Published : 31 Oct 2014 09:57 AM
Last Updated : 31 Oct 2014 09:57 AM

ஏழுமலையானை விமர்சித்து திருமலையில் வேற்று மத பிரச்சாரம் செய்தவர் கைது

திருப்பதி ஏழுமலையான் கோயில் முன்பு வேற்று மத பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத போதகர் கைது செய்யப்பட்டார்.

திருமலை-திருப்பதி தேவஸ்தான இடங்களில் வேற்று மத பிரச்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணா மாவட்டம், ராமா நகரம் கிராமத்தை சேர்ந்த மத போதகர் சுதீர் என்பவர் தனது சகோதரர் சுகுமார், சக போதகர்களான ஜோசப், டேவிட், ஏசுரத்தினம் ஆகியோருடன் கடந்த ஆண்டு நவம்பரில் திருமலைக்கு காரில் சென்றார்.

அப்போது அலிபிரி வாகன சோதனையில் இவர்களது கார் சோதனை செய்யப்பட்ட போது சில மத பிரச்சார கையேடுகள் இருந்துள்ளன. அதை போலீஸார் பறிமுதல் செய்தனர். இவர்கள் ஏழுமலையானை தரிசிக்க போவதாக தெரிவித்ததால் திருமலைக்கு அனுமதித்தனர்.

திருமலைக்கு செல்லும் வழியில் ஆங்காங்கே காரை நிறுத்தி மத பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் இரவு திருப்பதி ஏழுமலையான் கோயில் முன்பு பிரார்த்தனை செய்ததோடு கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். இவை அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்தனர். பின்னர் யூ-டியூபில் அப்லோட் செய்துள்ளனர். இந்த தகவல் நேற்றுமுன் தினம் தெரியவந்தது.

இது குறித்து தேவஸ்தான கண்காணிப்பு அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் திருமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து மதபோதகர் சுதீரை அவரது சொந்த கிராமமான ராமா நகரத்தில் நேற்று கைது செய்தனர்.

அவர் பிரச்சாரத்துக்கு பயன்படுத்திய கார், லேப்டாட், வீடியோ கேமரா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

யார் இந்த சுதீர் ?

இதுகுறித்து திருப்பதி எஸ்.பி கோபிநாத் ஜெட்டி கூறியதாவது:

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம், ராமா நகரம் கிராமத்தை சேர்ந்தவர் சுதீர். நாகார்ஜுனா பல் கலைக்கழகத்தில் எம். ஏ. முதுகலை பட்டப்படிப்பு படித்துள்ளார். இவருக்கு புஷ்ப குமாரி என்கிற மனைவியும் மகனும் உள்ளனர். இவர் தற்போது ஹைதராபாத் வனஸ்தலிபுரத்தில் குடும்பத்தின ருடன் வசித்து வருகிறார். இவர் 1983-ல் இம்மானுவேல் பாப்பிஸ்ட் மினிஸ்டிரி ஆஃப் இந்தியா ( ஐ.பி.எம்.ஐ) என்கிற நிறுவனத்தை நிறுவி இதற்கு இயக்குனராகவும் இருந்து வருகிறார். ஆந்திரா, தெலங்கானா மட்டுமின்றி பல வெளி மாநிலங்களுக்கு சென்று மத பிரச்சாரம் செய்து பல வேற்று மதத்தினரை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றி உள்ளார் என்று தெரிவித்தார்.

ஒரு வாரத்துக்கு முன்பு சமூக வலைதளத்தில்...

தெலங்கானாவை பிரிக்கக் கூடாது என சீமாந்திரா பகுதி மக்களின் போராட்டம் கடந்த ஆண்டு நவம்பரில் மும்முரமாக நடைபெற்றது. அந்த சமயத்தில் நவம்பர் 18-ம் தேதி சுதீர் திருமலைக்கு சென்றார். அப்போது வழியில் பல இடங்களில் காரை நிறுத்தி மத பிரச்சாரத்தில் ஈடுபட்டதையும் திருமலையில் பிரார்த்தனை செய்ததோடு ஏழுமலையானை விமர்சிக்கும் காட்சிகளையும் உடன் வந்தவர்கள் மூலம் வீடியோ பதிவு செய்துள்ளார். பின்னர் ஹைதராபாத் சென்ற இவர் இதனை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ய முடிவெடுத்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த வீடியோ காட்சிகளை எடிட்டிங் செய்ய பல இடங்களில் திரிந்துள்ளார். பலர் இதனை எடிட்டிங் செய்ய முன்வரவில்லை என கூறப்படுகிறது. பின்னர் கடந்த வாரம் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த காட்சிகளை தனியார் தெலுங்கு தொலைக்காட்சி செய்தி சேனல் நேற்றுமுன் தினம் இரவு ஒளிபரப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தேவஸ்தான நிர்வாகம் சார்பில் போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் அவரது கார் எண்ணை வைத்து சுதீரை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x