Last Updated : 23 Oct, 2014 07:43 PM

 

Published : 23 Oct 2014 07:43 PM
Last Updated : 23 Oct 2014 07:43 PM

பெருமிதத்தின் உச்சம் நீங்கள்: சியாச்சினில் ராணுவ வீரர்களிடம் பிரதமர் மோடி நெகிழ்ச்சி

சியாச்சினில் பாதுகாப்பு படை வீரர்கள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "பெருமிதத்தின் உச்சத்தில் வைத்துப் பார்க்க வேண்டியவர்கள்" என்று நெகிழ்ச்சியுடன் உத்வேகமூட்டும் வகையில் பேசினார்.

இதனிடையே, காஷ்மீரில் வெள்ளம் பாதித்த மக்களுக்காக, அந்த மாநிலத்துக்கு ரூ.740 கோடி அளவில் நிவாரண நிதியுதவியை அறிவித்தார்.

வெள்ளம் பாதித்த காஷ்மீர் மக்களுடன் தீபாவளியைக் கொண்டாடுவதாக அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை காலை ஸ்ரீநகர் சென்றடைந்தார்.

ஸ்ரீநகர் விமான நிலையம் வந்திருந்த அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, ஆளுநர் என்.என். வோரா ஆகியோர் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர். பின்னர் பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசிய ஒமர் அப்துல்லா, தமது மாநிலத்தின் வெள்ளப் பாதிப்பு மற்றும் நிலவரம் குறித்து விவரித்தார்.

நிவாரண நிதி அறிவிப்பு

இது குறித்து காஷ்மீர் அரசு செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "பிரதமர் நரேந்திர மோடியிடம் வெள்ளப் பாதிப்பு குறித்து தற்போதைய நிலவரம் விவரிக்கப்பட்டது. பேரிடர் ஏற்பட்ட மாநிலத்தை மறுசீரமைப்பு செய்வதற்கு தாராள நிதி உதவி அளிக்க பிரதமரிடம் முதல்வர் ஒமர் அப்துல்லா வலியுறுத்தினார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்புக்கு செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, "காஷ்மீரில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் நிலச்சரிவால் வீடுகள், பிரதான வரலாற்று சின்னங்கள், மருத்துவமனைகள் என பல இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த சீரமைப்புப் பணிகளுக்காக இம்மாநிலத்துக்கு ரூ.745 கோடி வழங்கப்படும்.

முற்றிலும் சேதமடைந்த வீடுகள் கட்டுவது உள்ளிட்டவை தொடர்பான தேவைகளுக்கு ரூ.570 கோடி உடனடி நிதி உதவியாக வழங்கப்படும். மேலும், மக்களுக்கு சேவை செய்து வந்த 6 மருத்துவமனைகளை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவற்றை சீரமைப்பது உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவது, மருத்துவ உபகரணங்களை ஏற்படுத்துவது போன்றவற்றுக்காக ரூ.175 கோடி வழங்கப்படும்" என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

பெமினாமக்களுக்கு ஏமாற்றம்

பின்னர், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வேண்டும் எனக் கோரி வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான பெமினா பகுதியை சேர்ந்த மக்கள் காஷ்மீரில் உள்ள ஆளுநர் மாளிகை முன் குவிந்தனர். ஆனால், சந்திப்புக்கு முன் அனுமதி பெறாததால் அவர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.

எனினும், அந்த மக்கள் கலைந்து செல்லாததால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது. அப்போது பேசிய சிலர், "நாங்கள் வெள்ள பாதிப்பால் கடுமையான அவதியில் உள்ளோம். பிரதமர் நரேந்திர மோடி ஆளுநர் மாளிகை வரும்பொழுது எங்களை சந்தித்து குறைகளை கேட்பார் என்று ரேடியோக்களில் செய்திகள் வெளியாகின. அதனை நம்பிதான் பிரதமரை காண காத்துக் கொண்டிருந்தோம்" என்றனர்.

ராணுவ வீரர்களுக்கு உத்வேகம்

ஆளுநர் மாளிகையிலிருந்து ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி, உலகின் மிக உயரிய போர்க்கள உச்சியான சியாச்சின் சென்றடைந்தார். அங்கு உறையும் பனிச் சூழலுக்கு நடுவே ராணுவ தளத்தை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, வீரர்களுக்கு தனது வாழ்த்துக்களைக் கூறி, தீபாவளி பரிசு பொருட்களை பகிர்ந்து கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடியின் சியாச்சின் பயணம் மற்றும் ராணுவ வீரர்களுடனான சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகளில் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா கலந்துக் கொள்ளவில்லை.

ராணுவ தளத்தில் வீரர்களுக்கு நடுவே இந்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, "இந்தியாவின் சேவகனாக இருக்க நான் மிகவும் பெருமை அடைகிறேன். இங்கு வீரர்கள் வாழும் சூழல் கண்கூடாக தெரிகிறது. நாட்டுக்காக இங்கு இக்காட்டான சூழலில் வாழும் நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது குடும்பத்தினரும் பெருமிதத்தின் உச்சத்தில் வைத்துப் பார்க்க வேண்டியவர்கள்.

சியாச்சின் நிலவும் காலநிலை அனைவரும் அறிந்ததே. 1984-ல் இங்கு இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரில் சுமார் 2000 பேர் உயிர்நீத்தனர். இதில் பெரும்பாலானோர் மோசமான காலநிலையால் உயிரிழந்தவர்கள்தான். ஆனால், இங்கிருக்கும் கடுமையான மற்றும் மோசமான குளிரையும் பொருட்படுத்தாமல் நாட்டை காக்கும் பணியில் திறமையுடன் செயல்பட்டு, முன்னின்று செயல்படும் வீரரகள், உண்மையில் நம்மை உலக அளவில் பெருமையடையச் செய்கின்றனர்" என்றார் மோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x