Published : 28 Nov 2016 03:23 PM
Last Updated : 28 Nov 2016 03:23 PM

ரூபாய் நோட்டு பிரச்சினை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஓரளவு ஆதரவு

ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து இடதுசாரிகள் அழைப்பு விடுத்திருந்த போராட்டத்துக்கு திங்கள்கிழமை நாடு தழுவிய அளவில் ஓரளவு ஆதரவு கிடைத்தது.

இடதுசாரிகள் சார்பிலான 12 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்தால் கேரளாவில் மட்டும் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்காத மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, மேற்கு வங்கத்தில் ஆர்ப்பாட்டங்களில் மட்டுமே ஈடுபட்டன.

காங்கிரஸ் ஆவேச தின பேரணி

இந்த முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்காத காங்கிரஸ், நாடு முழுவதும் 'ஆக்ரோஷ் திவாஸ்' (ஆவேச தினம்) என்ற பெயரில் ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்தின.

தமிழகத்தைப் பொறுத்தவரை இடதுசாரிகள், திமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. தமிழக காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அழைப்பு விடுத்திருந்த முழு அடைப்பு போராட்டத்தால் கேரளாவில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

எனினும், வங்கிகள், மருத்துவமனைகள், சுற்றுலா மையங்கள், சபரிமலை கோயில் மற்றும் திருமணங்கள் முதலானவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் எந்தப் பாதிப்பும் இல்லை.

படம்: கோப்பகுமார்

போக்குவரத்து வெகுவாக பாதித்தது. இதனால், வங்கி உள்ளிட்ட அலுவலகங்களில் ஆட்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தன. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இஸ்ரோ மற்றும் முக்கிய தனியார் நிறுவனங்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயங்கின.

பல இடங்களில் போராட்டங்கள் தீவிரமாக நடந்தாலும், எங்கும் அசம்பாவித சம்பவங்கள் நேர்ந்திடவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.

மேற்கு வங்கத்தில் ஓரளவே ஆதரவு

இடதுசாரிகளின் முழு அடைப்பு போராட்டத்துக்கு மேற்கு வங்கத்தில் எதிர்பார்த்த அளவு ஆதரவு இல்லை.

அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்கின. இதர தனியார் வாகனங்களும் இயங்கின. கடைகளும் சந்தைகளும் திறந்திருந்தன. ரயில் போக்குவரத்திலும் குறிப்பிடத்தக்க பாதிப்பு இல்லை. எந்த அசம்பாவித சம்பவமும் நிகழவில்லை என்று மேற்கு வங்க போலீஸார் தெரிவித்தனர்.

எனினும் பல இடங்களில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பெரும்பாலானவை இயங்கவில்லை.

முழு அடைப்பு போராட்டம் அமைதியான முறையில் நடந்து வருவதாக தெரிவித்த மேற்கு வங்க மாநில இடதுசாரிகள், வன்முறையை கட்டவிழ்த்துவிடும் முயற்சியில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினர்.

கொல்கத்தாவில் மம்தா பேரணி. | படம்: அசோக் சக்ரவர்த்தி

ரூபாய் நோட்டு நடவடிக்கையால் மக்கள் ஏற்கெனவே அவலத்துக்கு ஆளாகியுள்ள நிலையில், முழு அடைப்பு போராட்டத்தை தாம் ஆதரிக்கவில்லை என்று முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். அதேவேளையில், இப்பிரச்சினையில் மத்திய அரசைக் கண்டித்து மிகப் பெரிய அளவில் பேரணி நடத்துவதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே, கொல்கத்தா நகர் முழுவதும் பாதுகாப்பு பணிகளுக்காக 3,000-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு இல்லை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இடதுசாரிகள் போராட்டம் நடத்தினர். மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. எனினும், மாநிலம் முழுவதும் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏதும் இல்லை. போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. கடைகள், நிறுவனங்கள் அனைத்துமே வழக்கமாக இயங்கின.

சென்னை ராஜாஜி சாலையில் திமுக பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசுக்கு எதிராக கண்டனக் குரல்களையும், முழக்கங்களையும் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஸ்டாலின், ''இந்தியா முழுவதும் ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருவதாகவும், இது கட்சி சார்ந்த போராட்டம் இல்லை மக்களின் நலம் சார்ந்த போராட்டம்'' என்று கூறினார். இதையடுத்து ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி ஆர்ப்பாட்டம்

நெல்லித்தோப்பில் உள்ள ஹெச்டிஎஃப்சி வங்கி முன்பு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

புதுச்சேரியில் இடதுசாரிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தபால் நிலையங்கள் முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். எனினும், இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏதும் இல்லை.

திரிபுராவில் நல்ல ஆதரவு

இடதுசாரிகள் ஆளும் திரிபுராவில் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. பள்ளிகள், கல்லூரிகள், கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. அதேவேளையில், வங்கிகள் மட்டும் இயங்கின. எனினும், குறிப்பிடத்தக்க அசம்பாவிதம் சம்பவம் ஏதுமில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.

எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆர்ப்பாட்ட பேரணிகளில் ஈடுபட்டது. ரூபாய் நோட்டு நடவடிக்கைக்கு எதிராக போராட்டத்தில் பங்கேற்றாலும், மக்கள் பாதிக்கத்தக்க முழு அடைப்பு போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்று திரிபுரா காங்கிரஸ் தெரிவித்தது. திரிணமூல் காங்கிரஸின் திரிபுரா பிரிவும் இதே நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர்.

தெலங்கானாவில் போராட்டக்காரர்கள் கைது. | படம்: ஜி.என்.ராவ்

தெலங்கானாவில் போராட்டம்

தெலங்கானாவில் காங்கிரஸார் ஆவேசப் பேரணிகளை நடத்தினர்; இடதுசாரிகள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேவேளையில், பொதுப் போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை. கடைகள் மற்றும் இதர வர்த்தக நிறுவனங்கள் அனைத்துமே திறந்திருந்தன. பள்ளிகள், கல்லூரிகள் இயங்கின. இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லை.

அருணாச்சலில் காங்கிரஸ் போராட்டம்

அருணாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியினர் மிகப் பெரிய அளவில் ஆர்ப்பட்ட பேரணியை நடத்தினர். ஆயிரக்கணக்கான காங்கிரஸ் கட்சியினர் இடாநகரில் உள்ள இந்திரா காந்தி பூங்காவில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிரதமர் மோடிக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

பிஹாரி ரயில் மறியல். | படம்: ராஜ்நீத் கவுர்

பிஹாரில் பலத்த பாதுகாப்பு

பாட்னா, ஜெஹனாபாத், கயா, போஜ்பூர் மற்றும் முஸாபர்நகர் ஆகிய இடங்களில் இடதுசாரிகள் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

ஆளும் ஐக்கிய ஜனதா தளம் இந்தப் போராட்டத்தை ஆதரிக்காத நிலையில், இரு கூட்டணி கட்சிகளான ராஷ்டிரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டக் களத்தில் உள்ளனர். சில இடங்களில் இயல்பு வாழ்க்கை ஓரளவு பாதிக்கப்பட்டது.

எனினும், பள்ளிகளும் அலுவலகங்களும் இயங்கி வருகின்றன. இந்தப் போராட்டத்தை ஒட்டி பாட்னாவில் பாதுகாப்புப் பணிகளுக்காக போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

குஜராத்தில் பாதிப்பில்லை

குஜராத் முழுவதும் ஆம் ஆத்மி கட்சியின் போராட்டம் மேற்கொண்டனர். எனினும், இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை. காங்கிரஸ் கட்சியினர் ஆவேசப் பேரணிகளை நடத்தினர்.

ஆந்திரத்தில் போராட்டம்

பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர். மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லை.

கர்நாடகாவில் பாதிப்பு இல்லை

கர்நாடகாவில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை. பள்ளிகளும் கல்லூரிகளும் வழக்கம்போல் இயங்கி வருகின்றன. அதேபோல் போக்குவரத்திலும் எந்த பாதிப்பும் இல்லை. கர்நாடகாவின் வடக்குப் பகுதியில் மட்டும் போராட்டம் ஓரளவு தீவிரமாக நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x