Published : 05 Nov 2013 10:09 AM
Last Updated : 05 Nov 2013 10:09 AM

5 விதிகளின் அடிப்படையில் இந்திய வெளியுறவுக் கொள்கை: பிரதமர் மன்மோகன் சிங்

ஐந்து விதிகளின் அடிப்படையில் இந்திய வெளியுறவுக் கொள்கை வரையறுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

தனது 9 ஆண்டுகால ஆட்சியில் தேச நலனைக் கருத்திற்கொண்டு அடிப்படை வெளியுறவுக் கொள்கை மறுசீரமைக்கப்பட்டு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

உலகின் பல்வேறு நாடுகளில் பணியாற்றும் 120 இந்தியத் தூதர்கள் பங்கேற்கும் 4 நாள் மாநாடு டெல்லியில் திங்கள்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், பல்வேறு நிர்ப்பந்தங்களுக்கு இடையில் இந்தியத் தூதர்கள் வெகு சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர் என்று பாராட்டுத் தெரிவித்தார்.

அவர் மேலும் பேசியதாவது:

ஐந்து முக்கிய விதிகளின் அடிப்படையில் இந்திய வெளியுறவுக் கொள்கை வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு உகந்த சர்வதேச சூழ்நிலையை உருவாக்குவது, இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் வகையில் சர்வதேச நாடுகளுடன் ஒருங்கிணைந்துச் செயல்படுதல், உலகின் வல்லரசுகளோடு ஸ்திரமான, நீண்டகால, பரஸ்பரம் பயனளிக்கும் வகையில் உறவைப் பேணுதல், அண்டை நாடுகளுடன் பிராந்திய ஒத்துழைப்பு, நல்லுறவைக் கடைப்பிடித்தல், நமது மக்களின் விருப்பத்துக்கு மதிப்பளித்து செயல்படுவது ஆகிய ஐந்து விதிகள்தான் இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படை என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.

இந்த மாநாட்டில் பாகிஸ்தான் ராணுவத்தின் போர் நிறுத்த மீறல், சீனாவுடனான எல்லைப் பிரச்சினை ஆகியவை குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளன.

மேலும் அமெரிக்கா, கனடா, லத்தீன் அமெரிக்க நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், கரிபீயன் நாடுகள் குறித்தும் சர்வதேச சமூக பொருளாதார நிலவரம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x