Last Updated : 23 Dec, 2015 03:03 PM

 

Published : 23 Dec 2015 03:03 PM
Last Updated : 23 Dec 2015 03:03 PM

நாடாளுமன்ற கூட்டத் தொடர் நிறைவு: அமளி துமளிகளை மீறி 13 மசோதாக்கள் நிறைவேற்றம்

பல்வேறு விவகாரங்களில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிகளுக்கிடையே 13 மசோதாக்கள் நிறைவேற்றத்துடன், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று (புதன்கிழமை) நிறைவுற்றது.

ஆனால், முந்தைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரைக் காட்டிலும் இந்தக் குளிர்கால கூட்டத் தொடர் சற்றே ஆக்கபூர்வமானது என்று கூறலாம். கடந்த முறை லலித் மோடி விவகாரத்தில் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோரது ராஜினாமாக்களை கோரியும், வியாபம் ஊழல் தொடர்பாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ராஜினாமா கோரியும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கடந்த கூட்டத்தொடர் விரயமானது.

ஆனால், இன்று நிறைவடைந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் 13 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, சிறார் நீதிச் சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.

அவையில் நிறைவு உரையாற்றிய சபாநாயகர் சுமித்ரா மகாஜன், "வரும் புத்தாண்டு நமக்கு புதிய நம்பிக்கையையும் புதிய ஆற்றலையும் அளிக்கும் என்று நம்புகிறேன், புத்தாண்டில் தீர்மானகரமான முடிவுகளை எடுப்போம், எதிர்ப்பையும், மறுப்பையும் நாடாளுமன்ற விதிமுறைகளின்படி ஆக்கபூர்வமாக வலிமையாகச் செய்யும் அதேவேளையில் இனி இடையூறுகள் அதிகமில்லாத கூட்டத்தொடர்களை எதிர்நோக்குவோம்" என்று நம்பிக்கை தொனியில் பேசினார்.

மக்களவை ஒத்திவைப்புக்கு முன் மன்னிப்புக் கோரிய சுமித்ரா

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 26-ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த மசோதா இந்த முறையும் நிறைவேற்றப்படவில்லை.

சகிப்பின்மை விவகாரம், தமிழக மழை வெள்ள பாதிப்பு, நேஷனல் ஹெரால்டு வழக்கு, டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் மக்களவையில் எதிரொலித்தன.

இன்று மாநிலங்களவையில் அயோத்தி சர்ச்சை வெடித்தது. அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவதற்காக கற்கள் கொண்டுவரப்பட்டுள்ளது குறித்து சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த சில நாட்களாக ஜேட்லி பதவி விலகக் கோரி காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கின.

இந்நிலையில் இன்று (புதன்கிழமை) மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தனது வார்த்தையை அவை குறிப்பில் இருந்து நீக்குவதாக தெரிவித்தார்.

மக்களவை வரலாற்றில் அதன் சபாநாயகர் ஒருவர் தனது வார்த்தையை அவை குறிப்பில் இருந்து நீக்குவதாக கூறியிருப்பது அரிய நிகழ்வாகும்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) மக்களவையில் அவையின் மையப்பகுதியில் கூடி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டபோது, "காழ்ப்புணர்ச்சியால் அமளியில் ஈடுபடுகிறீர்கள்" என சுமித்ரா கூறியிருந்தார்.

சபாநாயகர் இத்தகைய கருத்தை தெரிவித்திருக்கக் கூடாது என பரவலாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மக்களவையில் இன்று பேசிய சுமித்ரா மகாஜன், "எந்த ஒரு கட்சியின் பெயரையும் குறிப்பிட்டு நான் கருத்து தெரிவிக்கவில்லை. நிச்சயமாக எனது கருத்தை அவை குறிப்பிலிருந்து நீக்குகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள்" என்றார்.

இந்திய அரசமைப்புச் சட்டம் இயற்றிய டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 125-வது பிறந்த தின அனுசரிப்புடன் தொடங்கிய குளிர்காலக் கூட்டத்தொடர், அருண் ஜேட்லி-டெல்லி கிரிக்கெட் சங்க விவகாரம், ராமர் கோயிலுக்கு கட்டுமான கற்கள் வந்திறங்கிய விவகாரம் ஆகிய சர்ச்சைகளினால் காலவரையின்றி ஒத்திவைப்புடன் நிறைவுற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x