Published : 18 Feb 2014 04:43 PM
Last Updated : 18 Feb 2014 04:43 PM

தெலங்கானா மசோதா மக்களவையில் நிறைவேறியது: கடும் அமளியால் நேரடி ஒளிபரப்பு நிறுத்தம்

தெலங்கானா தனி மாநிலத்தை உருவாக்க வகை செய்யும் ஆந்திர மறுசீரமைப்பு மசோதா மக்களவையில் கடும் அமளிக்கு நடுவே செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

ஆந்திரத்தில் தெலங்கானா பகுதியைப் பிரித்து தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் நாட்டின் 29-வது மாநிலமாக தெலங்கானா தனி மாநிலத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதுதொடர்பான மசோதா ஆந்திர சட்டமன்றத்தில் அண்மையில் நிராகரிக்கப்பட்டது. எனினும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார்.

இதைத் தொடர்ந்து கடந்த 13ம் தேதி மக்களவையில் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்ட ராஜகோபால் எம்.பி., சக உறுப்பினர்கள் மீது மிளகுப்பொடியை தூவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். சிலர் அவையில் இருந்த பொருள்களை உடைத்தனர். இதுதொடர்பாக 16 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

நேரடி ஒளிபரப்பு நிறுத்தம்

இந்நிலையில் ஆந்திர மறுசீரமைப்பு மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட 16 எம்.பி.க்களும் அவை நடவடிக்கையில் கலந்து கொள்ளவில்லை.

மேலும் அவை நிகழ்வுகளின் நேரடி டி.வி. ஒளிபரப்பு சுமார் 90 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது. தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக ஒளிபரப்பு தடைபட்டதாக லோக் சபா டி.வி. நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இதனை ஏற்க மறுத்துள்ள எதிர்க்கட்சிகள், நன்கு திட்டமிட்டே நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளன.

சுஷ்மா குற்றச்சாட்டு

அவையில் மசோதா மீதான விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர் ஷிண்டே, சீமாந்திரா பகுதிக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்படும், அந்தப் பகுதி மக்களின் பிரச்சினைகள் கவனத்தில் கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் மசோதாவை ஆதரித்தும் மத்திய அரசை குற்றம் சாட்டியும் பேசினார்.

“மக்களுக்கு ஏற்கெனவே அளித்த வாக்குறுதியின்படி தெலங்கானா மசோதாவை பாஜக ஆதரிக்கிறது. அதேநேரம் சீமாந்திரா பகுதி மக்களின் பிரச்சினைகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்” என்று சுஷ்மா குற்றம் சாட்டினார்.

குரல் வாக்கெடுப்பு

விவாதத்தின் இறுதியில் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பாஜக உறுப்பினர்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா அடுத்ததாக மாநிலங்களவையின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட உள்ளது.

இதனிடையே மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டவிதம் குறித்து மூத்த எம்.பி.க்கள் சிலர் வருத்தம் தெரிவித்துள்ளனர். “மூடிய அவைக்குள் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது, இது ஜனநாயக விரோதம்” என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஹைதராபாத் பொது தலைநகரம்

புதிதாக அமைக்கப்படும் தெலங்கானா மாநிலம் மற்றும் சீமாந்திரா பகுதிக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஹைதராபாத் பொதுதலைநகராக இருக்கும்.

சீமாந்திரா பகுதிக்கு புதிய தலைநகரம் தேர்ந்தெடுக்கப்படும். அந்த நகரில் ஆளுநர் மாளிகை, உயர் நீதிமன்றம், தலைமைச் செயலகம், சட்டமன்றம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் செய்து தரப்படும். கிருஷ்ணா, கோதாவரி நதிநீரைப் பகிர்ந்துகொள்ள மேற்பார்வைக் குழு அமைக்கப்படும் என்று மத்திய அரசு சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரத்தில் இன்று முழுஅடைப்பு

இந்த நாள் வரலாற்றில் கருப்பு நாள். பட்டப்பகலில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி குற்றம் சாட்டினார். ஆந்திரத்தைப் பிரிப்பதை எதிர்த்து புதன்கிழமை முழு அடைப்பு போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x