Last Updated : 11 Feb, 2017 10:54 AM

 

Published : 11 Feb 2017 10:54 AM
Last Updated : 11 Feb 2017 10:54 AM

உத்தரப் பிரதேச முதல்கட்ட தேர்தலில் 100 சிறிய கட்சிகள் போட்டி: இந்து வாக்குகள் பிரிவதால் பாஜக அச்சம்

ஏழு கட்டங்களாக தேர்தலை சந்திக் கும் உ.பி.யில் இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு உ.பி.யில் உள்ள 73 தொகுதிகள் இன்று தேர்தலை சந்திக்கின்றன. இந்நிலையில் இங்கு சுமார் 100 சிறிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

இவற்றில் ‘மஹிளா சஷ்திகரன்’ என்ற கட்சி பெண்களின் பாதுகாப்பு, கவுரவம் ஆகியவற்றை முன்னிறுத்தி போட்டியிடுகிறது. மேற்கு உ.பி.யில் ‘காப்’ பஞ்சாயத்துகள் அவ்வப்போது பெண்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து சர்ச்சையை கிளப்புவதால் இதற்கு எதிராக இக்கட்சி போட்டியிடுகிறது. பிரிஜ் கிராந்தி தளம், பச்மி உத்தர் பிரதேஷ் பார்ட்டி ஆகிய கட்சிகள் பிரிஜ் பிரதேசமான மேற்கு உ.பி.யை தனி மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தி வாக்கு கேட்கின்றன. இதுபோல் பல்வேறு சிறிய கட்சிகள் உள்ளூர் பிரச்சினைகளை முன்வைத்தும், குறிப்பிட்ட சமூகத்தினரைக் குறி வைத்தும் வாக்கு கேட்கின்றன.

கரும்பு மற்றும் உருளைக் கிழங்கு விவசாயிகள் அதிகம் உள்ள இப்பகுதியில் இரண்டு டஜன் விவசாயக் கட்சிகளும் போட்டியில் உள்ளன. இவை மட்டுமின்றி, முசாபர்நகர், ஷாம்லியில் 2013 மதக் கலவரத்துக்கு பிறகு உதயமான மத நல்லிணக்க கட்சிகளும் களத்தில் உள்ளன. இதனால் முதல்கட்ட தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது.

இவற்றில் பெரும்பாலான கட்சிகள் இந்துக்களை வேட்பாளர் களாக நிறுத்தியுள்ளன. இதனால் இந்து வாக்குகள் பிரியும் என பாஜக அஞ்சுவதாக தெரியவந்துள்ளது. இப்பகுதியில் முஸ்லிம் வாக்காளர் கள் அதிகம் என்பதால் இங்கு முஸ்லிம் வேட்பாளர்களையே சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் நிறுத்துவது வழக்கம். சிலசமயம் இங்கு 2 முஸ்லிம் வேட்பாளர்கள் நின்றாலும் பாஜக எளிதில் வென்றுவிடும்.

உ.பி.யில் முதல்கட்ட தேர்தலில் 839 வேட்பாளர்கள் போட்டியிடுகின் றனர். இவர்களில் 293 பேர் சுயேச்சைகள், 261 பேர் சிறிய கட்சி களை சேர்ந்தவர்கள். இவர்களில் 77 பெண் வேட்பாளர்களும் உள்ளனர்.ஜாட் சமூகத்தினர் அதிகம் உள்ள மேற்கு உ.பி.யில் அவர்களை மையமாக வைத்து அஜீத்சிங் தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் தளம் இயங்குகிறது. இம்முறை தனித்து போட்டியிடும் இக்கட்சி இங்கு 53 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

மேலும் பகுஜன் சமாஜ், பாஜக சார்பில் தலா 73 பேர், சமாஜ்வாதி சார்பில் 51 பேர், காங்கிரஸ் சார்பில் 24 பேர் களத்தில் உள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் 5 தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 4 தொகுதி களிலும் போட்டியிடுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x