Last Updated : 08 Nov, 2015 01:23 PM

 

Published : 08 Nov 2015 01:23 PM
Last Updated : 08 Nov 2015 01:23 PM

பணபலம், சகிப்பின்மைக்கு கிடைத்த தோல்வி: பிஹாரில் பாஜக வீழ்ச்சி மீது குவியும் விமர்சனங்கள்

பிஹார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக் கிடைத்த தோல்வி, சகிப்பின்மை மற்றும் பண பலத்துக்கு கிடைத்த தோல்வி என்று தலைவர்கள் கருத்து கூறியுள்ளனர்.

சிவசேனா கூறும்போது, “தேர்தல் முடிவுகள் மோடியின் சரிவு” என்று கூறியுள்ளது.

சரத் யாதவ் கூறும்போது, “பண பலத்துக்கு எதிரான கொள்கைகளின் வெற்றி” என்று கூறியுள்ளார். அதாவது, “மிகவும் கடினமான போட்டியாகும் இது. ஒரு புறம் பணத்தின் ஆதிக்கம், மறுபுறம் கொள்கைகள், இந்த வெற்றி கொள்கைகளுக்குக் கிடைத்த முடிவு, பண ஆதிக்கத்துக்குக் கிடைத்த பின்னடைவு” என்றார்.

அரசியல் விமர்சகர்கள் கருத்து என்னவெனில், மெகா கூட்டணி வெற்றிக்கு நிதிஷ் குமாரின் புகழும், மக்கள் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையும் காரணம் என்றும், மத்தியில் ஒன்றை ஆதரிப்பதும் மாநிலத்தில் வேறுபட்ட கட்சிகளை ஆதரிக்கும் ஒரு பொதுவான போக்கும் காரணம் என்கின்றனர்.

நிதிஷ் குமாரை வாழ்த்திய மம்தா பானர்ஜி, "இது சகிப்புத் தன்மைக்குக் கிடைத்த வெற்றி, சகிப்பின்மைக்குக் கிடைத்த தோல்வி" என்றார்.

"மதவாத சக்திகளை வீழ்த்தி முதலமைச்சராக வெற்றி பெற இருக்கும் நிதிஷ் குமாருக்கு வாழ்த்துகள்!' என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி தனது ட்விட்டரில் கூறும்போது, “பிரிவினைவாதத்துக்கு எதிராக சமூக நல்லிணக்கத்துக்கு கிடைத்த வெற்றி, அராஜகத்துக்கு எதிராக தன்னடக்கத்துக்கு கிடைத்த வெற்றி, வெறுப்புணர்வுக்கு எதிராக அன்புக்குக் கிடைத்த வெற்றி” என்று பதிவிட்டுள்ளார்.

பிஹார் தேர்தல்களின் 5 கட்ட வாக்குப் பதிவுகளின் போது நாட்டில் நிலவி வரும் சகிப்புத் தன்மையற்ற போக்குகள் பற்றிய விவாதம் பெரிய அளவில் நடைபெற்றது. கலைஞர்கள், எழுத்தாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து விருதுகளைத் திருப்பி அளித்துக் கொண்டிருந்தனர்.

மேலும், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியதும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினரின் வாக்குகளை பாஜக-வுக்கு எதிராக ஒன்று திரட்டியது, இதோடு தலித் குழந்தைகள் இருவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அமைச்சர் வி.கே. சிங் உள்ளிட்டோர் தெரிவித்த கருத்துகளும் மெகா கூட்டணிக்கு ஆதரவாகச் சென்றதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x