Last Updated : 15 Mar, 2017 07:46 AM

 

Published : 15 Mar 2017 07:46 AM
Last Updated : 15 Mar 2017 07:46 AM

கோவா மாநிலத்தில் 4-வது முறையாக முதல்வர் ஆனார் மனோகர் பாரிக்கர்: 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

கோவா மாநில முதல்வராக மனோகர் பாரிக்கர் நேற்று 4-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

கோவாவில் ஆட்சி அமைக்க 21 இடங்கள் தேவை என்ற நிலையில், மனோகர் பாரிக்கர் முதல்வராக பதவியேற்க முன் வந்தால் ஆதரவு அளிப்பதாக மகாராஷ்டிரவாதி கோமந்தக், கோவா பார்வர்டு மற்றும் சுயேச்சைகள் தெரிவித்தனர். இதையடுத்து பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை மனோகர் பாரிக்கர் நேற்று முன்தினம் ராஜினாமா செய்து மீண்டும் மாநில அரசியலுக்கு திரும்பினார்.

இதைத்தொடர்ந்து கோவா மாநில முதல்வராக மனோகர் பாரிக்கர் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் மகாராஷ் டிரவாதி கோமந்தக் கட்சியின் சுதீன் தவாலிகர், மனோகர் அஸ்கான்கர், கோவா பார்வர்டு கட்சியின் விஜய் சர்தேசாய், வினோத் பலின்கர், ஜெயேஷ் சல்கான்கர், சுயேச்சைகளான கோவிந்த் காவ்டே, ரோஹன் காந்தே மற்றும் பாஜகவின் பிரான்சிஸ் டிசோஸா, பாண்டுரங்க மட்கைகர் ஆகிய 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் ஆளுநர் மிருதுளா சின்ஹா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்பு நிகழ்ச்சியில் பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா மற்றும் மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக காங்கிரஸ் சட்டப் பேரவை தலைவர் சந்திர காந்த் கவ்லேகர் 17 எம்எல்ஏக் களுடன் ஆளுநரை சந்தித்தார். அப்போது சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க தங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். பின்னர் அவர் நிருபர் களிடம் கூறும்போது, ‘‘கோவாவில் ஆட்சி அமைக்க காங்கிரஸுக்கு வாய்ப்பு அளிக்கும்படி ஆளுநரிடம் கேட்டுக் கொண்டோம். தவிர பாரிக்கரை ஆட்சி அமைக்க அழைத்தது அரசமைப்பு சட்டத் துக்கு விரோதமானது என்றும் எடுத்துரைத்தோம். ஆனால் முறைப்படி நடவடிக்கை எடுத் திருப்பதாக ஆளுநர் பதில் அளித்தார். தலையை எண்ணிப் பார்த்து பெரும்பான்மையை முடிவு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது. அதற்கான இடம் சட்டப்பேரவை தான்’’ என்றார்.

அதே சமயம் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப் பட்டால் காங்கிரஸ் தான் நிச்சயம் வெற்றி பெறும் என அக்கட்சியின் மூத்த தலைவரான அபிஷேக் சிங்வியும் தெரிவித்துள்ளார்.

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

கோவா மாநில புதிய முதல்வராக பாஜக மூத்த தலைவர் மனோகர் பாரிக்கர் பதவியேற்பதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் நேற்று மறுத்துவிட்டது. அதேநேரம் நாளை நம்பிக்கை வாக்கு கோருமாறு உத்தரவிட்டது.

கோவா சட்டப்பேரவைத் தேர் தலில் எந்தக் கட்சிக்கும் பெரும் பான்மை பலம் கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பாஜக 13, காங்கிரஸ் 17 இடங்களில் வெற்றி பெற்றன. சிறிய கட்சிகள், சுயேச்சைகள் 10 தொகுதிகளில் வென்றன.

இந்நிலையில் மனோகர் பாரிக்கர், ஆளுநர் மிருதுளா சின்ஹாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது, சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் உட்பட 21 உறுப்பி னர்கள் தனக்கு ஆதரவு தெரிவித் திருப்பதாகக் கூறி அதற்கான ஆதாரத்தைக் கொடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட ஆளுநர், ஆட்சி அமைக்க பாரிக்கருக்கு அழைப்பு விடுத்தார். அத்துடன் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிட்டார்.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் கோவா சட்டப்பேரவை தலைவர் சந்திரகாந்த் கவ்லேகர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், “கோவா தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உள்ளது. ஆனால் ஆட்சியமைக்க பாஜகவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான அவரது நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். இதை அவசரமாக விசாரிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஹோலி பண்டிகைக்காக நீதிமன்றத்துக்கு ஒரு வாரம் விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே இந்த மனுவை அவசரமாக விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக் கப்பட்டது. இதன்படி இந்த மனு, தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய் மற்றும் ஆர்.கே.அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று காலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும் நீதிபதிகள் கூறும்போது, “தங்களுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாகக் கூறும் காங்கிரஸ் கட்சியினர், அந்த கட்சி உறுப்பினர்களின் உறுதி மொழி பத்திரத்தை தாக்கல் செய்ய வில்லை. அதேநேரம், எம்ஜிபி (3), ஜிஎப்பி (3) உறுப்பினர்கள், 2 சுயேச்சை உறுப்பினர்கள் பாஜக வுக்கு ஆதரவு அளிக்க முன்வந் துள்ளனர். அதற்கான ஆதாரத்தை பாஜக தாக்கல் செய்துள்ளது. எனவே, மனோகர் பாரிக்கர் கோவா முதல்வராக பதவியேற்க தடை விதிக்க முடியாது. 16-ம் தேதி காலையில் மனோகர் பாரிக்கர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x