Last Updated : 13 Jun, 2017 05:27 PM

 

Published : 13 Jun 2017 05:27 PM
Last Updated : 13 Jun 2017 05:27 PM

அதிக கொள்முதல் விலை மட்டுமே விவசாயிகள் பிரச்சினைக்குத் தீர்வாகுமா?

விலை வீழ்ச்சியினால் தங்கள் விளைபொருட்களுக்கான லாபம் ஈட்ட முடியாமல் போவது, மோசமான சந்தைப்படுத்தல் வசதிகள், அதிகரிக்கும் கடன் சுமை, இடுபொருட்களின் விலை அதிகரிப்புகள், அடிக்கடி நிகழும் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் அழிவு ஆகியவற்றினால் வேளாண்மைத் துறை பிரச்சினைகளை நாம் குறுகிய கால பிரச்சினையாக அறுதியிடுகிறோம்.

ஆந்திராவில் 2011-ம் ஆண்டு கரீப் பருவத்தில் பயிர் செய்ய மாட்டோம், ‘பயிர் விடுமுறை’ என்று விவசாயப் போராட்டம் வெடித்தது. ஊரக இந்தியாவில் இத்தகைய போராட்டங்கள் நம் நாட்டின் உணவுப்பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகும்.

வேளாண்மை சந்திக்கும் பிரச்சினைகள் நிரந்தர அம்சமாக மாறிவிட்டதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தோல்விகள் மட்டும் காரணமல்ல, மாறாக உள்ளூர் சமூக அமைப்புகள், சமூக வலைப்பின்னல்கள் ஆகியவற்றின் வீழ்ச்சியுமாகும். அனைவரும் தனிமைப்பட்டு போனதும் வேளாண் துயரத்துக்கு காரணமாக உள்ளது. இதனால் உதவிக்கரம் நீட்ட ஆளின்றி, ஆதரவின்றி தத்தளிக்கும் விவசாயிகள் தற்கொலை என்ற சோக முடிவுக்குச் செல்கின்றனர்.

வேளாண் துயரம் தற்போது உச்சகட்டத்துக்குச் சென்று விட்டதாகவே தெரிகிறது. விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களான காய்கனிகள், பால் போன்றவற்றை சாலைகளில் விட்டெறிந்து போராட்டம் நடத்துவது சமீப காலங்களில் வழக்கமாகி வருகிறது. விவசாயிகளின் உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் அரசியல் கட்சிகள் அப்பாவி விவசாயிகளின் மரணங்களை வைத்து சாதகங்களை அடைய முயல்வது துரதிர்ஷ்டமே.

நம் விவசாயிகளின் கோரிக்கைகள் நியாயமற்றதா? இதற்கு இல்லை என்றே பதில் நாம் கூற வேண்டும். தங்கள் உற்பத்திக்கு நேர்மையான ஒரு விலை கோருகின்றனர். சந்தைப்படுத்தலில் வசதிகள் கோருகின்றனர், நிறுவனக் கடன், பாசன வசதிகள், தரமான விதைகள், உரங்கள், சந்தையில் பொருட்கள் அபரிமிதமாக கிடைக்கும் போது கொள்முதல் இயற்கைச் சீற்றங்களின் போது சமூகப் பாதுகாப்பு வலை ஆகியவையே விவசாயிகளின் கோரிக்கைகளாகும். விவசாயிகள் தங்கள் தொழிலில் தொடர்ந்து ஈடுபடுவதற்கு மேற்கூறியவை அடிப்படை அத்தியாவசியங்கள் ஆகும். இந்தியாவின் விவசாய சூழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்ய நிறைய குழுக்கள், கமிஷன்கள் கடந்த காலத்தில் உருவாக்கப்பட்டன. ஆனால் இந்த கமிட்டிகளின் பரிந்துரைகளை அடுத்தடுத்து வரும் அரசுகள் கிடப்பில் போட்டதே நடந்தன.

தங்கள் உற்பத்திக்கு லாபம் தரும் விலைகள் இல்லை என்பதே அவர்களின் பிரச்சினைகளில் ஒன்று. பல ஆய்வுகளிலும் இந்தப் பிரச்சினை எடுத்தியம்பப்பட்டுள்ளன. குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரித்தால் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா? சில விமர்சகர்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரித்தால் உணவுப் பணவீக்கத்தை அதிகரிக்கும் என்றும் சில விமர்சகர்கள் இது விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் என்றும் கூறுகின்றனர்.

இந்த இரண்டு வாதங்களுமே குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு என்பது விவசாயிகளின் லாப விலை என்ற தவறான புரிதலால் எழுந்துள்ளதே. குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது உண்மையில் காப்பீட்டு விலை மட்டுமே. அடிப்படை விலை மட்டுமே. மேலும் இப்படி ஒன்று இருக்கிறது என்றே விவசாய சமூகத்தில் பெரும்பாலானோருக்குத் தெரியாது.

இந்திய அரசு 23 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வைத்துள்ளது, ஆனால் அதிகாரபூர்வமாக கொள்முதல் விலை அரிசி மற்றும் கோதுமைக்கு மட்டுமாகவே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் சில மாநிலங்களில் மட்டுமே. குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றிய அறிவு பஞ்சாப், ஆந்திரா, ஹரியாணா ஆகிய மாநிலங்களில் குறைவானதே. நேஷனல் சாம்பில் சர்வேயின் படி பார்த்தால் நெல் மற்றும் கோதுமைக்கே குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிந்திருப்பவர்கள் மூன்றில் ஒரு பங்கு விவசாயிகளுக்கும் குறைவானவர்களே. மற்ற பயிர்கள் பற்றி நாம் கூற வேண்டியதில்லை. மேலும் பயிர்களில் குறிப்பிடத்தகுந்த அளவு உள்ளூர் தனியார் வர்த்தகர்களுக்லி, இடுபொருட்கள் விற்பானையாளர்களுக்குமே விற்கப்படுகிறது. கடன் பிணைப்பினால் ஏழை மற்றும் சிறு நில உடைமை விவசாயிகள் இவர்களுக்கு தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்க வேண்டி வருகிறது.

2004 முதல் அடுத்தடுத்த அரசுகள் வேளாண் துறைக்கு கடன்களை அதிகரித்துள்ளதாகவும் பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் பயிர்க்கடன்கள் அளிக்கப்படுவதாகவும் கோரி வந்தன. ஆனால் ஆய்வுத் தரவுகளின்படி 40%க்கும் அதிகமான விவசாயிகள் இன்னமும் நிறுவனம் சாரா தனியார்களிடமிருந்து கடன் பெறுவதையே நம்பியுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் வட்டிக்குக் கடன் கொடுப்பவர்களாகவும் வணிகர்களாகவுமே இருப்பார்கள். மேலும் மத்திய ரிசர்வ் வங்கியின் கடன் விநியோக முறைகளை ஆய்வு செய்தால் வேளாண்மைக்கு அளிக்கும் கடன் தொகைகள் காலப்போக்கில் மறைமுக நிதியின் அதிகரிப்பு அதிகமாக உள்ளது தெரிய வரும். விவசாயிகளுக்கு நேரடியாக கடன் அளிப்பது குறைந்திருப்பதும் தெரியவருகிறது.

இதன் அர்த்தம் என்னவெனில் பெரிய அளவில் வேளாண் துறைக்கு கடன் ஓட்டம் அதிகரித்துள்ளது, ஆனால் இது வேளாண்-வர்த்தக நிறுவனங்கள்/கார்ப்பரேசன்கள் ஆகியவற்றுக்கே வழங்கப்பட்டுள்ளன. நேரடியாக விவசாயிகளுக்கு அல்ல. இதன் விளைவாக ஏழை மற்றும் சிறு விவசாயிகள் இந்த நிறுவனங்களை, வர்த்தகர்களை, இடுபொருள் வணிகர்களை கடனுக்காக நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பயிர் குறித்த அடிப்படைப் பிரச்சினைகள், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கொள்கையில் பிராந்திய பாரபட்சம், அரசுக் கொள்முதல் வேளாண் துறைக்கு நிறுவனம்சார் கடன் ஆகியவை பேசப்படாமல், கவனிக்கப்படாமல், குறைந்த பட்ச ஆதரவு விலைகளை அதிகரித்தால் நாட்டின் விவசாயிகள் பிரச்சினைகள் தீர்ந்து விடாது.

மேலும் சந்தையில் அபரிமிதமான வேளாண் உற்பத்திப் பொருட்கள் மீதான மாநில அரசுகளின் வினையாற்றுதல் முடங்கியுள்ளதாகவே தெரிகிறது. இங்குதான் தலையீட்டு திட்டங்கள் மூலம் பொருட்களைக் கொள்முதல் செய்வது என்பதில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் குறைவாகவே விவசாயிகளுக்கு கிடைக்கும் நிலை தோன்றுகிறது. பல வேளைகளிலும் ஆட்சியதிகாரம் கொள்முதல் முடிவை எடுக்கும் முன்னரே மிகுவிளைச்சல் பொருட்கள் சந்தைகளில் விற்பனைக்கு வந்து விடுகின்றன. இதனால் நேர்மையற்ற வர்த்தகர்கள் கொடுக்கும் விலையை விவசாயிகள் பேசாமல் வாங்கிச் செல்லும் நிலமைகள் தொடர்கின்றன. இதனால்தான் வெறுப்பில் பயிர்களை எரிப்பதும், விளைந்த பொருட்களை சாலைகளில் விட்டெறிந்து போராட்டம் செய்வதும் நடந்து வருகின்றன.

மேலும் வேளாண் வருவாய், வேளாண்மை அல்லாத வருவாய் ஆகியவற்றுக்கான இடைவெளி அதிகரித்துள்ளதை பல்வேறு ஆய்வுகள் எடுத்தியம்புகின்றன. கிராமப்புற இளைஞர்களின் பெருகி வரும் மாற்று வாழ்க்கைக்கான அவாவில் விவசாயிகளின் அழுத்தம் அதிகரிக்கிறது, நகர வாழ்க்கை முறையை அவர்கள் விரும்புவதால் விவசாயிகள் அதிகம் வருவாய் ஈட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதற்கு பயிர்ச்சாகுபடி மட்டுமே போதுமானதாக இல்லை. மாறாக இடுபொருள்கள் துறையில் சந்தையை நோக்கிய சீர்த்திருத்தங்கள் இடுபொருள்கள் விலைகளையும் அதிகரிக்கின்றன.

வருவாய் வீழ்ச்சி:

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சக தரவுகளின்படி, தானியங்கள் மற்றும் பயறு வகைகள் சாகுபடியினால் வருவாய் 2004-05, 2013-14 இடையே சரிவடைந்துள்ளது. இக்காலக்கட்டங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிக்கப்பட்ட போதும் சாகுபடியினால் வருவாய் குறைந்தே வந்துள்ளது.

நெற்பயிரில் 18 முக்கிய மாநிலங்களில் நிகர வருவாய் 5 மாநிங்களில் குறைந்துள்ளது, 6 மாநிலங்களில் எதிர்மறையாகச் சென்றுள்ளது. 7 மாநிலங்களில் வருவாய் குறைந்த அளவே அதிகமாகியுள்ளது. தோட்டப்பயிர்களின் மூலம் வருவாயும் நிச்சயமற்றதாக இருக்கிறது, காரணம், இதற்கு பெரிய அளவில் முதலீடுகள் தேவை. உர விலையேற்றம் பெரிய அளவில் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. 1991-92 மற்றும் 2013-14 இடையே யூரியா விலை 69% அதிகரித்துள்ளது. டை அம்மோனியம் பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் முறையே 300%, 600% அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சமீப கொள்கை அறிவிப்புகள் வேறு ஏற்கெனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளின் துயரங்களை அதிகரிக்குமாறு அமைந்துள்ளது. இந்த வேளாண் வளர்ச்சிக் காலக்கட்டத்தில் 10-20 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த மரபான வேளாண் முறைகளுக்கு நாடு திரும்புவது அவசியமாகிறது. இருக்கும் நவீன பயிர்கள் தற்போதைய வேளான் நடைமுறைகளுக்கு ஒத்துவராததாக உள்ளது. இதன் விளைவாக விளைச்சலும் வருவாயும் சரிவடைகிறது. மேலும், இயற்கை இடுபொருட்களை தயாரிக்கப் போதுமான வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. கால்நடை வளர்ப்பு என்பது ஏதோ துணைச் செயல்பாடாக நடைமுறையில் இருந்து வருகிறது. வறட்சிக் காலக்கட்டங்களில் தீவனப்பொருட்களே பயிர் இழப்பை எதிர்கொள்ள வசதியாக இருக்கும். ஆனால் இதிலும் கால்நடை விற்பனை குறித்த புதிய உத்தரவுகள் ஏழை விவசாயிகளையும் நிலமற்ற தொழிலாளர்களையும் பிரச்சினைகளுக்குள் தள்ளுகிறது. இவையெல்லம் ஏற்கெனவே விவசாயம் மீது நாட்டமில்லாத கிராமப்புற இளைஞர்களை மேலும் ஆர்மற்றவர்களாக்குகிறது. மற்ற வளரும் நாடுகளெல்லாம் வேளாண்மையை நவீனமயப்படுத்தி, உழைப்புச் சக்தியை நம்பியிருக்க வேண்டிய தேவையில்லாத நிலையை நோக்கி உற்பத்தியைப் பெருக்க முயற்சி செய்து வரும் நிலையில் இந்தியா எந்தவித குறிக்கோளுமில்லாமல் மந்த கதியில் சென்று கொண்டிருக்கிறது.

மூலம்: தி இந்து (ஆங்கிலம்)

கட்டுரையாசிரியர் ஏழுமலைக் கண்ணன் புதுடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக அசோசியேட் பேராசிரியர். இந்தக் கட்டுரையில் கூறப்பட்ட கருத்துகள் இவரது தனிப்பட்ட கருத்துகளே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x