Published : 07 Nov 2013 09:45 AM
Last Updated : 07 Nov 2013 09:45 AM

சத்தீஸ்கரில் 50 கிலோ வெடிகுண்டுகள் பறிமுதல்

சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்டேவாடா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில், 25 கிலோ எடையுள்ள 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில்,சாலையோரம் இரண்டு இரும்புப் பெட்டிகளில் வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வெடிகுண்டுகளை உரிய நேரத்தில் கைப்பற்றியதோடு பாதுகாப்பான முறையில் அவற்றை செயலிழக்கச் செய்தனர். இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இதே பகுதியில் தான் கடந்த 2010- ஆம் ஆண்டு மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் 76 பேர் கண்ணிவெடி தாக்குதலில் சிக்கி பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சோனியா, மோடி பிரச்சாரம்:

சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. சத்தீஸ்கரில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் களத்தில் 985 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதனை ஒட்டி, சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பகுதியில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் செய்கின்றனர். நாளை காங்கர் பகுதிக்கு செல்கிறார் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி. வருகிற 9-ஆம் தேதி ராய்பூரில் பிரதமர் மன்மோகன் சிங் பிரச்சாரம் செய்கிறார்.

தேர்தல் பிரச்சாரத்திற்காக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் வரவுள்ள நிலையில், வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

போலீஸ் குவிப்பு:

தொடர்ந்து முக்கிய தலைவர்கள் பிரச்சாரம் நடைபெற இருப்பதால் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பாக மாவோயிஸ்ட் ஆதிக்கம் மிகுந்த பஸ்தார் பகுதியில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. தலைவர்கள் பாதுகாப்பு கருதி போலீஸ், துணை ராணுவ வீரர்கள் 40,000 பேர் குவிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x