Last Updated : 03 Jun, 2016 03:23 PM

 

Published : 03 Jun 2016 03:23 PM
Last Updated : 03 Jun 2016 03:23 PM

மதுரா கலவரம் பின்னணி: சத்யாகிரஹியினரின் ஆக்கிரமிப்பும் அரிய கோரிக்கைகளும்

மதுரா நகரின் ஜவஹர் பாக் பகுதி வியாழக்கிழமை மாலை பற்றி எரிந்து இன்று அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாகியுள்ளது. ஒரே நாளில் கலவர பூமியாக மாறியிருக்கிறது அப்பகுதி. | விரிவான செய்தி >>மதுரா கலவர பலி 24 ஆக அதிகரிப்பு: 124 பேர் கைது

போலீஸாருடன் சண்டையிட்ட போராட்டக்காரர்கள் தானியங்கி ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் தாக்குதலில் மாவட்ட எஸ்.பி.யும் போலீஸ் ஆய்வாளர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

20-க்கும் மேற்பட்ட போலீஸார் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் வீசி எறிந்த கையெறி குண்டுகள் தாறுமாறாக வெடித்துச் சிதறியதில் அவர்களது கூடாரங்களும் சேதமாகின. நெருப்பில் வெடித்த எல்.பி.ஜி. சிலிண்டர்களால் தீ பரவி 22 பேர் பலியாகியுள்ளனர்.

இப்படி அதிர வைக்கும் கலவரத்துக்கு பின்னணியில் இருப்பது 'ஆசாத் பாரத் விதிக் வைசாரிக் கிராந்தி சத்யாகிரஹி' அமைப்பினர் ஆவர்.

ஆக்கிரமிக்கப்பட்ட ஜவஹர் பாக்

ஜவஹர் பாக் பகுதி உத்தரப் பிரதேச மாநில அரசின் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான இடம். 100 ஏக்கருக்கும் மேல் நிலப்பரப்பு கொண்ட பகுதி. இப்பகுதியை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தர்ணா போர்வையில் ஆக்கிரமித்தனர் ஆசாத் பாரத் விதிக் வைசாரிக் கிராந்தி சத்யாகிரஹி அமைப்பினர். இவர்கள் பாபா ஜெய் குருதியோ பிரிவில் இருந்து பிரிந்தவர்களாவர்.

இவர்களது பிரதான கோரிக்கைகள் குடியரசுத் தலைவர், பிரதமர் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள இந்திய ரூபாய்க்கு பதிலாக ஆசாத் ஹிந்த் பவுஜ் என்ற பெயரில் பணத்தை அச்சிட வேண்டும். ஒரு ரூபாய் விலையில் 60 லிட்டர் டீசல், 40 லிட்டர் பெட்ரோல் வழங்க வேண்டும் போன்றவையாகும். இவ்வாறான அரிதாகக் கருதப்படும் கோரிக்கைகளை முன்வைத்து அவ்வப்போது சில போராட்டங்களை நடத்துகின்றனர்.

இந்நிலையில்தான், சத்யாகிரஹி அமைப்பினர் இரண்டு ஆண்டுகளாக அரசு நிலத்தை ஆக்கிரமித்திருப்பது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அரசு நிலத்தில் இருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையிலேயே ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீஸார் ஜவஹர் பாக் வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து கலவரம் வெடித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x