Published : 28 Jan 2016 08:35 AM
Last Updated : 28 Jan 2016 08:35 AM

சோலார் பேனல் ஊழல் வழக்கில் கேரள முதல்வருக்கு ரூ.2 கோடி லஞ்சம்: முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சரிதா எஸ் நாயர் புகார்

கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ரூ.2 கோடியும் அமைச்சர் ஆர்யாடன் முகமதுக்கு ரூ.40 லட்சமும் லஞ்சம் வழங்கி தாக, சோலார் பேனல் ஊழல் விவகாரத்தில் குற்றம்சாட்டப் பட்டுள்ள சரிதா எஸ் நாயர் புகார் கூறியுள்ளார். ஆனால் இருவரும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள் ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, மது பார் லஞ்ச வழக்கில் வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, கலால் துறை அமைச்சர் கே.பாபு பதவி விலகினார். இதே புகார் காரணமாக மாநில நிதி அமைச்சர் கே.எம்.மாணி ஏற்கெனவே பதவி விலகினார். இந்நிலையில்தான் முதல்வர் மீதும் லஞ்சப் புகார் கூறப்பட்டுள்ளது.

கேரளாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஊழல் புகார் காரணமாக அமைச்சர்கள் பதவி விலகி வருவதும் முதல்வர் மீதே ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளதும் காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

சோலார் பேனல் ஊழல் வழக்கை விசாரித்து வரும் நீதிபதி சிவராஜன் கமிஷன் முன்பு நேற்று ஆஜரான சரிதா நாயர் கூறும்போது, “மெகா சோலர் திட்டங்களை மாநிலம் முழுவதும் அமைப்பதற்காக முதல்வர் உம்மன் சாண்டியின் நெருங்கிய உதவியாளருக்கு ரூ.1.9 கோடி வழங்கினேன். மேலும், மின்சாரத் துறை அமைச்சர் ஆர்யாடன் முகமது உதவியாளருக்கு ரூ.40 லட்சம் வழங்கினேன்” என்றார்.

ஆனால், மேற்கண்ட குற்றச் சாட்டை இருவருமே மறுத்துள் ளனர். இதுகுறித்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி திருவனந்த புரத்தில் நேற்று செய்தியாளர் களிடம் கூறும்போது, “என் மீது புகார் கூறுவதன் மூலம் இந்த வழக்கிலிருந்து தப்பித்துக் கொள்ள சரிதா நாயர் முயற்சிக் கிறார். எங்களுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறும் அவர், அதற்காக என்ன சலுகை பெற்றார் என்பதை அவர் விளக்க வேண்டும். நிவாரண நிதிக்காக அவர் கொடுத்த காசோலைகள் கூட பணமில்லாமல் திரும்பிவிட்டன” என்றார்.

முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக கடந்த 25-ம் தேதி, இந்த ஆணையத்தில் நேரில் ஆஜரான உம்மன் சாண்டியிடம் 14 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் கூறும்போது, “சரிதா நாயருக்கு நான் எந்த வகையிலும் உதவி செய்யவில்லை. இந்த ஆணையம் உண்மையை வெளிக்கொண்டு வரும்” என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் வி.எம்.சுதீரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “சரிதாவின் புகார் முற்றிலும் நம்பத்தகுந்ததல்ல. தேர்தலை மனதில் வைத்தே அவர் இதுபோன்ற குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார். ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் காங்கிரஸுக்கோ ஐக்கிய ஜனநாயகக் கூட்டணிக்கோ (யுடிஎப்) எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது” என்றார்.

பதவி விலக வேண்டும்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் கொடியேறி பாலகிருஷ் ணன் கூறும்போது, “மாநிலத்தி லேயே முதன்முறையாக முதல்வர் மீது லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்துள்ள நிலையில், அவர் பதவி விலக வேண்டும். இந்த விஷயத்தில் ஆளுநர் தலையிட வேண்டும்” என்றார்.

பின்னணி

சரிதா நாயர், அவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் இணைந்து டீம் சோலார் என்ற நிறுவனத்தை தொடங்கினர். மாநிலம் முழுவதும் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு சோலார் தகடு பதித்து தருவதாகக் கூறி, ஏராளமானோரிடம் கோடிக் கணக்கில் பணம் வசூலித்தனர். ஆனால் இது மோசடி என தெரியவந்ததால் இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிபதி சிவராஜன் தலைமையிலான கமிஷன் இதுகுறித்து விசாரித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x