Published : 11 Oct 2014 04:18 PM
Last Updated : 11 Oct 2014 04:18 PM

ஹுத்ஹுத் புயல் எச்சரிக்கை: ஒடிசா கடலோர மாவட்டங்களில் 3.5 லட்சம் பேர் வெளியேற்றம்

ஹுத்ஹுத் புயல் நெருங்கி வரும் நிலையில், ஒடிசா மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. 3.5 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கடலோர மாவட்டங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதுவரை 39 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 2 விமானங்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சிறப்பு நிவாரண ஆணையர் பி.கே.மொஹபத்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், "கோராபட், மல்கான்கிரி, கஜபதி, ராயகடா, கஞ்சம், கலாஹண்டி, காந்தமால் ஆகிய பகுதிகளில் மக்கள் பாதுகாப்புக்கான இடங்களுக்கு அப்புறப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை 3.5 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

புயல் வேகமாக நெருங்கி வரும் நிலையில், மாநிலத்தின் தெற்கு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 15 படையினரும், ஒடிசா மாநில பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 10 படைப்பிரிவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகங்கள் பிரெட் போன்ற உணவுப் பொருட்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சில மாவட்டங்களில் பழங்குடியின மக்கள் தங்கள் வசிப்பிடத்தைவிட்டு வெளியேற மறுப்பதால், அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதில் சிக்கல் நிலவுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 100 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். நாளை மதியம் முதல் 36 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழையளவு 10 செ.மீ முதல் 25 செ.மீ வரை பதிவாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x