Last Updated : 02 May, 2017 02:36 PM

 

Published : 02 May 2017 02:36 PM
Last Updated : 02 May 2017 02:36 PM

டெல்லியில் பாஜக ஆட்சி அமையும்: அமித் ஷா நம்பிக்கை

டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி அம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க வழிவகுக்கும் என அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 181 வார்டுகளில் வெற்றி பெற்று டெல்லி மாநகராட்சியை பாஜக கைப்பற்றியது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி 48 வார்டுகளில் மட்டுமே வெற்றிபெற்றது. காங்கிரஸ் கட்சி 38 வார்டில் வெற்றி பெற்று 3 இடத்துக்கு தள்ளப்பட்டது.

இந்நிலையில், டெல்லி மாநகராட்சி தேர்தல் வெற்றியை பாஜகவினர் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடினர். அமித் ஷா தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய அமித்ஷா, "மோடியின் ரதம் டெல்லியில் ஓடாது என விமர்சித்தவர்களுக்கு எல்லாம் டெல்லி மாநகராட்சித் தேர்தல் வெற்றி மூலம் பதில் கிடைத்துள்ளது. டெல்லி மக்கள் எதிர்மறை அரசியலை நிராகரித்துள்ளனர். டெல்லி மாநகராட்சி தேர்தல் வெற்றி கடைநிலை தொண்டர்களால் சாத்தியமானது. மோடியின் கொள்கைகளுக்கு மக்கள் அளித்த பரிசு. 181 கவுன்சிலர்களில் பெரும்பாலானோர் முதன்முறை தேர்தலில் வெற்றி பெற்றவர்களாவர்.

நாம் பெற்றுள்ள இந்த பெரும் வெற்றியானது, வளர்ச்சியை முன்னெடுக்கும் அரசியலை மக்கள் விரும்புகிறார்கள்; எதிர்மறை அரசியலை அவர்கள் புறக்கணிக்கிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாற்றங்களை ஏற்படுத்துபவர்களை ஆதரித்து காரணம் சொல்பவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள் என்பதும் நிரூபணமாகியுள்ளது.

இந்த வெற்றி ஓர் ஆரம்பமே. இதுவே இலக்கை அடைந்துவிட்டதாகிவிடாது. எனவே, வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் மோடி வகுத்துள்ள வளர்ச்சிக்கான கொள்கைகளை மக்களுக்காக செயல்படுத்த வேண்டும்.

இந்த வெற்றியே டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான அடித்தளம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x