Published : 21 Jan 2014 21:10 pm

Updated : 06 Jun 2017 18:36 pm

 

Published : 21 Jan 2014 09:10 PM
Last Updated : 06 Jun 2017 06:36 PM

போராட்டத்தை கைவிட்டார் அர்விந்த் கேஜ்ரிவால்

டெல்லியின் துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கின் வேண்டுகோளை ஏற்று, போராட்டத்தை முடித்துக் கொள்வதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் செவ்வாய்க் கிழமை அறிவித்தார்.

இது குறித்து செவ்வாய்க் கிழமை இரவு 7.40 மணியளவில் கேஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில், "குடியரசு தின விழாவிற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டி இருப்பதால் போராட்டத்தை முடித்து கொள்ளுமாறு டெல்லி யின் துணைநிலை ஆளுநர் வேண்டுகோள் விடுத்தார். அதோடு, விசாரணை முடியும்வரை சம்பந்தப்பட்ட 2 போலீஸாரை விடுப்பில் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, போராட்டத்தை இத்துடன் முடித்துக் கொள்கிறோம்.


இது டெல்லியில் வசிக்கும் மக்களுக்கு கிடைத்த வெற்றி. மாநிலத்துக்கு தனி அந்தஸ்து பெற்றுத் தரும் திசையில் எடுத்து வைக்கப்பட்டுள்ள முதல் படி" என்றார். இது குறித்து டெல்லியின் துணைநிலை ஆளுநர் அலுவலக வட்டாரம் கூறியதாவது: "இதில் கேஜ்ரிவால் வெற்றி கொண்டாடும் அளவிற்கு பெரிதாக ஒன்றும் நடந்து விடவில்லை. டென்மார்க் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட இடத்தில் ரோந்து செல்ல மறந்த பஹார்கன்ச் இன்ஸ்பெக்டர் மற்றும் வெளிநாட்டுப் பெண்கள் தங்கியிருந்த வீட்டில் சோதனையிட மறுத்த மாளவியா நகர் இன்ஸ்பெக்டர் ஆகியோரை 3 நாட்கள் விடுப்பில் அனுப்பியுள்ளோம். போலீஸார் மீது டெல்லி முதல்வர் தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து நடைபெற்று வரும் விசாரணை 3 நாட்களில் முடிவடைந்துவிடும். அதன் பின்புதான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும்" என்றனர்.

முன்னதாக செவ்வாய்க்கிழமை காலை கேஜ்ரிவால் பேசுகையில், "கோரிக்கையை மத்திய அரசு ஏற்காதபட்சத்தில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம். குடியரசு தின விழாவை

வி.ஐ.பி.க்களுடன் அமர்ந்து பார்த்து ரசிப்பது முக்கியமா? பெண்களின் பாதுகாப்பு முக்கியமா? " என்றார்.

இரண்டு நாள் நாடகம்

"இரண்டு போலீஸாரை விடுமுறையில் அனுப்ப கேஜ்ரிவால் இரண்டு நாள் நடத்திய நாடகம் இது" என்று பாஜக டெல்லி மாநில தலைவர் விஜய் கோயல் விமர்சித்துள்ளார். இதற்கிடையே டெல்லி காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு சிறப்பு ஆணையர் தீபக் மிஸ்ரா கூறுகையில், "அந்த இரு போலீஸாரும் ஏற்கெனவே விடுமுறைக்கு விண்ணப்பித்திருந்தார்கள். அதன்படிதான் அவர்கள் விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர்" என்றார்.

குடியரசுத் தலைவருடன் பிரதமர் சந்திப்பு

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ரயில் பவன் அருகே செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தி வந்த நிலையில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

இதுவரை இல்லாத வகையில் மாநில முதல்வரின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது குறித்தும், இந்த போராட்டத்தால் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின விழாவை சுமுகமாக நடத்த முடியாமல் இடையூறு ஏற்படக்கூடிய சூழ்நிலை இருப்பது குறித்தும் இருவரும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

பிப்ரவரியில் நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது குறித்தும் குடியரசுத் தலைவரிடம் பிரதமர் தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சியினர் மீது போலீஸ் தடியடி

டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் போராட்டத்தில் பங்கேற்க ரயில் பவன் நோக்கிச் சென்ற ஆம் ஆத்மி கட்சியினருக்கும் போலீஸாருக்கும் இடையே செவ்வாய்க்கிழமை மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஆம் ஆத்மி கட்சியினர் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.

டெல்லியில் பணியாற்றும் 4 போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யக் கோரியும், காவல் துறையை நிர்வகிக்கும் பொறுப்பை மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலானோர் மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டேவை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.

நாடாளுமன்றத்தின் அருகே உள்ள ரயில் பவன் பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக செவ்வாய்க் கிழமை காலையிலிருந்து ஆம் ஆத்மி கட்சியினர் வரத் தொடங்கிவிட்டனர்.

போராட்டம் நடக்கும் பகுதிக்கு செல்லும் 7 சாலைகளிலும் இரும்புத் தடுப்புகளை வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், ஆம் ஆத்மி கட்சியினரை திருப்பி அனுப்பினர்.

மதியம் 3 மணியளவில பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மீது பாட்டில் மற்றும் கற்கள் வீசப்பட்டன. இதில் போலீஸ் அதிகாரி ஒருவரின் தலையில் காயம் ஏற்பட்டது.

அப்போது அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவரை ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் என தவறாக நினைத்த போலீஸார், அவர்தான் கல் வீச்சை நடத்தியவர் என கருதி கடுமையாக தாக்கினர். தங்கள் கட்சியை சேர்ந்தவரை போலீஸார் தாக்குகின்றனர் என கருதிய ஆம் ஆத்மி கட்சியினர், போலீஸார் மீது கற்களை வீசினர். சிலர் இரும்புத் தடுப்புகளை அகற்றி கடந்து செல்ல முயன்றனர்.

இருதரப்புக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு மோதலாக உருவெடுத்தது. பின்னர், போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பத்திரிகையாளர் ஒருவரும், 2 பெண்கள் உள்பட 7 ஆம் ஆத்மி கட்சியினரும் காயமடைந்தனர்.

மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்

போராட்டப் பகுதியை சுற்றி இருக்கும் உத்யோக் பவன், படேல் சோக், மத்திய தலைமை செயலகம் மற்றும் ரேஸ்கோர்ஸ் ஆகிய பகுதிகளில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.

இது குறித்து முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மெட்ரோ ரயில் நிலையங்களை மூடும்படி மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டேதான் கூறியிருக்கிறார். மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரியிடம் கேட்டபோது, டெல்லி போலீஸாரின் அறிவுறுத்தலின்படி மூடியுள்ளதாக தெரிவித்தனர்" என்றார்.

மீண்டும் மோதல்

போராட்டம் நடக்கும் இடமான ரயில் பவனை நோக்கி ஆம் ஆத்மி கட்சியினரை செல்ல விடாமல்

தடுக்க சாலையில் தடுப்புகள் அமைக்கப் பட்டுள்ளதால், பலர் தடுத்து நிறுத்தப்பட்ட பகுதிகளிலேயே அமர்ந்து போராட்டம் நடத்தினர். ரபி மார்க், படேல் சோக், அசோகா சாலை உள்ளிட்ட பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன.

செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் மீண்டும் போலீஸாருக்கும், ஆம் ஆத்மி கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், 4 போலீஸார் மற்றும் 2 பத்திரிகையாளர்கள் காயமடைந்தனர்.


கேஜ்ரிவால் தர்ணாபுது டெல்லி காவல்துறைஆளுநர் உத்திரவாதம்நஜீப் ஜங்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x