Published : 13 Apr 2017 11:25 AM
Last Updated : 13 Apr 2017 11:25 AM

வேலை தேடி நேபாளத்துக்கு சென்ற பாக். அதிகாரி மாயமானதால் ஜாதவுக்கு தண்டனையா?

பாகிஸ்தான் முன்னாள் ராணுவ அதிகாரி நேபாளத்தில் காணமல் போனதற்கும் இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிக்கு பாகிஸ்தான் மரண தண்டனை விதித்ததற்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானின் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கர்னல் முகமது ஹபிப் ஜாஹிர், வேலை தேடி கடந்த வாரம் நேபாள தலைநகர் காத்மாண்டு சென்றதாகக் கூறப் படுகிறது. அதன்பிறகு அவர் மாய மானார். இதையடுத்து, ஜாஹிரை இந்திய உளவு அமைப்புகள் கடத்தியிருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் பாகிஸ்தான் ஊடகங்களிடம் குற்றம்சாட்டினர்.

ஆனால், ஜாஹிர் காணாமல் போனதற்கும் இந்திய உளவு அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாக இந்திய ஊடகங்கள் உட்பட எதிலும் தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில், பாகிஸ்தானில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் 10-ம் தேதி மரண தண்டனை விதித்தது. இதனால் இந்த இரு சம்பவங்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “நேபாளத்தில் காணாமல் போன பாகிஸ்தான் முன்னாள் ராணுவ அதிகாரி இந்தியா வசம் இருப்பதாக அந்த நாடு கருதுகிறது. இந்நிலையில், ஜாதவுக்கு மரண தண்டனை விதித்து பாகிஸ்தான் முந்திக் கொண்டது. இப்போது பாகிஸ் தான் அதிகாரி மீது இந்தியா நட வடிக்கை எடுத்தால், அது பழி வாங்கும் நடவடிக்கையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படு கிறது” என்றார்.

இந்த இரண்டு சம்பவங்களுக் கும் (ஜாஹிர் காணாமல் போனது மற்றும் ஜாதவுக்கு மரண தண்டனை விதித்தது) தொடர்பு இருப்பதாகக் கூறுவது நம்பிக்கை ஏற்படுத்துவதாக உள்ளது என இந்திய கடற்படையில் பணிபுரிந்தபோது ஜாதவை நன்கு அறிந்த 2 பேர் தெரிவித்துள்ளனர். இதில் ஒருவர் கூறும்போது, “இது உண்மையாக இருந்தால், ஜாதவ் பத்திரமாக நாடு திரும்புவார் என நம்பலாம்” என்றார்.

காணாமல் போன ஜாஹிர் மகன் சாத் ஹபிப் கூறும்போது, “கடந்த 6-ம் தேதி காத்மாண்டு விமான நிலையத்தில் ஜாவேத் அன்சாரி என்பவர் தனக்கு வரவேற்பு கொடுத்ததாக எனது தந்தை தெரிவித்தார். அதன்பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரை இந்திய உளவு அமைப்புகள் கடத்தி இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்” என்றார்.

பாகிஸ்தான் ராணுவத்திலிருந்து 2014-ல் ஓய்வு பெற்ற ஜாஹிர், ஐ.நா. அமைதிக்குழுவில் 2 ஆண்டு பணியாற்றினார். பின்னர் அவர், வேறு வேலை தேடி உள்ளார். அப்போது, மார்க் தாம்சன் என்பவர் ஜாஹிரைத் தொடர்புகொண்டு ‘ஸ்டார்ட்சொலூஷன் டாட் பிஸ்’ என்ற நிறுவனத்தில் வேலை இருப்பதாகக் கூறி உள்ளார்.

பிரிட்டன் தொலைபேசி எண்ணிலிருந்து இணையதளம் வழியாக தொடர்புகொண்ட அந்த நபர், நேர்முகத் தேர்வுக்காக காத்மாண்டுக்கு வருமாறு கூறியுள் ளார். இதன் அடிப்படையில்தான் ஜாஹிர் அங்கு சென்றதாக பாகிஸ் தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்கா கவலை

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் மரண தண்டனை விதித்ததற்கு அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை முன்னாள் அதிகாரி அலிசா அயர்ஸ் கூறும் போது, “மும்பை தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிர வாதிகள் மீதான விசாரணையை விரைவாக முடிப்பதில் பாகிஸ்தான் கவனம் செலுத்தவில்லை. இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் இந்தியாவின் ஜாதவுக்கு அவசர அவசரமாக மரண தண்டனை விதித்திருப்பது முரண்பாடாக உள்ளது. இதில் ஏதோ மர்மம் இருப்பதாகத் தோன்றுகிறது” என்றார்.

இதுபோல, அமெரிக்காவைச் சேர்ந்த சிந்தனை அமைப்பான அட்லான்டிக் கவுன்சிலின் தெற்காசிய மைய இயக்குநர் பரத் கோபாலசாமி உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிபுணர்களும் பாகிஸ்தானின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x