Published : 20 Mar 2017 08:15 PM
Last Updated : 20 Mar 2017 08:15 PM

வாபஸ் என்பது பொய்யே! - டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது

கடந்த 7 நாட்களாக டெல்லியில் நடத்தி வந்த போராட்டத்தை தமிழக விவசாயிகள் திரும்பப் பெற்றதாக முதலில் செய்தி வெளியானது. ஆனால் போராட்டம் தொடர்கிறது. வாபஸ் என்பது பொய்யே என்று உழவர் விடுதலை கழகம் தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாகவும், தொடர்ந்து இந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

ஆனால், இதனை போராட்டக் களத்தில் இருக்கும் உழவர் விடுதலை கழகம் முற்றிலும் மறுத்துள்ளது. இக்கழகத்தைச் சார்ந்த போராட்டக் கள விவசாயிகள் கூறுகையில், ''இரண்டு நாட்களில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கூறி போராட்டத்தைக் கைவிடச் சொன்னது மத்திய அரசு.

இரண்டுநாள் இதே போராட்ட இடத்தில் இருக்கின்றோம். நிறைவேறியதும் ஊருக்குச் செல்கிறோம் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டோம். அதற்கிடையில் சிலர் கோரிக்கைகள் நிறைவேறி விட்டது. கையெழுத்து போட்டாகிவிட்டது என்று தவறான செய்திகளை பரப்பிவிட்டனர்'' என்றனர்.

முன்னதாக, தேசிய தென் இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் காலவரையற்ற போராட்டம் தொடங்கப்பட்டது. கடந்த வாரம் 14-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் போராட்டத்தில் தமிழக விவசாயிகள் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். நதிகளை இணைப்பது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, விவசாயிகள் கடன் தள்ளுபடி உட்படப் பல்வேறு கோரிக்கைகளை தங்கள் மத்திய அரசின் முன் வைத்தனர்.

இதற்காக, டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் முதல் நாள் உண்ணாவிரதம் நடத்தினர். மறுநாள் மரத்தில் கயிறை கட்டி தூக்கில் தொங்குவது, ஆதிவாசிகளைப் போல் இலைகளை மட்டும் கட்டிக் கொள்வது, திருவோடு ஏந்தி பிச்சை எடுப்பது, நெற்றியில் பெரிய அளவில் நாமம், உடல் முழுவதிலும் திறுநீறு பட்டை எனப் பல்வேறு வகை போராட்டங்களை அன்றாடம் நடத்தி வருகின்றனர்.

இச்சங்கத்தின் தமிழகத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் தொடரும் இந்த வித்தியாசமான போராட்டம் டெல்லியில் பலரது கவனத்தை கவர்ந்தது.

விவசாயிகளிடம் தங்கள் போராட்டத்தை கைவிடும்படி அதிமுக எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர். இதை தமிழக விவசாயிகள் ஏற்க மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் போராட்டம் தொடர்கிறது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x