Published : 04 Oct 2014 02:40 PM
Last Updated : 04 Oct 2014 02:40 PM

ஹரியாணா வளர்ச்சிக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை: மோடி தாக்கு

ஹரியாணா மாநிலம் வளர்ச்சி பெற அம்மாநில மக்கள் காங்கிரஸை புறக்கணித்து நிலையான ஆட்சி அமைய வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.

ஹரியாணா மாநிலத்தில் வருகிற 15-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி, கர்னல் மாவட்டத்தில் பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 30 நிமிடங்கள் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். மோடி வருகையை ஒட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கூட்டத்தில் மோடி பேசியதாவது: "ஹரியாணா மாநிலம் பின்தங்கி இருப்பதற்குக் காரணம் காங்கிரஸ் கட்சியே. ஹரியாணாவை ஆளும் காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படுகிறது. ஹரியாணா மாநிலம் வளர்ச்சியில் முதலிடத்தில் இருப்பதாக காங்கிரஸ் கட்சி கூறுகிறது. ஆனால் இங்கு நிலைமை வேறு மாதிரி இருக்கிறது. கல்வியறிவு விகிதம், சராசரி வருமான விகிதம், வறுமை ஒழிப்பு, சுகாதாரம் என பல்வேறு துறைகளில் இம்மாநிலம் பின் தங்கியுள்ளது.

ஹரியாணாவில் அக்டோபர் 15-ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல், இம்மாநில மக்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் தேர்தல். ஹரியாணா மாநிலம் வளர்ச்சி பெற இங்கு மாற்றம் ஏற்பட வேண்டும். முதலில் காங்கிரஸ் சுவடே இல்லாத மாநிலமாக ஹரியாணாவை மாற்ற வேண்டும். மக்கள், நிலையான ஒரு ஆட்சியை தேர்ந்தெடுக்க வேண்டும். அதிகப் பெரும்பான்மையுடைய ஆட்சியாகவும், எனது நலத் திட்டங்களை செயல்படுத்தக் கூடிய ஆட்சியாகவும் அந்த ஆட்சி அமைய வேண்டும்.

உலக அரங்கில் இந்திய தேசத்தின் பெருமை இப்போது பலமடங்கு உயர்ந்திருக்கிறது. இதற்குக் காரணம் 'மோடி மந்திரம்' இல்லை 'மக்கள் மந்திரம்'. அதாவது, மத்தியில் அதிகப் பெரும்பான்மையுடைய நிலையான ஆட்சியை 125 கோடி மக்கள் தேர்ந்தெடுத்திருப்பதே உலக அரங்கில் இந்தியாவின் பெருமை மேலோங்கி நிற்கக் காரணம். அதே மந்திரத்தை ஹரியாணா தேர்தலிலும் மக்கள் செயல்படுத்த வேண்டும்.அப்போது தான் ஹரியாணாவும் வளர்ச்சி பெறும்" என்றார்.

மேலும், "நாட்டிற்கு 60 ஆண்டுகளாக ஒன்றுமே செய்யாத காங்கிரஸ் கட்சியினர் 60 நாட்களாக ஆட்சியில் நான் சாதித்தது என்னவென்று அறிக்கை அளிக்குமாறு என்னிடம் கேட்கிறார்கள்" என்று காங்கிரஸ் கட்சியை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x