Last Updated : 29 Jul, 2016 11:01 AM

 

Published : 29 Jul 2016 11:01 AM
Last Updated : 29 Jul 2016 11:01 AM

புதிய மதுவிலக்கு சட்டம்: பிஹார் ஆளும்கட்சித் தலைவர்களிடையே மாற்றுக் கருத்து

பிஹாரில் இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் புதிய மதுவிலக்கு சட்டம் கொண்டுவரப்பட உள்ளது. இதன் மீது அங்கு ஆளும் மெகா கூட்டணிக் கட்சி தலைவர்கள் இடையே மாற்றக் கருத்துகள் உருவாகி உள்ளன.

பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் இணைந்த மெகா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவரான நிதிஷ்குமார் முதல்வராகப் பதவி வகிக்கிறார். இவர், கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் பிஹாரில் தீவிர மதுவிலக்கு அமல்படுத்தி உள்ளார். இதற்கான பிஹார் மாநில சட்டங்கள் வலுவாக இல்லை எனக் கருதிய நிதிஷ், அதை தீவிரமாக்கி புதிய மதுவிலக்கு சட்டம் அமல்படுத்த உள்ளார். இதற்கான வரைவு மசோதாவை நிதிஷ் அமைச்சரவை ஏற்றுக் கொண்டுள்ளது. இது, இன்று முதல் கூட இருக்கும் பிஹார் சட்டப்பேரவையில் மழைக்காலக் கூட்டத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட உள்ளது.

இதன்படி, ஒருவர் மது புட்டியுடன் பிடிபட்டால் அவருக்கு 10 வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். மது, வீட்டில் வைத்திருப்பது தெரிந்தால் அதற்கு அக்குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் பொறுப்பாக்கப்படுவார்கள் என உள்ளது. இதுபோன்ற சில கடுமையான சட்டங்களை கொண்ட அந்த மசோதா மீது ஆளும் மெகா கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் இடையே இருவேறு கருத்துகள் கிளம்பியுள்ளன.

இது குறித்து லாலு தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளத்தின் எம்.எல்.ஏவான பாய் விரேந்திரா கூறுகையில், ''மதுப்புட்டி வீடுகளில் கண்டு எடுக்கப்பட்டால் அக்குடும்பத்தினர் அனைவரின் மீது வழக்குப் பதிவு செய்வது என்பது அடிப்படை சட்டங்களுக்கு புறம்பானது. எனவே, சட்டமாக்கப்பட்ட பின் அதை எதிர்த்து எவரும் நீதிமன்றம் சென்றால் சிக்கலுக்குள்ளாகி விடும்'' என கூறுகிறார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏவான ஷக்கீல் அகமது கூறுகையில், ''இந்த மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக பொதுமக்கள் மற்றும் சட்டநிபுணர்களிடம் கருத்து கேட்பது அவசியம். இல்லை எனில், இந்த சட்டத்தினால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்க வாய்ப்பாகி விடும். இதுபோல், முக்கிய மசோதாக்கள் அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக அதன் மீது ஆலோசனை செய்ய சட்டத்தில் இடம் உள்ளது'' என தெரிவித்தார்.

இதுபோல், ஆளும் கட்சித் தலைவர்களால் முதன்முறையாக நிதிஷின் முடிவிற்கு எதிரான கருத்துகள் கிளம்பி இருப்பதாகக் கருதப்படுகிறது. இதனால், மதுவிலக்கு மீதான மசோதா மீது கடுமையான எதிர் கருத்துகள் அதன் விவாதங்களில் எழும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து எதிர்க் கட்சியான பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரான சுசில்குமார் மோடி, அது ஒரு 'தாலிபான் வகை சட்டம்' என விமர்சித்துள்ளார். இந்த சட்டத்தினால் அப்பாவி பொதுமக்களும் 10 வருடம் சிறைத்தண்டனையில் சிக்க வைக்க வாய்ப்பிருப்பதாகவும் ஐயம் கிளப்பியுள்ளார்.

இந்த புதிய மதுவிலக்கு சட்டத்தின் மூலம் நிதிஷ், தனி நீதிமன்றங்கள், தனிச்சிறை, கூடுதல் அலுவலர் எனப் பல்வேறு வசதிகளையும் உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்கு, பிஹாரின் மதுவிலக்கிற்கு நாடு முழுவதிலும் பல்வேறு தரப்பினர் இடையே பெரும் ஆதரவு கிளம்பி இருப்பதும் காரணம் ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x