Published : 26 Sep 2013 06:46 PM
Last Updated : 26 Sep 2013 06:46 PM

பிரித்தாளும் சூழ்ச்சியை கையாள்கிறது காங்கிரஸ்: மோடி குற்றச்சாட்டு

நாட்டு மக்களிடையே பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு தங்களது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்கிறது காங்கிரஸ் என்றார் குஜராத் முதல்வரும் பாஜக பிரதம வேட்பாளருமான நரேந்திர மோடி.

பாஜக இளைஞரணி சார்பில் திருச்சி பொன்மலை ஜி கார்னரில் வியாழக்கிழமை இளந்தாமரை மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் சிறப்புரையாற்றிய மோடி மேலும் பேசியது: நாடு சுதந்திரம் அடைந்தபோது அரசியல் சட்டத்தை உருவாக்கினர். அப்போது காஷ்மீருக்கு தனிச் சட்டம், பிற இடங்களுக்கு தனிச் சட்டம் என பிரிவினையைத் தொடங்கியது காங்கிரஸ். நதிநீர் பிரச்சினையில் மாநிலங்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி மக்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் செய்து வருகிறது காங்கிரஸ்.

அதன் பிறகு மொழிவாரி மாநிலங்களைப் பிரித்தும், ஜாதி அடிப்படையிலும் பிரிவினையை ஏற்படுத்தியது. தனது வாக்கு வங்கிக்காகவும், ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவும் காங்கிரஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நாட்டைக் காப்பாற்ற வேண்டுமெனில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளிடமிருந்து நாட்டை விடுவிக்க வேண்டும்.

திருச்சியில் வெகுவாகக் கூடியுள்ள இளைஞர் சக்தி டெல்லியில் இந்த மாற்றத்தை ஏற்படுத்தும். இங்கு நம்பிக்கையுடன் கூடியுள்ள உங்களின் நம்பிக்கை வீண் போகாது.

அரசியல் ஆதாயத்துக்கு ஆதார்

ஆதார் அட்டை விஷயத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்றம் மத்திய அரசைக் கடுமையாகச் சாடியுள்ளது. உச்ச நீதிமன்றம் கேட்டுள்ள கேள்விகளை மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே நான் பிரதமரிடம் கேட்டேன்.

தொழில்கள் நசிவு

மத்திய அரசின் தவறான கொள்கைகள் காரணமாக நாட்டில் தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளது. பெரும் பணக்காரர்களின் நிறுவனங்களுக்குத்தான் இந்த அரசு உதவி செய்கிறது. சிறிய நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. 20,000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் மின் நிறுவனங்கள் நிலக்கரி கிடைக்காமல் மூடப்பட்டு வருகின்றன. இதனால் பல மாநிலங்களில் பல மணிநேரம் மின் வெட்டு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில்தான் நாட்டில் திட்டமிடுதல் அமைய வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான ஒரு அரசு மத்தியில் அமைய வேண்டும். பாஜக தலைமையில் அந்த ஆட்சி அமையும்.

ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இந்த அரசு இன்னும் 5 ஆண்டுகள் நீடித்தால் இன்னும் பாதாளத்துக்குச் சென்று விடும் என்பது பொருளதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

அரசு தூக்கி எறியப்பட வேண்டும்

எல்லையில் ராணுவ வீரர்கள் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்படுகின்றனர். மக்களுக்கு பாதுகாப்பில்லை, மாநிலங்களுக்கு பாதுகாப்பில்லை. எனவே, இந்த அரசு தூக்கி எறியப்பட வேண்டும்.

நாட்டின் தன்மானத்துக்கும் சுயகெளரவத்துக்கும் இழப்பீடு ஏற்படும் போது தன்மானத்தைக் காப்பாற்றவும், சுயகெளரவத்தை பாதுகாக்கவும் பிரதமர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

காஷ்மீரில் ராணுவத்தினரை கொன்று வரும் பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த முக்கியத்துவம் அளிக்கிறார் பிரதமர். இது யார் அளிக்கும் நிர்பந்தம் எனத் தெரியவில்லை.

பிரதமரின் இந்த நடவடிக்கைகளால் இந்தியாவை பலவீனமான நாடாகவே மற்ற நாடுகள் எண்ணுகின்றன. உலக அரங்கில் இந்தியா தலைசிறந்த நாடாக உருவாக காங்கிரஸ் தலைமையிலான அரசு அகற்றப்பட வேண்டும் என்றார் மோடி.

மாநாட்டுக்கு, இளைஞரணி மாநிலத் தலைவர் பொன். பாலகணபதி தலைமை வகித்தார். பாஜக அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங், மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல. கணேசன், அகில இந்திய செயலர் முரளிதர் ராவ், இளைஞரணி அகில இந்திய தலைவர் அனுராக்சிங் தாக்கூர், செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன், கட்சியின் மாநில முன்னாள் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர்.

தமிழில் பேசி கவனம் ஈர்த்தார்

மோடி தொடக்கத்தில் சிறிது நேரம் தமிழில் பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

அவர் தமிழில் பேசுகையில், 'தமிழ் மண்ணே வணக்கம், பெரியோர்களே தாய்மார்களே, வாலிப சிங்கங்களே அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாடு பெருமையுடைய நாடு. கம்பன், வள்ளுவர் பிறந்த நாடு. செந்தமிழ்நாடு என்னும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே என்றார் பாரதி. மலைக்கோட்டையும் காவிரியும் அலங்கரிக்கும் பூமி இது' என்றார். அப்போது அவரது தமிழ்ப் பேச்சை கேட்டு ரசித்த பாஜகவினர் கரகோஷம் எழுப்பினர். தமிழ், இந்தி, ஆங்கிலம் என 3 மொழிகளிலும் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x