Published : 05 Sep 2018 02:10 PM
Last Updated : 05 Sep 2018 02:10 PM

‘ஆன்-லைனில்’அரசியல் விளம்பரங்களுக்கு கிடுக்கிப்பிடி: கூகுள் உதவியை நாடியது தேர்தல் ஆணையம்

 தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் ஆன்-லைனில் விளம்பரம் செய்யும் போது அந்த விளம்பரத்தின் செலவுகள், நேரம், தேதி, முன்அனுமதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பகிர்ந்து கொள்ள கூகுள் , பேஸ்புக் ஆகியவற்றின் உதவியை தலைமைத் தேர்தல் ஆணையம் நாடியுள்ளது.

இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், கூகுள் நிறுவனத்தின் பிரதிநிதிகள், தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ஓ.பி.ராவத் உள்ளிட்ட பிற ஆணையர்கள் பங்கேற்று பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்தனர்.

அப்போது தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் செய்யும் விளம்பரங்கள், செலவுகள், யார் விளம்பரம் செய்வது, எந்தெந்த பகுதிகளுக்கு யாரெல்லாம் விளம்பரம் செய்கிறார்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களைக் கண்காணிக்க சிறப்பு செயல்முறையை உருவாக்கித் தருவதாக கூகுள் நிறுவனம் தேர்தல் ஆணையத்திடம் உறுதியளித்துள்ளது.

இதனால், வரும் மக்களவைத் தேர்தல் அல்லது 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆன்-லைனில் அரசியல் கட்சிகள் விளம்பரத்துக்காகச் செய்யும் செலவுகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், “ ஆன்-லைனில் தேர்தல் விளம்பரம் செய்வது குறித்து அரசியல் கட்சிகளை கண்காணிக்கக் கூகுள் நிறுவனத்தின் உதவியை நாடினோம். இது தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

அப்போது ஆன்-லைனில் எந்தெந்த அரசியல் கட்சிகள் விளம்பரம் செய்கின்றன, தேர்தல் விளம்பரம் செய்ய தேர்தல் ஆணையத்திடம் சான்றுபெற்றுள்ளதா, செலவுகள் உள்ளிட்ட விவரங்களைக் கூகுள் நிறுவனம் கண்காணித்து தகவல் தெரிவிப்பதாக கூறியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், தேர்தல் விளம்பரங்களைக் கண்காணிப்பதற்காகவே சிறப்புதொழில்நுட்பத்தையும், செயல்முறையையும் உருவாக்கித் தருவதாக உறுதியளித்துள்ளது. இதன் மூலம் தேர்தல் பார்வையாளர்கள் அரசியல் கட்சிகள் ஆன்-லைன் விளம்பரத்துக்காக எவ்வளவு செலவு செய்துள்ளன என்பதை அறிய முடியும்.

அதுமட்டுமல்லாமல், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்பாளர்களை அரசியல் கட்சிகள்அறிவித்தவுடன், வேட்பாளர்கள் தங்களின் சமூகஊடகங்களின் கணக்குகள் பேஸ்புக், ட்விட்டர், இன்ட்ராகிராம், வாட்ஸ்அப் போன்ற அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும். இதன் மூலம் வேட்பாளர்கள் செய்யும் பிரச்சாரங்களும் கண்காணிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, பேஸ்புக் நிறுவனத்துடனும் தேர்தல் ஆணையம் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. அப்போது, தேர்தல் விளம்பரங்களைக் கண்காணிப்பதற்காகவே சிறப்பு செயல்முறைகளை உருவாக்கித் தருவதாக உறுதியளித்துள்ளது. குறிப்பாக அரசியல் கட்சிகள், வேட்பாளர் குறித்த போலியான செய்திகள், தேர்தல் விளம்பரச் செலவுகள் ஆகியவை குறித்த தகவல்களைத் தேர்தல் ஆணையத்திடம் பேஸ்புக் நிறுவனமும் பகிர்ந்து கொள்ள இருக்கிறது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின் போது, பேஸ்புக் நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த உண்மை கண்டறியும் நிறுவனமான பூம் லைவுடன் சேர்ந்து ஆய்வில் ஈடுபட்டது. அப்போது, தேர்தலின் போது செய்யப்பட்ட பிரச்சாரங்களில் 50 சதவீதம் போலியானவை எனத் தெரியவந்தது. அது குறித்து பேஸ்புக் நிறுவனம் தேர்தல் ஆணையத்திடம் அறிக்கையும் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x