Last Updated : 28 Oct, 2014 11:00 AM

 

Published : 28 Oct 2014 11:00 AM
Last Updated : 28 Oct 2014 11:00 AM

கர்நாடகாவில் ஊதிய உயர்வு கோரி போராட்டம்: 4,500 அரசு மருத்துவர்கள் ராஜினாமா?

கர்நாடகாவில், ஊதிய உயர்வு உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 4,500 அரசு மருத்துவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 4,500 அரசு மருத்துவர்களும், 1000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த‌ மருத்துவர்களும் பணிபுரிந்து வருகின்றனர். ஊதிய உயர்வு, காலியாக உள்ள பணி யிடங்களை நிரப்புதல், ஒப்பந்த மருத்துவ‌ர்களை பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை நிறை வேற்றுமாறு கடந்த பிப்ரவரி மாதம் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்காத தால், அவர்கள் கடந்த 3 மாதங்க ளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக பெங்களூரில் முகாமிட்டுள்ள மருத்துவர்கள் அரசுக்கு எதிராக தொடர் கண்டன ஆர்ப்பாட்டத்தையும், உண்ணா விரதப் போராட்டத்தையும் நடத்தி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சுகாரத் துறை அமைச்சர் யு.டி.காதர் மற்றும் துறை அதிகாரிகள் அரசு மருத்துவர்கள் சங்க நிர்வாகிக‌ளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் 10 கோரிக்கைகளை 6 மாதத்துக்குள் நிறைவேற்றுவதாக அமைச்சர் உறுதியளித்தார். ஆனால் மருத்துவர்கள் அதை ஏற்க மறுத்து வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் 1,500-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் திங்கள்கிழமை மருத்துவமனையை புறக்கணித்து பெங்களூர் சுதந்திர பூங்காவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக அரசு தங்களின் கோரிக்கையை ஏற்காததால் 4,500 மருத்துவர்களும் ராஜினாமா செய்தனர். அந்தக் கடிதத்துடன் விதானசவுதாவை நோக்கி ஊர்வல மாக சென்றனர். இதனை தடுத்த போலீஸார் அனைவரையும் களைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். அப்போது கர்நாடக மாநில அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் வீரபத்ரய்யா செய்தியாளர் களிடம் கூறும்போது, “எங்களது 10 கோரிக்கைக‌ளை நிறைவேற்று வதாக அரசு உறுதிய‌ளித்தாலும், எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வில்லை. அதனால் நாங்கள் ராஜினாமா செய்துள்ளோம்” என்றார்.

ராஜினாமா சரியான முடிவல்ல‌

இந்தப் போராட்டம் குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறும்போது, “அரசு மருத்துவர்கள் அனைவரும் எடுத்திருக்கும் ராஜினாமா முடிவு ஏற்கதக்கதல்ல” என்றார்.

கர்நாடக மாநிலத்தில் அரசு மருத்துவர்களின் தொடர் வேலைநிறுத்தம் காரணமாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மருத்துவர்கள் இல்லாததால் பலர் தனியார் மருத்துவமனைகளுக்கும், வீடுகளுக்கும் திரும்பும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x