Published : 14 Sep 2016 07:35 AM
Last Updated : 14 Sep 2016 07:35 AM

கர்நாடகா - தமிழகம் இடையே போக்குவரத்து துண்டிப்பு: மணக்கோலத்தில் ஓசூர் எல்லைக்கு நடந்து வந்த மணமக்கள்

பெங்களூர் கலவரத்தைத் தொடர்ந்து கர்நாடகா - தமிழகம் இடையே பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், பெங்களூரு வில் இருந்து மணப்பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பயணிகள் கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் இருந்து ஓசூர் எல்லைக்கு நடந்து வந்தனர்.

காவிரி பிரச்சினை தொடர்பாக பெங்களுருவில் நேற்று முன்தினம் இரவு முதல் கலவரம் மூண்டதால் தமிழகப் பேருந்துகள் ஓசூர் எல்லையான ஜூஜூவாடியுடன் நிறுத்தப்பட்டன. இந்த நிலை நேற்றும் தொடர்ந்ததால் பெங்களுருவில் இருந்து தமிழகத்துக்கு புறப்பட்ட பயணிகள், கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வரை கர்நாடக பேருந்துகள் மற்றும் ஆட்டோ, வேன் போன்ற வாகனங்களில் வந்தனர். அத்திப்பள்ளியில் இறக்கிவிடப்பட்ட தமிழகப் பயணிகள், அங்கிருந்து சுமார் 3 கி.மீ தூரத்தில் உள்ள தமிழக எல்லையான ஜூஜூவாடிக்கு நடந்து வந்தனர்.

மணக்கோலத்தில் வந்த பெண்

அத்திப்பள்ளியில் இருந்து ஜூஜூவாடி வரை நடந்து வந்த பயணிகள் கூட்டத்தில் திருமணக் கோலத்தில் ஒரு இளம் பெண் நடந்து வந்து கொண்டிருந்தது அங்கிருந்தவர்களின் கவனத்தைக் கவர்ந்தது. இதுகுறித்து அந்த பெண் கூறும்போது, ‘‘என் பெயர் பிரேமா (25). பெங்களுருவில் வசித்து வருகிறேன். எனக்கும் தமிழ்நாட்டில் வாணியம்பாடியில் உள்ள இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இந்த திருமணம் நாளை (இன்று) வாணியம்பாடியில் நடக்க உள்ளது. அங்கு செல்வதற்காக நான் திருமணக் கோலத்தில் புறப்பட்டு வந்துள்ளேன். என்னுடைய திருமணத்தில் பங்கேற்க உறவினர்கள், நண்பர்கள் சுமார் 600 பேருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பெங்களுருவில் ஏற்பட்டுள்ள கலவரத்தினால் 20 பேர் மட்டுமே என்னுடன் புறப்பட்டு வந்துள்ளனர். இதனால் என்னுடைய திருமண நிகழ்ச்சியை பெரிய அளவில் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை என்னுடைய வாழ்நாளில் என்றுமே மறக்க மாட்டேன். கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு நடந்து கொள்வது முறையானதாகத் தெரியவில்லை. இரு மாநிலத்தவரும் ஒரே நாடான இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மணக்கோலத்தில் நடந்து வந்த பிரேமா திருமண பட்டுப் புடவை உடுத்தி தங்க நகைகள் அணிந்திருந்தார். அவருடன் வந்த உறவினர்கள் திருமணத்துக்குத் தேவையான பொருட்கள் உள்ள மூட்டைகளை சுமந்தபடி நடந்து சென்றனர். இவர்கள் அனைவரும் ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து தமிழக அரசுப் பேருந்தில் வாணியம்பாடி புறப்பட்டு சென்றனர்.

மற்றொரு மணப்பெண் தவிப்பு

அத்திப்பள்ளியில் இருந்து கர்நாடக எல்லையைத் தாண்டி நடந்து வந்தவர்களில், மற்றொரு மணப்பெண்ணும் இருந்தார். மணக் கோலத்தில் இருந்த பெங்களுரு ஜெ.சி. நகரைச் சேர்ந்த சவுமியா வுக்கும், அவரது தாய் மாமன் ரஞ்சித் துக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது.

இவர்களது திருமணம் சங்கராபுரத்தில் இன்று நடக்கிறது. இரு மாநிலங்களுக்கும் இடையே பேருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், சவுமியா, ரஞ்சித் மற்றும் அவரது உறவினர்கள் அத்திப்பள்ளியில் இருந்து ஜூஜூவாடிக்கு நடந்து வந்தனர்.

இதுகுறித்து சவுமியாவின் தாய் புவம்மா கூறும்போது, ‘‘எனது மகள் சவுமியாவுக்கும், என் தம்பி ரஞ்சித்துக்கும் கடந்த ஞாயிறு அன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நாளை (இன்று) சங்கராபுரத்தில் திருமணம் நடக்க உள்ளது. பேருந்து கள் இல்லாததால், கர்நாடக எல்லை யில் இருந்து நடந்து வருகிறோம்,’’ என்றார். இவர்களுடன் 25-க்கும் மேற்பட்ட உறவினர்கள் கல்யாண பொருட்களுடன் கூட்டமாக நடந்து வந்தனர்.

கலங்கி நின்ற கர்ப்பிணி

ஓசூர் எல்லையை நோக்கி நடந்து வந்தவர்களில் நிறைமாதக் கர்ப்பிணிப் பெண் மாலாவும் ஒருவர். இவரை கணவர் மனோகர் கைத் தாங்கலாக பிடித்தபடி எல்லைப் பகுதியில் நடந்து வந்தார். பேருந்தில் இடம் கிடைக்குமா என்ற கவலையில் கணவன், மனைவி இருவரும் கலக்கத்துடன் பதற்றமாக காணப்பட்டனர். அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்கள், அருகில் இருந்த ஆட்டோவை அழைத்து தம்பதியை இலவசமாக ஓசூர் பேருந்து நிலையம் அனுப்பி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x