடையே, பழைய ஆந்திரா உருவான நவம்பர் 1-ம் தேதியை ஆந்திரா உதயமான தினமாகக் கொண்டாட வேண்டாம் என நேற்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் ஆந்திரா தின கொண்டாட்டத்தை ஜூன் 2-ம் தேதி வைத்துக் கொள்வதா அல்லது 8-ம் தேதி வைத்துக் கொள்வதா என்பதை இதுவரை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதனால் இதுவிஷயத்தில் குழப்பம் நீடிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x