Last Updated : 05 Mar, 2017 03:37 PM

 

Published : 05 Mar 2017 03:37 PM
Last Updated : 05 Mar 2017 03:37 PM

ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கின்றன: மத்திய அரசு

ஆதார் அட்டைக்காக குடிமக்களிடமிருந்து பெறப்படும் பயோமெட்ரிக் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள அரசு, ஆதார் தகவல்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு மட்டும் அரசு மானியங்களை வழங்குவது மூலம், கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசு கருவூலத்துக்கு ரூ.49,000 கோடி சேமிப்பு கிட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஆதார் திட்டத்தை ஒருங்கிணக்கும் இந்திய பிரத்யேக அடையாள எண் ஆணையம் (யுஐடிஏஐ) அமைப்பின்படி, "ஆதார் பயோமெட்ரிக் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன என்ற புகாருக்கே இடமில்லை. கடந்த 5 ஆண்டுகளில் ஆதார் சரிபார்ப்பின்படி 400 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றிருக்கின்றன.

ஆதார் தகவல் திருடப்பட்டதாக வந்த புகார்கள் அனைத்தையும் மிகக் கவனமாக நாங்கள் ஆய்வு செய்தோம் ஆனால் அப்படி எந்த ஒரு திருட்டு அத்துமீறலும் நடக்கவில்லை என்பதே உண்மை.

ஆதார் அடிப்படையிலான தனிநபர் தகவல் சரிபார்க்கும் முறை சமகாலத்தில் உள்ள மற்ற நடைமுறைகளைக் காட்டிலும் பாதுகாப்பானது. தகவல் திருட்டு ஏதாவது நடைபெறுவம் சந்தேகம் ஏற்பட்டால்கூட ஆதார் நடைமுறையில் உடனடியாக அதனைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பிருக்கிறது.

செய்தித்தாள் ஒன்றில் வெளியான 'ஆதார் தகவல் திருட்டு' செய்தியை சுட்டிக்காட்டிய யுஐஏடிஐ, "வங்கி ஒன்றின் பிசின்ஸ் தொடர்பு பணிகளை மேற்கொண்டிருந்த நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் தனது ஆதார் பயோமெட்ரிக் தகவலை அவரே மாற்றியமைக்க முயன்றிருக்கிறார். அப்போது, அதை ஆதார் பாதுகாப்பு அமைப்பு கண்டுபிடித்துள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

அரசின் நல்லாட்சிக்கும் மக்களுக்கு அதிகாரமளித்தளிலும் ஆதாரின் பங்கு மிக முக்கியமானது. ஆதார் மூலம் 4.47 கோடி மக்கள் கேஒய்சி திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்குகளை தொடங்கியிருக்கின்றனர்.

அதேவேளையில், ஆதார் அட்டையில் இருக்கும் பயோமெட்ரிக் தகவல்களை தவறாக பயன்படுத்துவது ஆதார் சட்டப்படி கிரிமினல் குற்றம் என்றும் யுஐடிஏஐ தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x