Last Updated : 29 Mar, 2017 05:00 PM

 

Published : 29 Mar 2017 05:00 PM
Last Updated : 29 Mar 2017 05:00 PM

டெல்லியில் 16-வது நாளாக விவசாயிகள் போராட்டம்: தமிழகத்தில் இருந்து பெருகும் ஆதரவு

டெல்லியில் 16-வது நாளாக தமிழக விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது. இதற்கு தமிழகத்தில் இருந்து பல குழுக்கள் நேரில் வந்து ஆதரவளித்துள்ளனர்.

தென் இந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் சார்பில் டெல்லியில் தமிழக விவசாயிகள் கடந்த மார்ச் 13-ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்று வருவதற்கு அச்சங்கத்தின் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் 100 விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இதில், விவசாயிகள் வங்கிக்கடன் ரத்து, வறட்சிக்கான கூடுதல் நிதி, தென் இந்திய நதிகள் இணைப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், போராட்டத்தின் 16 ஆம் நாளான இன்று ஐந்து விவசாயிகள் தண்ணீர் பாம்பை பிடித்து அதன் தலை மற்றும் வாலை வெட்டி விட்டு வாயில் கவ்வியபடி அமர்ந்து போராடினர். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பாம்புக்கறி உண்ணும் நிலைக்கு தள்ளப்படுவதாக உணர்ந்தும் வகையில் ‘பாம்புக்கறி உண்ணும் போராட்டம்’ நடத்தினர். இதற்கு முன் அதேவகையில் ‘எலிக்கறி உண்ணும் போராட்டம்’ தமிழக விவசாயிகள் நடத்தி இருந்தனர்.

இந்த போராட்டத்திற்கு இன்று தமிழகத்தில் இருந்து இளங்கீரன் தலைமையில் காவிரி டெல்டா பாசன மாவட்ட விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, ஓ.ஏ.நாரயணசாமி தலைமையில் தமிழ் விவசாயிகள் சங்கம், தலைவர் ரஜினிகாந்த் தலைமையில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் சென்னையில் ஜல்லிகட்டு போராட்டக்குழு ஆகியோர் தம் ஆதரவளர் மற்றும் உறுப்பினர்களுடன் நேரில் வந்து ஆதரவளித்துள்ளனர்.

தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர்களான விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவ திருமாவளவன், சமூக சமத்துவப்படை கட்சி தலைவர் சிவகாமி ஐ.ஏ.எஸ்(ஓய்வு) மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பச்சமுத்து ஆகியோரும் இன்று ஜந்தர் மந்தர் வந்து விவசாயிகளுக்கு ஆதரவளித்து உரையாற்றினார்கள். இவகளுடன், ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனரும் அதில் இருந்து வெளியேற்றப்பட்டு புதிதாக துவங்கிய ஸ்வராஜ் இந்தியா கட்சியின் தலைவருமான யேகேந்தர் யாதவும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவளித்துள்ளார்.

தமிழக அரசிற்கு எதிரான கோஷங்களுக்கு எதிர்ப்பு

ஜல்லிகட்டு போராட்டக்குழுவினர் சார்பில் முதன்முறையாக விவசாயிகளுக்காக இன்று ஜந்தர் மந்தரில் தமிழகத்திற்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதை கவனித்த போராட்டம் நடத்தும் சங்கத்தின் தலைவர் பி.அய்யாகண்ணு, தமிழகத்திற்கு எதிராக கோஷம் எழுப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். இதை அடுத்து அந்த கோஷங்கள் கைவிடப்பட்டன.

தமிழக விவசாயிகளின் போராட்டத்தில் அதிமுகவின் இருஅணி எம்பிக்கள், மக்களவை துணைசபாநாயகர் எம்.தம்பிதுரை மற்றும் தமிழக விவசாயத்துறை அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோரும் நேரில் வந்திருந்தனர். இவர்களை மத்திய நிதி, உள்துறை மற்றும் விவசாயத்துறை அமைச்சர்களிடம் நேரில் அழைத்து சென்று சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதனால், தமிழக அரசிற்கு எதிரான கோஷங்கள் அங்கு தவிர்க்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x