Last Updated : 23 Apr, 2015 01:02 PM

 

Published : 23 Apr 2015 01:02 PM
Last Updated : 23 Apr 2015 01:02 PM

மக்களவையை உலுக்கியது விவசாயி தற்கொலை: ஒருமித்து தீர்வு காண அனைத்து கட்சிகளுக்கும் பிரதமர் மோடி அழைப்பு

டெல்லியில் விவசாயி தற்கொலை செய்துகொண்ட விவகாரம், மக்களவையில் கடுமையாக எதிரொலித்தது.காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

நிலச் சட்டத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், விவசாயிகள் தற்கொலை உள்ளிட்ட வேளாண் பிரச்சினைகளுக்கு முழு தீர்வு காண வலியுறுத்தப்பட்டது.

வேளாண் சமூகத்தினர் பிரச்சினை பழையது, ஆழமானது. இப்பிரச்சினைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுபட்டே தீர்வு காண வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

விவசாயி தற்கொலை விவகாரம் குறித்து கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு உடனடியாக விவாதிக்கும் வகையில் ஒத்திவைப்பு தீர்மானம் கோரி காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் வழங்கியது. காங்கிரஸ் உறுப்பினர் கே.சி.வேணுகோபால் இந்த நோட்டீஸை மக்களவை சபாநாயகரிடம் வழங்கினார்.

ஆனால் ஒத்திவைப்பு தீர்மான கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இடதுசாரி எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர். காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து அவையில் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

இதனால், அவையில் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது. அப்போது குறுக்கிட்டுப் பேசிய சபாநாயகர், "விவசாயி தற்கொலை சம்பவம் என்னை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது. ஆனால், இங்கு விவசாயிகள் பிரச்சினை குறித்து யாருக்குமே அக்கறை இல்லை. இவ்விவகாரத்தை அரசியலாக்க முற்பட வேண்டாம்" என்றார்.

ஆனால் தொடர்ந்து அமளி நீடித்ததால்,மக்களவையை அரை மணி நேரம் ஒத்திவைத்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார்.

விவாதத்துக்கு தயார்:

நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசும்போது, "விவசாயி தற்கொலை விவகாரம் குறித்து மக்களவையில் விரிவாக ஆலோசிக்க அரசு தயாராக இருக்கிறது. பருவம் தவறிய மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து அவையில் ஏற்கெனவே விவாதிக்கப்பட்டிருந்தாலும் விவசாயி தற்கொலை சம்பவம் தொடர்பாக மீண்டும் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது.

மக்களவையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இருக்கும்போது இவ்விவகாரம் குறித்து விரிவாக ஆலோசிக்கலாம். விவசாயி தற்கொலை விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கலாம். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அதைவிடுத்து எதிர்க்கட்சியினர் இவ்விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது. ஏனெனில் தேசமே இவ்விவகாரத்தை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறது" என்றார்.

'வேடிக்கை பார்த்த போலீஸ்'

காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசும்போது, "விவசாயி கஜேந்திர சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை தடுக்க காவல்துறை முற்படவில்லை. காவல்துறையினரும், மேடையில் இருந்த ஆம் ஆத்மி கட்சியினர் சம்பவத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆளும் கட்சியினராக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியினராக இருந்தாலும் சரி அனைவரும் வருத்தப்பட வேண்டிய விஷயம் இது" என்றார்.

'விவசாயிகள் விரோத அரசு'

விவசாயி தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு சட்டத் திட்டங்களை வகுத்துள்ள பாஜக அரசு 'விவசாயிகள் விரோத அரசு' என காங்கிரஸ் கட்சியினர் அவை நடுவே கூடி கோஷமிட அவர்களுடன் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சமாஜ்வாதி கட்சியினரும் இணைந்து கொண்டனர்.

மாநிலங்களவையிலும் எதிரொலித்தது:

பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் பாகத்துக்காக மாநிலங்களவை இன்று கூடியது. முதல் நாளான் இன்று விவசாயி தற்கொலை விவகாரத்தால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.

பூஜ்ஜிய நேரத்தின்போது பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், "விவசாயி தற்கொலைக்கு மத்திய அரசும், டெல்லி மாநில அரசும் சேர்ந்தே பொறுப்பேற்க வேண்டும். தேசத்தின் அனைத்து பகுதிகளிலும் விவசாயி தற்கொலை விவகாரம் கவனிக்கப்பட்டு வருகிறது. எனவே, பிரச்சினையின் ஆழத்தை உணர்ந்து அவைத்தலைவர் கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு உடனடியாக இது குறித்து விவாதிக்க அனுமதி அளிக்க வேண்டும்.

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என மோடி பேசினார். ஆனால், இப்போது என்ன நடந்திருக்கிறது. தற்போதைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி விவசாயி தற்கொலை சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும்" என்றார்.

குலாம் நபி ஆசாத் பேசி முடிக்க மற்ற கட்சியினரும் மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து அவையில் கூச்சல், குழப்பம் நிலவியதால் அவை நடவடிக்கையை 15 நிமிடங்கள் ஒத்திவைத்தார் அவை துணைத் தலைவர் ஹமீது அன்சாரி.

மக்களவையில் பிரதமர் விளக்கம்:

வேளாண் சமூகத்தினர் பிரச்சினை பழையது, ஆழமானது. இப்பிரச்சினைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுபட்டே தீர்வு காண வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

விவசாயி தற்கொலை சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் புயலைக் கிளப்பின. இதனையடுத்து மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளித்தார்.

அவர் பேசும்போது, "வேளாண் சமூகத்தினர் பிரச்சினை பழையது, ஆழமானது. மிகவும் பரந்து விரிந்து கிடக்கும் பிரச்சினையும்கூட. எனவே இப்பிரச்சினைக்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டே தீர்வு காண வேண்டும்.

விவசாயிகள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண எதிர்க்கட்சியினர் வழங்கும் எந்த ஒரு யோசனையையும் திறந்து மனதுடன் ஏற்றுக் கொள்ள பாஜக அரசு தயாராக இருக்கிறது.

நேற்றைய சம்பவம் தேச முழுவதும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேதனையை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.

விவசாயிகள் உயிரைவிட முக்கியமானது எதுவும் இல்லை. இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த அரசாங்கங்களும் விவசாயிகள் துயர் துடைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. ஆனாலும், பிரச்சினை இதுவரை தீரவில்லை. விவசாயிகள் பிரச்சினையில் ஆழ, அகலத்தை உணர்ந்து அதற்கேற்ப நாம் தீர்வுகளை வகுக்க வேண்டும்.

விவசாயிகள் துயர் துடைக்கும் நடவடிக்கைகளில் இதற்கு முன் ஆண்ட கட்சியும், தற்போதைய ஆளும் கட்சியும் எங்கே பின் தங்கியிருக்கிறது என்பதை ஆராய வேண்டும். என்ன தவறு செய்திருக்கிறது என்பதை பகுப்பாய்ந்து தீர்வுகளை சீர்திருத்த வேண்டும். விவசாயிகள் தற்கொலையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே, இப்பிரச்சினையில் ஒட்டுமொத்த உறுப்பினர்களும் ஒன்றுபட்டு தீர்வுக்கு வழிவகுக்க வேண்டும்" என்றார்.

முன்னதாக பேசிய ராஜ்நாத் சிங், "பாஜக அரசு விவசாயிகளுக்கு எப்போதும் துணை நிற்கும். அவர்கள் நலனை பேணும் அனைத்து உதவிகளையும் இந்த அரசாங்கம் செய்யத் தவறாது. விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது" எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x