Last Updated : 18 May, 2015 11:25 AM

 

Published : 18 May 2015 11:25 AM
Last Updated : 18 May 2015 11:25 AM

பலாத்காரம் செய்யப்பட்டு 42 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை நர்ஸ் அருணா ஷன்பாக் மறைவு

மும்பை மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றியபோது, பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு, கடந்த 42 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த அருணா ஷன்பாக் (66) நேற்று காலை காலமானார்.

இதுகுறித்து, கேஇஎம் மருத்துவமனை முதல்வர் டாக்டர் அவினாஷ் சுபே நேற்று கூறும்போது, “அருணாவுக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பரிசோதனை செய்து பார்த்தபோது அவருக்கு நுரையீரல் தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப் பட்டது. குழாய் மூலம் உணவுப் பொருட்கள் செலுத்தப்பட்டது. இந்நிலையில் அவரது உயிர் காலை 9.40 மணிக்கு பிரிந்தது” என்றார்.

அருணாவின் உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக கேஇஎம் மருத்துவமனையில் வைக்கப்பட் டிருந்தது. அருணாவின் சகோதரி சாந்தா நாயக், மருத்துவமனை ஊழியர்கள், நர்ஸ்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். சாந்தா நாயக்கின் மகன் இறுதிச் சடங்குகளை செய்த பின்னர் அருணாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

ஆத்மா சாந்தி அடையும்

அருணா மரணம் குறித்து அவரது தோழியும் பத்திரிகையாளருமான விரானி கூறும்போது, “பல ஆண்டு களாக உயிருக்குப் போராடிய அருணாவுக்கு நீதி கிடைத்துள்ளது. இதன்மூலம் அவரது ஆத்மா சாந்தி அடையும். அருணா மறைந்து விட்டாலும், வரலாற்று சிறப்பு மிக்க கருணைக் கொலை தொடர்பான வழிகாட்டுதலை இந்தியாவுக்கு வழங்கி உள்ளார்” என்றார்.

பின்னணி

கிங் எட்வர்டு மெமோரியல் (கேஇஎம்) மருத்துவமனையில் இளநிலை நர்ஸாக பணியாற்றியவர் அருணா. அப்போது அவருக்கு வயது 26. மருத்துவமனையால் தத்தெடுக்கப்பட்ட சில விலங்கு களுக்கு வழங்குவதற்காக வைக்கப் பட்டிருந்த உணவுப்பொருட்களை அங்கு வார்டு பாய் ஆக பணியாற்றிய சோஹன்லால் பரதா வால்மீகி திருடி உள்ளார். இதைப் பார்த்த அருணா அவரைத் திட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சோஹன்லால், கடந்த 1973-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி பணியை முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்வதற்கு தயாராக இருந்த அருணாவை பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர் நாயை கட்டும் சங்கிலியால் அருணாவின் கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றுள்ளார். இதனால் அருணா மயக்கமடைந்ததையடுத்து, சோஹன்லால் தப்பி ஓடிவிட்டார். 11 மணி நேரத்துக்குப் பிறகுதான் அருணாவை ஊழியர்கள் பார்த்துள் ளனர். பின்னர் அவரை பரிசோதித்ததில் கண் பார்வை பறிபோனதுடன், உடல் உறுப்புகள் செயலிழந்திருந்தன. அருணாவின் மூளைக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் நரம்பு துண்டிக்கப்பட்டு கோமா நிலையை அடைந்தார்.

அப்போதிலிருந்தே அருணாவுக்கு கேஇஎம் மருத்துவமனையின் தரை தளத்தில் 4-வது வார்டு அருகே தனியாக ஒரு அறை ஒதுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அனைத்து தேவை களையும் நர்ஸ்கள் கவனித்து வந்தனர்.

அருணாவை வெளியேற்ற எதிர்ப்பு

உள்ளாட்சி நிர்வாகத்தால் நடத்தப்படும் கேஇஎம் மருத்துவ மனையிலிருந்து அருணாவை வெளியேற்ற கடந்த 1980-களில் திட்டமிடப்பட்டது. ஆனால், இதைக் கண்டித்து அருணாவை கவனித்து வந்த நர்ஸ்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போதிய பொருளாதார வசதி இல்லாத காரணத்தால் அருணாவை தன்னால் கவனித்துக்கொள்ள முடியாது என அவரது ஒரே ஒரு உறவினரான சகோதரி சாந்தா நாயக் தெரிவித்தார்.

அருணா பலாத்காரம் செய்யப் பட்டு கோமா நிலையை அடைந்த போது, மும்பையில் நர்ஸ்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட அருணாவுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என்றும், தங்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

அருணா அனுபவித்த கொடுமை களை சித்தரிக்கும் வகையில், கடந்த 1998-ல் பத்திரிகையாளர் விரானி, ‘அருணாவின் கதை’ என்ற பெயரில் ஒரு நூல் எழுதினார். இதுபோல், துட்டகுமார் தேசாய் என்பவர் 1994-95-ல் ‘கதா அருணாச்சி’ என்ற பெயரில் ஒரு நாடகம் எழுதினார். இதை 2002-ல் இயக்குநர் வினய் ஆப்தே அரங்கேற்றினார்.

அருணா ஷன்பாக்கின் 42 ஆண்டு போராட்டம்

நவ. 27,1973:

மும்பையில் உள்ள கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வந்த அருணா ஷன்பாக், வார்டு பாய் சோஹன்லால் பரதா வால்மீகி என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது, நாயை கட்டிப்போடும் சங்கிலியால் அருணா வின் கழுத்தை வால்மீகி நெரித்ததால் அருணாவின் மூளைக்கு செல்லும் ஆக்சிஜனும் ரத்தமும் தடைபட்டது.

நவ. 28, 1973:

நடந்த சம்பவம் மும்பையை உலுக்கியது. வால்மீகி கைது செய்யப்பட்டார்.

நவ. 29, 1973:

தாக்குதலால் அருணாவின் கண் பார்வையும் செவித்திறனும் பறிபோனது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு கோமா நிலையடைந்தார்.

1974:

கொலை முயற்சி மற்றும் அருணாவின் நகை களை திருடியதாக நீதிமன்றத்தில் வால்மீகி குற்றம் சாட்டப்பட்டார். ஆனால், அவர் மீது பாலியல் பலாத்கார குற்றம் சாட்டப்படவில்லை. அருணா பலாத்காரம் செய்யப்பட்டதை போலீசார் கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லை. வால்மீகிக்கு விசாரணை நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. ஏற்கனவே, ஒரு ஆண்டு சிறையில் இருந்ததால் தண்டனை 6 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

1980:

சிறையில் இருந்து வால்மீகி விடுதலையானார். 7 ஆண்டுகளாக உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் அருணாவை மருத்துவமனையை விட்டு அனுப்ப இரண்டு முறை மாநகராட்சி முடிவு செய்தது. இதற்கு நர்ஸ்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, இம் முடிவை மாநகராட்சி கைவிட்டது.

2009:

‘அருணாவின் கதை’ என்ற பெயரில் அவரது கதையை எழுதியவர், அருணாவுக்கு கட்டாயமாக உணவு கொடுக்கப்படுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஜனவரி 14, 2011:

அருணாவின் உடல் நிலையை பரிசோதிக்க மருத்துவர் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது.

பிப். 2011:

அருணா நிரந்தரமாக கோமா நிலையை அடைந்தவராக உள்ளார் என்று உச்ச நீதிமன்றத்தில் மருத்துவர் குழு அறிக்கை அளித்தது.

மார்ச் 7, 2011:

அருணாவை கருணைக் கொலை செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மே 18, 2015:

அருணா ஷன்பாக் மரணமடைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x