Last Updated : 25 Nov, 2015 04:45 PM

 

Published : 25 Nov 2015 04:45 PM
Last Updated : 25 Nov 2015 04:45 PM

பெருமித இந்தியனான எனக்கு நாட்டை விட்டுச் செல்லும் எண்ணம் இல்லை: ஆமீர் கான்

பெருமித இந்தியனான தனக்கும், தன் மனைவிக்கும் நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் ஒருபோதும் இல்லை என்று பாலிவுட் நடிகர் ஆமீர்கான் விளக்கம் அளித்துள்ளார்.

சகிப்பின்மை தொடர்பாக தாம் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், அது தொடர்பாக நடிகர் ஆமீர் கான் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எனக்கும், என் மனைவிக்கும் இந்தியாவை விட்டு வெளியேறும் எந்த எண்ணமும் இல்லை. என்னை தேச எதிர்ப்பாளராக அழைக்கும் அனைவருக்கும் 'நான் ஒரு பெருமித இந்தியன்' என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்.

நான் மனம் திறந்து பேசியதற்காக, என்னை நோக்கி சரமாரியாக கூச்சலிட்டவர்கள் அனைவருமே நான் குறிப்பிட்ட அந்தக் கருத்தை மட்டும்தான் நிரூபித்திருக்கிறார்கள். நான் ஏற்கெனவே கூறிய கருத்துகளில் (சகிப்பின்மை தொடர்பானவை) உறுதியாக இருக்கிறேன்" என்று ஆமிர் கான் கூறியுள்ளார்.

அமீர் கான் அறிக்கையின் முழு வடிவம்:

"நான் முதலில் தெளிவாக ஒன்றைக் கூறிவிடுகிறேன். நானும் என் மனைவி கிரணும் நாட்டை விட்டுச் செல்லும் எண்ணம் கொண்டவர்கள் அல்ல. நாங்கள் அப்படிச் செய்ததுமில்லை, எதிர்காலத்தில் செய்யப் போவதுமில்லை.

எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் என்னுடைய நேர்காணலை பார்க்கவுமில்லை, அல்லது நான் கூறியதை வேண்டுமென்றே திரிக்கின்றனர்.

இந்திய எனது நாடு, நான் இந்தியாவை நேசிக்கிறேன், இந்நாட்டில் பிறந்ததையும் இங்கு வாழ்வதையும் என் அதிர்ஷ்டமாகவே உணர்கிறேன்.

இரண்டாவதாக, நான் நேர்காணலில் கூறிய கருத்தில் உறுதியாக நிற்கிறேன்.

நான் இந்தியன் என்று கூறிக்கொள்வதில் பெருமிதம் அடைகிறேன், அதற்கு யாருடைய அனுமதியும், அங்கீகாரமும் எனக்குத் தேவையில்லை.

என்னுடைய இதயத்தைத் திறந்து நான் கூறிய கருத்துக்கு எதிராக வாய்கூசாமல் அவதூறு பேசும் அனைவருக்கும் ஒன்றைச் சொல்கிறேன். நான் கூறிய கருத்தை நீங்கள் நிரூபிப்பது எனக்கு வருத்தமளிக்கிறது என்பதையே, என்னை தேச விரோதி என்று அழைக்கும் அனைவருக்கும் கூறுகிறேன்.

என் பக்கம் ஆதரவாக நின்றவர்களுக்கு நன்றி. இந்த தனித்துவ மற்றும் அழகான நாடு எதற்காக உண்மையில் பெயர் பெற்றுள்ளதோ அதனை நாம் காப்பாற்றுவது அவசியம்.

நாட்டின் ஒருமைப்பாடு, வேற்றுமை, அகவயப்படுத்தும் தன்மை, இதன் பல மொழிகள், இதன் பண்பாடு, இதன் வரலாறு, இதன் சகிப்புத்தன்மை இதன் ஏகாந்தவாதம் என்ற கருத்து, இதன் அன்பு, நுண்ணுணர்வு மற்றும் உணர்ச்சி ஆற்றல் ஆகியவற்றை நாம் காப்பது அவசியம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ஆமீர் கான் கூறியுள்ளார்.

மத்திய அரசு காட்டம்:

இதனிடையே, சகிப்பின்மை குறித்த நடிகர் அமீர் கானின் கருத்து நாட்டிற்கும் அவருக்கும் இழுக்கு தேடித் தந்துள்ளது என்று மத்திய அரசு காட்டமாக கூறியிருக்கிறது. அதன் விவரம்: >அமீர் கான் கருத்தால் நாட்டுக்கே இழுக்கு: அமைச்சர் ஜவடேகர்

ஆமீர் கருத்து: காங். ஆதரவும் பாஜக எதிர்ப்பும்

முன்னதாக, இந்தியாவில் சகிப்பின்மை மற்றும் பாதுகாப்பின்மை அதிகரித்து விட்டதாக ஆமீர் கான் கருத்து தெரிவித்தார்.

டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த பத்திரிகை ஒன்றின் விருது நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி முன்னிலையில் பேசிய பாலிவுட் அவர்கள், "வீட்டில் எனது மனைவி கிரணிடம் பேசிக் கொண்டிருந்தேன். திடீரென இந்தியாவை விட்டு சென்றுவிடலாமா எனக் கேட்டதும் நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கண்டு அவர் மிகவும் அஞ்சிவிட்டார். தினசரி நாளிதழ்களை பிரித்து பார்ப்பதற்கு கூட அவர் பயப்படுகிறார். அந்த அளவுக்கு நாட்டில் சகிப்பின்மை வளர்ந்துவிட்டது" என்றார்.

ஏற்கெனவே நாட்டில் சகிப்பின்மையும் வெறுப்பு அரசியலும் அதிகரித்துவிட்டதாக கூறி, எழுத்தாளர்கள் பலர் தங்களது விருதுகளை திரும்ப ஒப்படைத்து வரும் நிலையில், ஆமிர்கானின் இந்த வெளிப்படையான பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து ஆமிர்கானுக்கு ஆதரவு தெரிவித்து 'ட்விட்டர்' பக்கத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்தார். அதேவேளையில், நடிகர் ஆமிர் கானின் இந்த பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. சிவசேனாவும் கடுமையாக சீற்றத்தை வெளிப்படுத்தியது. | வாசிக்க ->அமீர் கான் பாகிஸ்தான் செல்லட்டும்: சிவசேனா பாய்ச்சல்

ஆமிர் கானின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு - எதிர்ப்பு என இரு விதமான கருத்துகள் இரண்டு நாட்களாக குவிந்து வருவதும் கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x