Last Updated : 22 Jun, 2016 09:33 AM

 

Published : 22 Jun 2016 09:33 AM
Last Updated : 22 Jun 2016 09:33 AM

கர்நாடக முதல்வர் சித்தராமையா, பிபாஷா பாசு பங்கேற்பு

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கர்நாடக மாநிலம் முழு வதும் நடந்த நிகழ்ச்சியில் லட்சக் கணக்கானோர் பங்கேற்றனர்.

முதல்வர் சித்தராமையா தலைமையில் பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள், பிரபல நடிகை பிபாஷா பாசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கர்நாடக அரசு சார்பில் பெங்களூரு கண்டீரவா ஸ்டேடியத்தில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியை முதல்வர் சித்தராமையா தொடங்கி வைத்தார். யோகா குரு வச்சானந்த் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்தி நடிகை பிபாஷா பாசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு ஆசனங்களை செய்தார். மத்திய அமைச்சர்கள் அனந்த்குமார், சதானந்த கவுடா, யு.டி.காதர், ஜார்ஜ், பிரியாங்க் கார்கே உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

முன்னதாக நிகழ்ச்சியை தொடங்கி வைத்து முதல்வர் சித்தராமையா பேசும்போது, ‘‘எனக்கு 68 வயதாகிவிட்டது. முதுமையினால் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், மன அழுத்தம், பணி அழுத்தம் காரணமாக கடும் சிரமப்பட்டு வந்தேன். சமீப காலமாக தொடர்ந்து யோகா செய்துவருவதால் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடிகிறது.

அதே போல அனைத்துவிதமான பிரச்சினைகளையும், அன்றாட வேலைப்பளுவையும் சமாளிக்கும் ஆற்றல் யோகா மூலமாக கிடைக்கிறது. யோகா செய்வதன் மூலம் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நம்மை வலுப்படுத்திக்கொள்ள முடிகிறது. எனவே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் யோகா பயிற்சியில் ஈடுபட வேண்டும்’’என்றார்.

பெங்களூரு மட்டுமில்லாமல் மைசூரு, மங்களூரு, உடுப்பி, தார்வாட் உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கர்நாடக அரசின் சுகாதாரத்துறை சார்பில் யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் அமைச்சர்கள், அதிகாரிகள் திரளான பள்ளி,கல்லூரி மாணவ, மாணவியர் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x