Last Updated : 11 Apr, 2017 09:43 AM

 

Published : 11 Apr 2017 09:43 AM
Last Updated : 11 Apr 2017 09:43 AM

காஷ்மீர் பிரச்சினை தீர மூன்றாவது நாடு உதவினால் என்ன தவறு?

உலகம் முழுவதிலும் வாக்காளர்கள் இப்போது மூன்று வார்த்தைகளை விரும்புகிறார்கள், மூன்று வார்த்தைகளை வெறுக்கிறார்கள்.

மாற்றம், இப்போதுள்ளதைத் தொடராமல் நிறுத்துவது, ஏற்கெனவே உலவி வரும் அரசியல் சித்தாந்த அமைப்புகளையும் நம்பிக்கைகளையும் நிராகரிப்பதை விரும்புகிறார்கள்.

இப்போதிருப்பதை மாற்றக்கூடாது, பழைய நிறுவனங்களைக் கலைக்கக் கூடாது, யாரையும் ஒதுக்கிவிடாமல் அனைவரையும் அரவணைப்பது முக்கியம் என்ற கருத்துகளை வெறுக்கிறார்கள். இதனால்தான் நரேந்திர மோடியால் பதவிக்கு வர முடிந்ததுடன் தொடர் வெற்றிகளைப் பெற முடிகிறது. சமீபத்திய உதாரணம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

டெல்லி மாநகரில் அரசியல் நடவடிக்கைகளைப் பின்னாலிருந்து இயக்கிக் கொண்டிருந்த லுட்யன்களை (அரசியல் தரகர்கள்) குறிவைத்து மோடி செயல்பட்டார். பழைய அமைப்புகளையும் ஏற்பாடுகளையும் தூக்கி எறிந்தார். அவர்களுடைய சிந்தனைகளையும் போலி தன்னடக்கத்தையும் புறக்கணித்தார். ஆம்ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் கூட தனது அரசியலின் ஆரம்ப கட்டத்தில், வெவ்வேறு கட்சிகளில் இருந்தாலும் ஆதிக்க சக்திகள் ஒற்றுமையாக இருந்து அதிகாரத்தைத் தங்களுடைய கட்டுக்குள் வைத்துக்கொண்டு பலன்களை அனுபவிக்கின்றன என்று சாடினார்.

பழைய நிறுவனங்களும் சிந்தனைகளும் பயன்படாதவை, ஊழலுக்கு வழிவகுப்பவை, போலியான அறிவுஜீவித்தனத்துக்கு வித்திடுபவை, காலாவதியானவை என நிராகரித்தால், இவற்றின் பின்னால் உள்ள மையக் கருத்துகளையும் நிராகரிக்க வேண்டும். நாட்டு மக்களுக்கு ட்ரம்ப் அளித்த வாக்குறுதி அல்லது அரசியல் எதிரிகளுக்கு அவர் கொடுத்த எச்சரிக்கை எது என்று பார்த்தால் ஐரோப்பா தொடர்பான அமெரிக்கக் கண்ணோட்டத்தை மாற்றிக்காட்டுகிறேன் என்பதே.

உலகில் அமெரிக்கக் கட்டமைப்புக்கு ஐரோப்பா முக்கியம் என்பதுதான் இதுவரையில் ஜனநாயக, குடியரசு கட்சிகளின் தீர்மானமான முடிவு.

வாஷிங்டன் வந்த ஜெர்மன் அதிபர் ஏஞ்செலா மெர்கெலிடம் பேசிய ட்ரம்ப், நேட்டோ செலவுகளுக்கு உங்கள் பங்காக பெரும் தொகையை தந்தாக வேண்டும் என்று நேரடியாகக் கூறிவிட்டார். இதுவரை எந்த அமெரிக்க அதிபரும் இப்படிக் கேட்டதில்லை.

இந்தியாவின் உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகளிலும் இத்தகைய மாற்றத்தை நாம் பார்க்கிறோம். அமெரிக்காவிடம் ரொம்பவும் நெருங்கக்கூடாது என்று வெளியுறவுத்துறை விடுத்த எச்சரிக்கையைப் புறக்கணித்தார் மோடி. சீனத்தைக் கவர்ந்திழுக்க தூண்டில் போட்டார். அவருக்கு முன்பிருந்த வாஜ்பாய், மன்மோகன் கடைப்பிடித்த அணுகுமுறையிலிருந்து விலகினார். டெல்லியின் அதிகாரத் தரகர்களின் கும்பலை ஒழித்ததுடன் அவருடைய கட்சியின் சித்தாந்தத்துக்கு ஒத்துவருகிறவர்களைக் கொண்டு புதிய அமைப்புகளை உருவாக்கி வருகிறார். எனவேதான் முக்கியமான ஒரு துறையில் நாம் மாறுபட்ட அணுகுமுறையை அவரிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

“இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உறவு மோசமாவது குறித்துக் கவலைப்படுகிறோம். ஏதாவது விபரீதமாக நடக்கும்வரை காத்திருக்காமல் இரு நாடுகளுக்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்த விரும்புகிறோம்” என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கப் பிரதிநிதி நிக்கி ஹேலி கூறியிருக்கிறார். உடனே இந்திய அரசியல் விமர்சகர்களும் வெளியுறவுத் துறையினரும் அதை விமர்சித்துள்ளனர். இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினையில் வேறு நாடு தலையிட முடியாது என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

மூன்றாவது நாடு தலையிடுவதை ஏன் இந்தியா ஏற்க மறுக்கிறது? அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும் பிரதமர் மோடி இவற்றை மறுஆய்வு செய்ய வேண்டும். கடந்த 44 ஆண்டுகளாக விவாதிக்கப்படாமலிருந்தவற்றை இம்முறை மனம் விட்டுப் பேச வேண்டும். காஷ்மீர் விவகாரம் நம்மிரு நாடுகளுக்குள் பேசித் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டியது என்பதை வலியுறுத்தியது சிம்லா ஒப்பந்தம்தான். எனவே இந்தியா இதையே அடிக்கடி மேற்கோள் காட்டி வருகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் மக்களிடம் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்துவதை ஆதரிக்கின்றன.

இவை இந்திய நலனுக்கு எதிரானவை என்பதால் நிராகரிக்கப்படுகின்றன. ஆனால் சிம்லா ஒப்பந்தம் ஏற்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டது. 1989 முதல் காஷ்மீர் தொடர்பாக புதிய பிரச்சினைகள் தொடங்கிவிட்டன. இந்தியா பாகிஸ்தான் நாடுகளின் சமநிலையும் மாறிவிட்டன. பொருளாதார வளர்ச்சி வேகத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா, பாகிஸ்தானைவிட 5% முன்னிலையில் இருக்கிறது. பாகிஸ்தான் மக்கள் தொகை வளர்ச்சி வீதத்தில் பாதியில்தான் இந்தியா இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியன் நுழைந்த 1979 முதல், மேற்கத்திய நாடுகளுக்கு கையாளாக இருந்துவருகிறது பாகிஸ்தான். மும்பை தொடர் குண்டுவெடிப்பு, ஆப்கானிஸ்தானில் நடந்துவரும் இரண்டாவது யுத்தம் ஆகியவற்றுக்குப் பிறகு பாகிஸ்தான் பற்றிய அபிப்ராயங்களை மேற்கத்திய நாடுகள் மாற்றிக்கொண்டுள்ளன.

உலக அரங்கில் வளர்ந்துவரும் பொருளாதார சக்தியாகப் பார்க்கப்படுகிறது இந்தியா. அதன் ராணுவம் வலிமையடைந்து கொண்டே வருகிறது. அரசியல் ஸ்திரத்தன்மை இந்திரா காந்தி காலத்துக்குப் பிறகு இப்போதுதான் உச்சத்தில் இருக்கிறது. இதை இந்தியாவின் நட்பு நாடுகளும் எதிரி நாடுகளும் கூட ஒப்புக்கொள்கின்றன. எனவே பழைய அச்சங்களை உதறிவிட்டு காஷ்மீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.

இந்தியாவும் பாகிஸ்தானும் இப்போது எதிலும் சமமாக இல்லை. இருதரப்புப் பேச்சுவார்த்தை களுக்கு இரு நாடுகளுக்கும் இடையிலும் நாம் சமம் என்ற எண்ணம் ஓரளவுக்காவது இருக்க வேண்டும். இதையே நம்முடைய நிலைக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நிலையான அரசுகள் உள்ள நாடுகளால்தான் இருதரப்பு ஒப்பந்தங்களைச் செய்துகொண்டு அமல்படுத்த முடியும். முஷாரஃப்புக்குப் பிறகு பாகிஸ்தானில் ஜனநாயகம் வெகுதூரம் பயணப்பட்டிருக்கிறது. ஆயினும் கொள்கை வகுக்கும் முக்கிய இடத்தில் அரசு இல்லை.

பாகிஸ்தானுக்காக யார் கையெழுத்து போடுவார்கள்? இப்போதுள்ள ஆட்சியாளர்களை ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் நீக்கிவிட்டோ, கைது செய்து சிறையில் அடைத்துவிட்டோ, கொலை செய்துவிட்டோ அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டால் சர்வதேச உடன்பாடுகளை அமல்படுத்துவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அடுத்த பொதுத் தேர்தலில் இம்ரான்கான் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதமர் ஆனால், அவர் நவாஸ் ஷெரீஃப் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்க முடியுமா?

சிம்லா, லாகூர், இஸ்லாமாபாத் ஒப்பந்தங்களை ஏற்க முடியாது என்று பாகிஸ்தான் ஏற்கெனவே அறிவித்துள்ளது. தொடர்ந்தும் அப்படியேதான் அறிவிக்கும். நம்முடைய பிரச்சினைகளைத் தீர்க்க இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியும் தோல்விதான் கண்டோம். எதிர்காலத்திலும் பாகிஸ்தானுடன் பேசி ஒப்பந்தம் செய்துகொண்டாலும் அது நீடிக்காது. எனவே சர்வதேசத் தலையீடு மூலமோ அல்லது வல்லரசு ஒன்றின் மத்தியஸ்தத்தின் பேரிலோதான் இப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள முடியும். நம்முடைய வலு உச்சத்திலிருக்கும்போது, மூன்றாவது தரப்பின் உதவியைக் கேட்போம்.

- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர், இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர், இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர். தொடர்புக்கு: shekhargupta653@gmail.com தமிழில் சுருக்கமாக: ஜூரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x