Last Updated : 14 Sep, 2016 10:40 AM

 

Published : 14 Sep 2016 10:40 AM
Last Updated : 14 Sep 2016 10:40 AM

என்எஸ்ஜி உறுப்பினர் விவகாரம்: இந்தியா- சீனா பேச்சுவார்த்தை

எல்லைகளில் படைகளைக் குறைப்பது, அணு ஆயுதப் பரவல் தடுப்பு, என்எஸ்ஜி அமைப்பில் உறுப்பினராவது என்பன உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக இந்தியா சீனா இடையே நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அணு மூலப்பொருள் விநியோகக் குழுவில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராவதற்கு நடைமுறைகளைக் காரணம் காட்டி சீனா எதிர்ப்புத் தெரிவித்தது. இதனால் கடந்த இரு மாதங்களுக்கு முன் நடைபெற்ற என்எஸ்ஜி மாநாட்டில் இந்தியாவின் கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை. இந்நிலையில், நேற்று இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சீனா ஆயுதக் கட்டுப்பாட்டுத் துறை தலைமை இயக்குநர் வாங் குயின் தலைமையிலான சீன பிரதிநிதிகள் குழு இந்தியா வந்தது. இக்குழுவினர் வெளியுறவுத் துறை இணைச் செயலாளர் அமன்தீப் சிங் கில் (ஆயுதக் குறைப்பு மற்றும் சர்வதேச பாதுகாப்பு) தலைமையிலான இந்திய பிரதிநிதிகளுடன் நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஆயுதக் குறைப்பு, ஆயுதப் பரவல் தடை தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோர் ஒப்புக் கொண்டபடி நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில் என்எஸ்ஜி அமைப்பில் இந்தியா உறுப்பினராகும் விவகாரம் தொடர்பாக இருதரப்பினரும் முன்னுரிமை அளித்தனர். இப்பேச்சுவார்த்தை தெளிவாக, தனித்த இயல்புடையதாக, உறுதியாக இருந்தது. என்எஸ்ஜியில் இணைவது இந்தியாவின் மிக முக்கியமான அம்சமாக உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையொப்பமிடாத நாடுகள் என்எஸ்ஜியில் உறுப்பினராவது என்பது பல்வேறு நாடுகள் தொடர்புடைய விவகாரம். எனவே, அது இருநாடுகள் தொடர்புடையதல்ல, பலநாடுகள் தொடர்புடையது என்பதை இந்தியாவும் சீனாவும் உணர்ந்துள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x