Last Updated : 08 Feb, 2014 10:11 AM

 

Published : 08 Feb 2014 10:11 AM
Last Updated : 08 Feb 2014 10:11 AM

ரயிலில் மகளிர் பெட்டிகளுக்கு தனி நிறம் பூச வேண்டும்- நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

நாடு முழுவதும் தொலைதூர மற்றும் புறநகர் ரயில்களின் மகளிர் பெட்டிகளுக்கு தனி நிறம் அளிக்குமாறும், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யுமாறும் ரயில்வே துறைக்கு நாடாளுமன்ற ரயில்வே நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தலைமையிலான 31 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற ரயில்வே நிலைக்குழு, தனது 23வது அறிக்கையை நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்தது. அதில் ரயில்களில் மகளிர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பரிந்துரைகள் வருமாறு: மகளிர் பெட்டிகளில் கண் காணிப்பு கேமராக்கள் பொருத் தப்பட வேண்டும். மகளிர் பெட்டி களுக்கு தனி நிறம் அளித்து, அவற்றில் வியாபாரிகள், பிச்சைக் காரர்கள், சமூக விரோதி கள் நடமாட விடாமல் கண்காணிக்க வேண்டும். இப் பெட்டிகளில் அவசர உதவிக்காக அலாரம் மணிகளைப் பொருத்தி அவற்றை என்ஜின் ஓட்டுநர் மற்றும் கடைசிப் பெட்டியில் உள்ள கார்டு-வுடன் இணைக்க வேண்டும்.

பெண்களின் அவசர உதவிக்கென நாடு முழுவதும் அனைத்து மண்டலங்களுக்கும் எளிமையான ஒரே அவசர உதவி தொலைபேசி எண் கொடுக்கப் பட்டு, அந்த எண்ணை நன்கு விளம்பரப்படுத்த வேண்டும். ரயில்வே பாதுகாப்புப் பணியில் தற்போது 1.7 சதவீதம் மகளிர் காவலர்களே உள்ளனர்.

புதிதாக நியமனம் செய்து மகளிர் காவலர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். புறநகர் ரயில் நிலையங் களில் தூய்மையான குடிநீர் மற்றும் கழிவுநீர் வசதிகள் செய்துதரப்பட வேண்டும். அனைத்து ரயில் நிலையங்களிலும் நடைமேடைகள், படிக்கட்டுகள் மற்றும் இதர இடங்களில் போதுமான வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு சட்டப்படியான வசதிகள் செய்துதரப்பட வேண்டும். ரயில் நிலையங்களில் குறிப்பாக இரவு நேரங்களில் பாதுகாப்புப் படையினரை அதிக அளவில் நிறுத்தி, பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x