Last Updated : 08 Sep, 2016 07:40 AM

 

Published : 08 Sep 2016 07:40 AM
Last Updated : 08 Sep 2016 07:40 AM

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்ததற்கு எதிர்ப்பு: சித்தராமையா ராஜினாமா செய்யக்கோரி கர்நாடகாவில் போராட்டம்

காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடக முதல்வர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோரி மைசூரு, மண்டியாவில் கன்னட அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தது. இதை விசாரித்த நீதிமன்றம், காவிரியில் தமிழகத்துக்கு 15 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிடுமாறு உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று நள்ளிரவு 12 மணிக்கு கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டது.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும், சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவருமான ஈஸ்வரப்பா கூறும்போது, “கர்நாடக விவசாயிகளின் எதிர்ப்பை மீறி தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட்ட சித்தராமையாவை வன்மையாக கண்டிக்கிறேன். உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தரப்பில் சரியாக வாதிடவில்லை. தற்போது ஆஜராகும் வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமனை மாற்ற வேண்டும். கர்நாடகாவில் குடிக்கவே நீரில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்திருக்க வேண்டும்” என்றார்.

மதச்சார்பற்ற ஜனதா தள (மஜத) ஆதரவு தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான மாதே கவுடா கூறும் போது, “காவிரி வழக்கில் சித்த ராமையா தலைமையிலான காங் கிரஸ் அரசு சிறப்பாக செயல்பட வில்லை. சரியாக வாதிடாத வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமனை உடனடியாக மாற்றி, கர்நாடகாவை சேர்ந்த வழக்கறிஞரை நியமிக்க வேண்டும். மேல்முறையீட்டில் கர்நாடகாவுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்றார்.

இதேபோல பாஜக, மஜத ஆதரவு விவசாய சங்கங்களும், கன்னட அமைப்புகளும் சித்தராமை யாவுக்கு எதிராக பல்வேறு போராட் டங்களை முன்னெடுத்துள்ளன.

இதனால் ஆத்திரம் அடைந்த கர்நாடக விவசாய சங்கங்களும், ஜெய் கர்நாடகா அமைப்பினரும் கர்நாடக முதல்வர் சித்தராமையா, நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா, முன்னாள் அமைச்சர் அம்பரீஷ் ஆகியோருக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும் பெங்களூரு, மைசூரு, மண்டியா ஆகிய இடங்களில் உள்ள சித்தராமையா மற்றும் அமைச்சர்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மண்டியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் சித்தராமையாவின் உருவ பொம்மைக்கு தீயிட்டு கொளுத்தினர். எம்.பி.பாட்டீல், அம்பரீஷ் ஆகியோரின் உருவப்படங்களுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக தூக்கிச் சென்றனர். அங்கு திரையிடப்பட்ட அம்பரீஷின் புதிய திரைப்பட பேனர்களை கிழித்த கன்னட அமைப்பினர் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

இதேபோல ஒக்கலிகா சாதி சங்கத்தினரும் சித்தராமையாவை கண்டித்து ஸ்ரீரங்கப்பட்டினத்தில் போராட்டம் நடத்தினர்.

சித்தராமையாவின் சொந்த ஊரான மைசூருவில் கன்னட ரக் ஷன வேதிகே அமைப்பினர் அவரது உருவ பொம்மையை பாடையில் வைத்து இறுதி ஊர்வலமாக தூக்கி செல்வது போல நூதன போராட்டம் நடத்தினர். அப்போது சித்தராமையாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும் அவரையும், அமைச்சர்களையும் கடுமையான வார்த்தைகளில் திட்டி தீர்த்தனர். இதனால் கன்னட அமைப்பினருக்கும், காங்கிரஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்ட போலீஸார் நூற்றுக்கும் மேற்பட்ட கன்னட அமைப்பினரை கைது செய்தனர்.

இதனிடையே மைசூரு கன்னட ரக் ஷன வேதிகே அமைப்பின் செயலர் பிரவீர் ஷெட்டி கூறும் போது, “காவிரி விவகாரத்தில் க‌ர்நாடகாவுக்கு அநீதியை இழைத்த சித்தராமையாவும், எம்.பி.பாட்டீலும் உடனடியாக தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். தமிழகத்துக்கு காவிரி நீரை விட மாட்டேன் என கூறிவிட்டு, இப்போது நள்ளிரவில் நீரை திறந்துவிட்டுள்ளார். இதை வன்மையாக கண்டிக்கிறோம். சித்தராமையாவுக்கு தைரியம் இருந்தால் மைசூருவுக்கு வரட்டும். அவருக்கு தக்க பாடம் கற்பிக்கிறோம்” என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சித்தராமையா வுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது, “காவிரி விவ காரத்தை எதிர்க்கட்சிகளான பாஜகவும், மஜதவும் அரசியல் ஆக்கி வருகின்றன. சில கன்னட அமைப்புகளும், விவசாய சங்கங் களும் சுயநல நோக்கத்தோடும், சாதி உணர்வுடனும் சித்தராமையாவுக்கு எதிராக போராடி வருகின்றன. தேர்தலை மனதில் வைத்து செயல்படுவதை இந்த அமைப்புகள் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்றனர்.

சுப்பிரமணியன் சுவாமி

இதனிடையே பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, “காவிரி நீருக்காக தமிழ்நாடு கதறுவதை நிறுத்திவிட்டு, கடல் நீரை குடிநீருக்கும், பாசனத்துக்கும் பயன்படுத்துங்கள்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கு கர்நாடக விவசாயிகள், கன்னட அமைப்புகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமியே கர்நாடகாவுக்கு ஆதரவாக பேசுகிறார். ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், உச்ச நீதிமன்றமும் காவிரி நீரை கேட்கிறார்கள் என ஆதங்கப்படுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x