Last Updated : 28 Jan, 2017 08:17 AM

 

Published : 28 Jan 2017 08:17 AM
Last Updated : 28 Jan 2017 08:17 AM

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஜல்லிக்கட்டு மசோதா மீது குடியரசுத் தலைவர் பிரணாப் பரிசீலனை இன்று முடிகிறது: வரும் 30-ம் தேதி முதல் நிரந்தர சட்டம் அமலாக வாய்ப்பு

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்த மசோதா மீதான குடியரசுத் தலைவரின் பரிசீலனை இன்று முடிகிறது.

உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப் பட்ட வழக்கால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை பொங்கல் பண்டிகைக்கு முன்பாக நீக்கி, ஜல்லிக்கட்டு நடைபெற ஆவன செய்யப்படும் என மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா தலைவர்கள் உறுதியளித்து வந்தனர். இதற்காக தமிழக அரசும் மத்திய அரசிடம் பேசி தீவிர முயற்சி செய்துவருவதாக கூறி வந்தது. இந்நிலையில் தமிழக இளைஞர்களால் கடந்த 17-ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் திடீர் என அறப்போராட்டம் தொடங்கியது. ஒரு வாரம் நடந்த போராட்டத்துக்கு தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் ஆதரவளித்தனர். இதனால் போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இதையடுத்து மிருக வதை தடுப்புச் சட்டம் 1960-ல் திருத்தம் செய்து தமிழக ஆளுநரால் கடந்த சனிக்கிழமை அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதன்படி ஜல்லிக்கட்டு என்பது மிருக வதையில் வராது. இதற்கான சட்டத்திருத்த முன்வடிவுக்கு மத்திய அரசு கடந்த வாரம் மூன்று நாட்களில் குடியரசுத் தலைவரின் பரிசீலனையை முடித்துத் தந்தது.

தொடர்ந்து, அவசரச் சட்டம் 6 மாதங்கள் மட்டுமே அமலில் இருக்கும் என்று கிளம்பிய சர்ச் சையை சமாளிக்க, தமிழக சட்டப் பேரவை கூட்டம் கடந்த 23-ம் தேதி கூட்டப்பட்டது. இதில் முதல் நாளன்றே மசோதா அறிமுகப் படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

பிறகு இதுவும் அமலாக்க முகவரான மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசால் அனுப்பி வைக்கப்பட்டது. இதையும் முன்புபோல் அதேவேகத்தில் மத்திய அரசு பரிசீலனை செய்தது. நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சகத்தால் சரிபார்க்கப்பட்ட மசோதா, மறுநாள் சட்டம், சுற்றுச்சூழல், கலாச்சாரம் ஆகிய மூன்று அமைச்சகங்களுக்கும் கருத்து கேட்டு அனுப்பப்பட்டது. இவற்றில் இருந்தும் உடனடியாக சரிபார்த்து அனுப்பப்படவே, அதை குடியரசுத் தலைவர் சார்பில் மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலனை செய்து முடித்து தமிழக அரசுக்கு இன்று அனுப்ப உள்ளது. இதனால் இந்த மசோதா தமிழக ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்பட்டு சட்டமாக அமலாக்கப்படும். இது அநேகமாக திங்கள்கிழமை முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது, “ஜல்லிக் கட்டு தடையை நீக்கும் வகையில் அவசரச் சட்டம் இயற்றப்பட்டபோது அதன் சட்ட முன்வடிவு மிகவும் கவனமாக சரிபார்க்கப்பட்டது. இதே அம்சங்கள் அதன் சட்ட மசோதாவிலும் இருந்ததால் அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அவசரச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை முடிவு எடுக்கவுள் ளது. அதில் ஜல்லிக்கட்டு மீதான அவசரச் சட்டம் தற்காலிகமானது என்று கூறி தடை பெறுவதற்கு வாய்ப்புள்ளது. இதற்கு வாய்ப்பு அளிக்கக் கூடாது என மத்திய அரசு கருதுகிறது. எனவே திங்கள்கிழமை வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன், நிரந்தர சட்டத்திருத்தம் அமலுக்கு வர மத்திய அரசு விரும்புகிறது” என்று தெரிவித்தனர்.

மிருக வதை சட்டம் 1960-ல் திருத்தம் செய்து இந்த மசோதா தமிழக அரசால் நிறைவேற்றப் பட்டுள்ளது. வழக்கமாக, தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தாலே போதுமானது. ஆனால் மிருக வதை சட்டம், மத்திய அரசின் பொதுப்பட்டியல் எண் 3-ல் இடம்பெற்றுள்ளது. இதனால், அதில் திருத்தம் செய்ய குடியரசுத் தலைவரின் பரிசீலனை அவசியமாகும். இதன்பிறகு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்தவுடன் அது சட்டமாக மாறி அமலுக்கு வந்துவிடும். இது திங்கள்கிழமை முடிக்கப்படும் என்பதால் அதன் பிறகு தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு எந்த தடையும் இருக்காது எனக் கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x