Published : 01 Apr 2017 03:14 PM
Last Updated : 01 Apr 2017 03:14 PM

நெடுஞ்சாலை மதுபான விற்பனைத் தடை: கடைகளோடு, விடுதிகள், பார்களையும் சேர்த்தது உச்ச நீதிமன்றம்

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் குடித்து விட்டு வாகனம் ஓட்டி விபத்துகள் ஏற்படுவதை முற்றிலும் ஒழிக்க, மதுபானக்கடைகளுக்கு மட்டுமல்லாது விடுதிகளில் மது விற்பனை, பார்கள் ஆகியவற்றிலும் மதுவிற்பனைத் தடையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

வெறும் மதுபானக்கடைகளை மட்டும் நெடுஞ்சாலைகளில் அகற்றி பயனில்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம் நெடுஞ்சாலையில் பார் உள்ள ஹோட்டல்கள், வைன் மற்றும் பீர் விற்பனை நிலையங்களுக்கும் விற்பனைத் தடை செய்வதுதான் முறை என்று கூறியுள்ளது.

“தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுபான விற்பனை எனும் தீங்கு விளைவிக்கும் செயலை நாம் புறக்கணிக்க முடியாது. சாலை விபத்துகளில் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது என்பது பெரிய அளவில் உயிரழிவுகளை, வாழ்க்கையை முடக்கும் காயங்களை உருவாக்கவல்லது. அரசியல் சாசனச் சட்டப்படி வாழ்விற்கான உரிமையை பாதுகாக்க வேண்டும் என்பது அதன் மிகப்பெரிய மதிப்பீடு ஆகும்” என்று 32 பக்க விளக்க அறிக்கையில் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மதுபான விற்பனையாளர்களின் நலன்கள், மாநில அரசுகளின் நலன்கள் ஆகியவற்றை விட பொதுமக்கள் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது நீதிமன்றத்தின் கடமையாகும் என்று உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

கடந்த 2 நாட்களில் இது தொடர்பான 68 மனுக்களை உச்ச நீதிமன்றம் பரிசீலித்தது. இவையெல்லாமே உச்ச நீதிமன்றத்தின் டிசம்பர் தீர்ப்பை மாற்றியமைக்கக் கோரியவையே.

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீ தூரத்துக்குள் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மதுபான விற்பனைக்கான உரிமங்களை நிறுத்த டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. ஏற்கெனவே கொடுக்கப்பட்ட உரிமங்களை படிப்படியாக ரத்து செய்வதற்கு மார்ச் 31ம் தேதியை இறுதிக் கெடுவாக உச்ச நீதிமன்றம் நிர்ணயித்திருந்தது.

உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய விளக்க அறிக்கை, அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி கேரள அரசுக்கு வழங்கிய சட்ட ஆலோசனைக்கு நேர் எதிராக அமைந்துள்ளது. அதாவது நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகளை அகற்றுவதுதானே தவிர விடுதிகள், பார்களில் மதுபான விற்பனை இந்தத் தடை உத்தரவின் கீழ் வராது என்று ரோத்கி ஆலோசனை வழங்கியிருந்தார்.

மேலும் மதுவிற்பனை நிலையங்கள் நெடுஞ்சாலைகளிலிருந்து பார்க்கும் படியாக நேரடியாக அமையக்கூடாது என்றார், இதனையடுத்து இமாச்சலப் பிரதேச நெடுஞ்சாலையில் 220 மீ தள்ளியே மதுபான விற்பனை நிலையம் இருக்க வேண்டும் என்றது.

மேலும் கலால் உரிமங்கள் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுவதால், தெலுங்கானா, ஆந்திராவில் அக்டோபர் 1 வரை கலால் உரிமம் உள்ளது என்பதால் நெடுஞ்சாலைகளில் செப்டம்பர் 30 வரை மதுபானங்கள் விற்கத் தடையில்லை. ஆனால் தமிழகத்துக்கு இதில் சலுகை கிடைக்கவில்லை இன்று முதல் நெடுஞ்சாலை மது விற்பனைக் கடைகள், பார்களில் மது விற்பனை, ஹோட்டல்களில் மதுவிற்பனை தடை அமலுக்கு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x