Last Updated : 09 Jun, 2016 08:35 AM

 

Published : 09 Jun 2016 08:35 AM
Last Updated : 09 Jun 2016 08:35 AM

நடப்பாண்டின் 4 மாதங்களில் 76 நக்ஸல்கள் கொலை, 665 பேர் கைது: மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்

நடப்பாண்டின் முதல் 4 மாதங் களில், இடதுசாரி தீவிரவாதம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 76 நக்ஸல்கள் கொல்லப் பட்டுள்ளனர்; 665 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அண்மைக்காலமாக இடதுசாரி தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் பாதுகாப்புப் படையினர் பெரும் வெற்றி அடைந்துள்ளனர். நடப்பாண்டில் நக்ஸல்களின் வன்முறைத் தாக்குதல்களும் 30 சதவீதம் குறைந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக நடப்பாண்டில் ஏப்ரல் வரை 76 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். 2015-ல் இதே காலகட்டத்தில் 15 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

நடப்பாண்டில் ஏப்ரல் வரை 665 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்; 639 பேர் சரணடைந்துள்ளனர்.

2015-ம் ஆண்டு இதே காலகட்டத்தில் 435 நக்ஸல்கள் கைது செய்யப்பட்டனர், 134 பேர் சரணடைந்திருந்தனர். கடந்த ஆண்டு மொத்தம் 89 நக்ஸல்கள் கொல்லப்பட்டனர், 1,668 பேர் கைது செய்யப்பட்டனர், 570 பேர் சரணடைந்தனர்.

2015-ம் ஆண்டு நக்ஸல்கள் நடத்திய 1,088 தாக்குதல்களில் 226 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 168 பேர் பொதுமக்கள், 58 பேர் பாதுகாப்பு படையினர்.

2013-ம் ஆண்டோடு ஒப்பிடுகை யில் 2015-ம் ஆண்டு நக்ஸல் தாக்குதல்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 சதவீதம் குறைந்துள்ளது.

இதற்கு பாதுகாப்பு படையினரின் சிறப்பான செயல்பாடுகளே காரணம்.

10 மாநிலங்களில் 106 மாவட்டங்களில் இடதுசாரி தீவிரவாதம் உள்ளது. இவற்றில் 7 மாநிலங்களில் 35 மாவட்டங்கள் இடதுசாரி தீவிரவாதத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அண்மையில் நாடாளுமன்ற நிலைக்குழு அளித்த அறிக்கையில், “சில பகுதிகளில் இடதுசாரி தீவிரவாதம் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. பல்வேறு இடதுசாரி தீவிரவாத இயக்கங்கள் இருப்பினும், அவற்றில் சிபிஐ (மாவோயிஸ்ட்) பலம் வாய்ந்த அமைப்பாக உள்ளது. இடதுசாரி தீவிரவாதத்தால் ஏற்படும் உயிரிழப்புகளில் 80 சதவீதம் இந்த அமைப்பால் நிகழ்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x