Published : 04 Mar 2014 08:25 PM
Last Updated : 04 Mar 2014 08:25 PM

மக்களவை தேர்தல்: தேதி இன்று அறிவிப்பு

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேர்தல் அட்டவணை, தேர்தல் ஆணையத்தால் இன்று வெளியிடப்படுகிறது.

இதில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன் மத்திய, மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.

தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத், தேர்தல் ஆணை யர்கள் எச்.எஸ்.பிரம்மா, எஸ்.என்.எஸ். ஜைடி ஆகியோர் தேர்தல் அட்டவணையை வெளி யிடுகின்றனர். இதற்கான பத்திரி கையாளர் சந்திப்பு தேர்தல் ஆணைய தலைமையகம் அமைந் துள்ள நிர்வாச்சன் சதனுக்கு பதிலாக இம்முறை விக்யான் பவனில் நடைபெறுகிறது.

தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தொடங்கி 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெறும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு இருந்தால் தேர்தல் வரலாற்றில் இதுவே நீண்டகால வாக்குப்பதிவாக இருக்கும்.

முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 7 முதல் 10-ம் தேதிக்குள் இருக்கும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த தேர்தலில் நாடு முழுவதும் சுமார் 81.4 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். இதில் 9.71 கோடி பேர் புதிய வாக்காளர்கள்.

கடந்த 2009-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தல், ஏப்ரல் 16 முதல் மே 13 வரை 5 கட்டங்களாக நடைபெற்றது. தற்போதைய மக்களவையின் பதவிக்காலம் வரும் ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது. எனவே மே 31ம் தேதிக்குள் புதிய மக்களவை அமைக்கப்பட வேண்டும்.

மக்களவை தேர்தலுடன் ஆந்திரப்பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் 6 முதல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுவது இதுவே முதல்முறை. இதில் முதல்கட்ட வாக்குப்பதிவு நக்சல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் என கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் வேட்பாளரை நிராகரிக்கும் உரிமையை வழங்கும் ‘நோட்டா’ வசதி அறிமுகம் செய்யப்பட்டது. மக்களவை தேர்தலில் இந்த வசதி முதல்முறையாக அறிமுகம் செய்யப்படுகிறது. வேட்பாளர்களின் செலவு உச்சவரம்பு ரூ.70 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது

மேலும் வாக்களித்ததை உறுதிசெய்யும் வகையில் ஒப்புகை சீட்டு வழங்கும் முறையும் இத்தேர்தலில் சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x